2023 உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து
2023 உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து (2023 Uttarakhand tunnel rescue) 12 நவம்பர் 2023 அன்று இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில், சில்க்யாரா என்ற இடத்தில் நிகழ்ந்தது. உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா வளைவு - பர்கோட் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி அதிகாலை 5:30 மணியளவில் இடிந்து விழுந்தது.[1][2] இவ்விபத்தினால் 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கினர். மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் காவல்துறையினரால் வழிநடத்தப்பட்டன.[3][4] சுரங்க கட்டுமானம்சில்க்யாரா வளைவு - பார்கோட் சுரங்கப்பாதையானது நவயுகா பாெறியியல் கட்டுமான நிறுவனத்தின் (NECL) [5] மூலம் நான்கு இந்து புனிதத் தலங்களை இணைக்கும் சார் தாம் என்ற அனைத்து வானிலைகளிலும் இயங்கக்கூடிய சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகிறது. இது தேசிய நெடுஞ்சாலை 134இன் யமுனோத்ரி முனையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை யமுனோத்ரியை தெற்கு முனையில் உள்ள தராசுவுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை பயணத் தொலைவை சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 mi) குறைக்கும்.[6][7] இந்தச் சுரங்கப்பாதையின் திட்டமிடப்பட்டுள்ள நீளமானது 4.5 கிலோமீட்டர்கள் (2.8 mi) ஆகும்.[8] விபத்து12 நவம்பர் 2023 அன்று காலை 5:30 மணியளவில், உத்தரகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் மேற்புறம் இடிந்து சுரங்கத்திற்குள் பாறைகள் விழுந்ததில், சுமார் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.[9] இந்தச் சம்பவத்திற்கான சாத்தியமான காரணங்களை கண்டறிய மாநில அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் புவியியலாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.[10] மீட்பு முயற்சிகள்மீட்புப் பணிகளின் போது இரண்டு சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.[11] நவம்பர் 17 அன்று விரிசல் மற்றும் சத்தம் கேட்டதையடுத்து சுரங்கப்பாதையில் உள்ள பாறைக் கற்களைத் துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. முதன்மை சுரங்கப்பாதைக்கு இணையாகவும், அதை ஒட்டியும் மாற்று அணுகல் சுரங்கப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டன. மற்றொரு அணுகுமுறையாக, சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள நிலப்பரப்பின் மேற்பரப்பில் இருந்து கீழே துளையிடுவதை உள்ளடக்கியிருந்தது.[12] இச்செயல்பாட்டின் போது மூன்று குழாய்களால் துளையிடப்பட்டன, ஒன்று ஆக்ஸிஜனை வழங்குவதற்காகவும், இரண்டாவது உலர் உணவுக்கான பாதையை ஏற்படுத்துவதற்காகவும், மூன்றாம் துளை 6 அங்குலங்கள் (15 cm) அகலமான குழாய் சூடான உணவை வழங்கவும் உள்நோக்கியியல் கருவியை செருகவும் பயன்படுத்தப்பட்டது.[13] நவம்பர் 21 அன்று, அகன்ற குழாயைப் பயன்படுத்தி சிக்கிய தொழிலாளர்களுடன் தகவல் தொடர்பு மற்றும் உணவு வழங்குதல் பணிகளுக்காக நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உலர் பழங்கள் மற்றும் பிற உணவுகள் (அரிசி மற்றும் பருப்பு கொண்ட சூடான உணவுகள் உட்பட), ஆக்ஸிஜன் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சிக்கியவர்களுக்கு வழங்க குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஒரு சிறிய நெகிழ்வு புகைப்படக்கருவி படம்பிடிக்கவும் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில், அதே போல் சுரங்கப்பாதையில் உள்ள இடிபாடுகள் வழியாக துளையிட்டு, மூன்று செங்குத்து தண்டுகளை துளையிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[14][15][16] 2018இல் தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையில் இருந்து மாணவர்களை விடுவித்த குழுவை மீட்புக் குழு தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.[17] விசாரணைசுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கான காரணத்தை விசாரிக்க ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவை உத்தரகாண்ட் மாநில அரசு அமைத்து உத்தரவிட்டது. உத்தரகாண்ட் நிலச்சரிவு தணிப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் இயக்குநர் தலைமையிலான இக்குழு, சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.[18] தொழிலாளர்கள் மீட்பு28 நவம்பர் அன்று, 'ரேட்-ஹோல்' சுரங்கப்பாதை மீட்புக்குழுவினர், இயந்திரங்களின் துணையின்றி மனித முயற்சியினால், மீதமிருந்த சுரங்கப்பாதையின் தொலைவை உடைத்துத் திறந்து தொழிலாளர்கள் சிக்கியிருந்த இடத்தை அடைந்தனர்.[19] மீட்புக் குழுவினர் சிக்கியிருந்த தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவராக தூக்குப்படுக்கையில் வைத்து வெளியில் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். இந்தச் செயல்முறை சில மணி நேரங்கள் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.[20] சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் 2023 நவம்பர் மாதம் 28.11.2023 அன்று இரவு 08.38 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் தாம் இலுவாங் குகை மீட்பின் போது மாணவர்களை மீட்ட குழுவினருடன் தொடர்பிலிருந்தனர்.[21] பாராட்டுஇந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் வெற்றிகரமாக மீட்கப்பட்டதற்கு மீட்பு குழுவினருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர். தொழிலாளர்கள் நலமடைய வாழ்த்தினார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்ட ஏராளமான நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர்.[22][23][24] இந்தியாவுக்கான ஆத்திரேலிய உயர் ஸ்தானிகர் பிலிப் கிரீன், சிக்கிய 41 தொழிலாளர்களை வெளியேற்றிய இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலியப் பேராசிரியரும் சுரங்கப்பாதை நிபுணருமான அர்னால்ட் திக்சு வழங்கிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும், மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.[25] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia