அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி
அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி(Hashimoto's thyroiditis) அல்லது நாள்பட்ட நிணநீர்ச் சுரப்பியழற்சி அல்லது அஷிமோட்டோ நோய் என்று அழைக்கப்படுவது ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதில் கேடயச் சுரப்பி படிப்படியாக அழிக்கப்படுகின்றது. [6] ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். காலப்போக்கில் சுரப்பியழற்சி நோய் பெரிதாகி, வலியற்ற முன்கழுத்துக் கழலையை உருவாக்குகிறது. சிலர் இறுதியில் எடை அதிகரிப்பு, சோர்வு, மலச்சிக்கல், மனச்சோர்வு ,பொது வலிகள் ஆகியவற்றுடன் தைராய்டு சுரப்புக் குறை நோய்க்கு ஆளாகுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவாக தைராய்டு அளவு சுருங்குகிறது. [1] இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களில் தைராய்டு நினநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் அடங்கும்.[2] அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குடும்பத்தில் பரம்பரையாக இந்நோய் இருத்தலும் மற்றொரு வகையான தன்னுடல் தாக்க நோயைக் கொண்டிருத்தலும் அஷிமோடோவின் கேடயச் சுரப்பியழற்சிநோயின் ஆபத்துக் காரணிகளாகும்.[1] பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர், தைராக்சின் போன்ற கேடயச் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர், போன்ற மற்றும் தைராய்டிற்கு எதிரான தான் எதிர்மங்கள் ஆகியவற்றுக்கான இரத்த பரிசோதனைகள் மூலம் நோய் கண்டறிதல் உறுதிப்படுத்தப்படுகிறது. இதே போன்ற அறிகுறிகளை உருவாக்கக்கூடிய பிறவற்றுள் தன்னுடல் தாக்குநோயான கிரேவ்ஸ் நோய் மற்றும் முன்கழுத்துக் கழலை நோய் ஆகியவை அடங்கும். அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி பொதுவாக லெவோதைராக்ஸினுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. [1] [7] தைராய்டு சுரப்புக் குறை இல்லாவிட்டால், சிலர் சிகிச்சையை பரிந்துரைக்க மாட்டார்கள், மற்றவர்கள் முன்கழுத்துக் கழலையின் அளவைக் குறைக்க முயற்சிக்கலாம். [8] பாதிக்கப்பட்டவர்கள், அதிக அளவு அயோடின் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்; இருப்பினும், குறிப்பாக கர்ப்ப காலத்தில் போதுமான அயோடின் தேவைப்படுகிறது. முன்கழுத்துக் கழலைக்கு சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சை மிகவும் அரிதாகவே தேவைப்படுகிறது. அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி சுமார் ஐந்து விழுக்காடு மக்களை அவர்களின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பாதிக்கிறது. [4] இது பொதுவாக 30 முதல் 50 வயதிற்குள் தொடங்குகிறது . மேலும் ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் பொதுவானது. [1] [3] தற்காலத்தில் நோயின் விகிதங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. [5] இதை முதன்முதலில் ஜப்பானிய மருத்துவர் அகாரு அஷிமோடோ 1912 இல் விவரித்தார். [9] 1957 ஆம் ஆண்டில் இது ஒரு தன்னுடல் தாக்க நோய்க் கோளாறாக அங்கீகரிக்கப்பட்டது. [10] அறிகுறிகள்அஷிமோட்டோவின் கேடயச் சுரப்பியழற்சி அல்லது ஹாஷிமோடோ நோய்க்கு பல அறிகுறிகள் உள்ளன. மிகவும் பொதுவான அறிகுறிகளில் சோர்வு, எடை அதிகரிப்பு, வெளிர் அல்லது வீங்கிய முகம், குளிர், மூட்டு மற்றும் தசை வலி, மலச்சிக்கல், உலர்ந்த மற்றும் மெல்லிய முடி, மாதவிடாய் மிகைப்பு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய், மனச்சோர்வு, பீதி கோளாறு, இதய துடிப்புக் குறைதல், மலட்டுத்தன்மை மற்றும் கர்ப்பத்தை பராமரிப்பதில் சிக்கல்கள் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். [11] அஷிமோட்டோ நோய் ஆண்களை விட பெண்களை ஏழு மடங்கு அதிகமாகத் தாக்குகிறது. இது பதின்ம வயதினர் மற்றும் இளம் பெண்களுக்கு ஏற்படலாம், ஆனால் பொதுவாக நடுத்தர வயதில், குறிப்பாக ஆண்களுக்கு இது தோன்றும். ஹாஷிமோடோ நோயை உருவாக்கும் நபர்கள் பெரும்பாலும் கேடயச் சுரப்பியழற்சி அல்லது பிற தன்னுடல் தாக்குநோயைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர், மேலும் சில சமயங்களில் பிற தன்னுடல் தாக்குநோய்களையும் கொண்டிருக்கிறார்கள். [12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia