ஆங்காங்
ஒங்கொங் அல்லது ஆங்காங் அல்லது ஹாங்காங் (Hong Kong Special Administrative Region, HKSAR, சீன மொழியில்: 香港) பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் [1] இரண்டில் ஒன்றானது.[2] மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஒரு நாடு இரு கொள்கைகள்[3] எனும் அடிப்படையில் பிரித்தானிய சட்டத் திட்டங்களுக்கு அமைவாக ஒங்கொங் தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களுடன் கூடிய பொருளாதார நிர்வாகச் சட்டங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஒங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், பாதை விரிவாக்க அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒங்கொங் டொலர் 9 வது அதிக புழக்கத்தில் உள்ள நாணயமாகும்.[4] மக்கள் தொகையைப் பொருத்த மட்டில் உலகில் மக்கள் நெரிசல் கூடிய இடங்களில் ஒங்கொங்கும் ஒன்றாகும்.[5] ஒங்கொங் உலகின் அதி வளர்ச்சியடைந்த பொருளாதார மையங்களில் ஒன்றாகும்.[6] இன்று பார்க்கும் இடங்களெல்லாம் வானுயர் கட்டிடங்கள், மாடி மனைகள், அதிவேகப் பாதைகள், திகைக்கவைக்கும் மேம்பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இது "ஆசியாவின் நகரம்" (Asia's City) என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. எல்லைகள்இதன் எல்லைகளாக முத்து ஆற்றின் முகத்துவாரத்தை கிழக்காகவும், தென்சீனாவின் குவாங்தொங் பெருநிலப்பரப்பை வடக்காகவும், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தென் சீனக்கடலையும், 61 கிலோ மீட்டர் தொலைவில் மக்காவையும் அமைவிடமாக கொண்டுள்ளது. நிலப்பரப்புஒங்கொங் மூன்று பிரதானப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஒங்கொங் தீவு பகுதியாகும். இதன் நிலப்பரப்பளவு 81 சதுர கிலோ மீட்டர்களாகும். இரண்டாவது கவ்லூண் கற்ப நிலப்பரப்பாகும். இதன் பரப்பளவு 47 சதுர கிலோ மீட்டர்களாகும். மூன்றாவது புதிய கட்டுப்பாட்டு பகுதி (New Territory) உடன் 262 குட்டித் தீவுகளையும் உள்ளடக்கியப் நிலப்பரப்பாகும். இதன் பரப்பளவு 976 சதுர கிலோ மீட்டர்களாகும். இம்மூன்று நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய ஒங்கொங்கின் மொத்த நிலப்பரப்பளவு 1104 சதுரக் கிலோ மீட்டர்களாகும். இது சீனப் பெருநாட்டின் 10000/1 நில அளவை விட குறைவானதாகும். இருப்பினும் செயற்கையாய் கடலை நிரப்பி மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், தீவுகள் சமதரையாக்கப்பட்டு பெருநிலத்தோடு இணைத்து மேற்கொள்ளும் திட்டங்கள் போன்றவற்றால் ஒங்கொங்கின் நிலப்பரப்பளவு காலத்திற்கு காலம் கூடி வருகின்றது. ஒங்கொங் பெயர்![]() "ஒங்கொங்" எனும் பெயர் கண்டோனீஸ் அல்லது ஹக்கா (Cantonese or Hakka) எனும் சீன மொழிகளில் இருந்தே தோன்றியதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் "ஒங்கொங்" எனும் ஒலிப்புக்கான கண்டனீஸ் மொழியின் அர்த்தம் "நறுமணம் வீசும் துறைமுகம்" (Fragrant Harbour) எனப்பதாகும். இப்பெயர் எவ்வாறு தோன்றியது என்றால், 1841 ஆம் ஆண்டுக்கு முன்பு தற்போது எபர்டீன் (Aberdeen) என்றழைக்கப்படும் இடத்திற்கும், அப் லெய் சாவ் தீவுக்கும் (Ap Lei Chau) இடையில் இருந்த சிறிய குடா பகுதியையே ஒங்கொங் என்று அப்பகுதிகளில் வசித்து வந்த மீனவர்களால் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டதாம். சீனாவின் முத்து ஆற்று நீர் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியிலேயே இத்தீவுகள் அமைந்துள்ளன. எனவே அக்கடல் பரப்பின் நீர் சுவையானதாகவும் நறுமணமுடையதாகவும் இருப்பதால் அங்குவாழ் மீனவர்கள் அக்கடல் குடாப் பகுதியை "நறுமணம் வீசும் துறைமுகம்" எனும் பொருள்பட ஒங்கொங் என்று அழைத்தனராம். இக்குடா கடல் பரப்பு மீனவர்களின் ஓடத்துறைமுகமாகவும் இருந்துள்ளது. இந்த சிறிய குடா பகுதியே பிரித்தானிய கப்பற் படையினருக்கும் இத்தீவின் பூர்வக் குடிகளான மீனவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளது. அதன் பின் பிரித்தானியரின் ஆட்சியின் பொழுதே "ஒங்கொங்" எனும் பெயர் முழு தீவுப்பகுதியையும் குறிக்கும் பெயராக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டது. வரலாறுவரலாற்று ரீதியாக ஒங்கொங் ஒரு மீனவக் கிராமமாகும். இன்று ஒங்கொங் என்றழைக்கப்படும் ஒங்கொங் தீவும் கவ்லூன் தீபகற்ப நிலப்பரப்பும், இவற்றைச் சூழ அமைந்துள்ள சிறுத் தீவுகளும் அன்று மலைத்தொடர்களாகவும், மலைக் குன்றுகளாகவுமே காட்சியளித்துள்ளன. இம்மலைத் தொடர்களின் அடிவாரத்தில் ஆங்காங்கே சில மீனவக்குடில்கள் இருந்துள்ளன. சில உப்பு உற்பத்தி வயல்களும் காணப்பட்டுள்ளன.[7] இருப்பினும், இப்பகுதிகளின் கற்காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[8] இந்த மீனவக் கிராமங்கள் முதலாம் அபின் போரைத் தொடர்ந்து 1841 சனவரி 1 ஆம் நாள் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து சீனாவுடன் கைச்சாத்திடப்பட்ட நாஞ்சிங் உடன்படிக்கை இன் பின்னரே ஒங்கொங் எனும் பெயர் இத்தீவுக்கான பெயராக வரலாற்றில் பதியப்பட்டது.[9] அதனை தொடர்ந்து 1842 ஆகஸ்ட் 29 ஆம் நாள் ஒங்கொங் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிமுகப்படுத்திக்கொண்டது. முதலாம் அபின் போர்![]() 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். பிரித்தானிய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. அதாவது தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மாகாணத்தில் அமைந்திருந்த கெண்டன் துறைமுகத்தூடாகவே தமது வணிகத்தொடர்பைக் கொண்டிருந்தது. சீனாவில் இருந்து பெருமளவிலான தேயிலை ஏற்றுமதியை செய்து வந்தது. அதற்கு ஈடாக கைக்கடிகாரம், மணிக்கூடு போன்ற ஆடம்பரப் பொருட்களை பிரித்தானியா சீனாவிற்குள் இறக்குமதி செய்தது. இந்த வணிகத்தில் சீனாவின் கைமேலோங்கி இருந்தது. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே தேயிலையைச் சீனாவிடம் இருந்து கடன் வாங்கும் நிலை பிரித்தானியாவிற்கு தோன்றியது. இதனை ஈடு செய்யும் முகமாக இந்தி்யாவில் வங்காளப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த ஒரு வகைப் போதைப் பொருளான அபினை சட்டவிரோதமான முறையில் சீனாவில் இறக்குமதி செய்தது. இந்த சட்டவிரோதமான கடத்தல் ஊடான போதைப்பொருள் வணிகத்தில் பிரித்தானியா அதிக இலாபம் ஈட்டத்தொடங்கியது. இதனால் சீனப் பொதுமக்கள் இப்போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் பல சமூக சீர்கேடுகளும் எழத்தொடங்கின. அப்பொழுது சீனாவில் குவிங் வம்ச பேரரசு ஆட்சியில் இருந்தது. இத்தகைய சட்டவிரோதமானதும் பொது மக்களுக்கும் தீங்கானதுமான பிரித்தானியாவின் கல்லக்கடத்தல் போதைப்பொருள் வணிகத்தை குவிங் சீனப்பேரரசு அதிகார பூர்வமாகத் தடைசெய்தது. இருப்பினும் குவிங் பேரரசின் தலமையகம் பெய்ஜிங்கில் இருந்தது. பெய்ஜிங்கில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தென்சீன நிலப்பரப்பான குவாங்தோவ் மாகாணத்தில் நடைபெற்று வந்த இச்சட்டவிரோதப் போதைப் பொருள் வணிகத்தை குவிங் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்பொழுது லின் சீசு (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின் குவங்தோவ் மாகாணத்தின் சிறப்பு ஆளுநராகப் (special commissioner to Guangzhou) பதவியேற்றார். இவர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைபெற்றுவரும் போதைப்பொருள் வணிககத்தை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேவேளை பிரித்தானியா தமது நாட்டிற்குள் போதைப்பொருளான அபின் புகைத்தலை தடை செய்திருந்தது. பிரித்தானியா தமது நாட்டில் அபின் போதைப்பொருள் பாவனையை தடை செய்துகொண்டு, அதனை சீனாவிற்குள் சட்டவிரோதமாக விணியோகித்து அப்பாவி பொதுமக்கள் அழிவுக்குள்ளாவதைக் கண்டு லின் சீசு ஆத்திரமுற்றார். இந்தச் சட்டவிரோத அபின் வணிகத்தை உடனடியாக நிறுத்தும்படி விக்டோறியா மகாராணிக்கு லின் சீசு எழுத்து மூலமாக அறிவித்தார்.[10] குவிங் வம்ச சீனப்பேரரசும் மீண்டும் மீண்டும் தடை உத்தரவுகலை பிரப்பித்துக்கொண்டே இருந்தது. ஆனால், இவை எவற்றையும் பிரித்தானியா ஒரு பொருட்டாகக்கொள்ளவில்லை. சீனப்பேரரசின் தடை உத்தரவுகளை மீறி தொடர்ந்து போதைப்பொருள் இறக்குமதியை தொடர்ந்த வண்ணமே இருந்தது. அதேவேளை குவாங்தோவ் சிறப்பு ஆளுநரான லின் சீசு இப்போதைப்பொருள் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கி தண்டித்தார். இப்போதைப்பொருள் ஏற்படுத்தும் வன்மையான தாக்கத்தினையும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் மக்களுக்கு அறிவித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பிரித்தானியா போதைப்பொருள் கல்லக்கடத்தல் வணிகம் மேலும் மேலோங்கிக்கொண்டே போனது. இதனால் லின் சீசு வின் நடவடிக்கைகளும் கடுமையானது. குவாங்தொவ் மாகாணத்தில் களஞ்சியப்படுத்திருந்த அபின்களை எல்லாம் தேடி தேடி அழிக்கத் தொடங்கினார். அபின் வணிகத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அபின்கள் ஏற்றி வந்த கப்பல்களும் தாக்கப்பட்டது. அத்துடன் வெளிநாட்டு வணிகம் அனைத்தையும் இடைநிறுத்தினார். இதற்கு எதிராகவும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காகவும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுக்கு எதிரான போரில் இறங்கியது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும். 1984 இல் சீனாவும் பிரித்தானியாவும் ஏற்படுத்திக் கொண்ட ஓர் உடன்படிக்கையின் படி 1997 யூலை 1 ஆம் நாள் ஒங்கொங் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. ஆனால் 1997 ஆம் ஆண்டு ஒங்கொங் சீனாவிடம் மீள்கையளிக்கப்பட்டாலும் பிரித்தானியா மற்றும் சீனா இரண்டு நாடுகளும் கைசாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி 1997 ஆம் ஆண்டில் இருந்து 2047ஆம் வரை பிரித்தானிய ஆட்சி அமைப்புக்கு அமைவான முதலாளித்துவ கொள்கை நடைமுறையில் இருக்கும் என்பதும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டங்கள்![]() ஒங்கொங் நிலப்பரப்பை மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 18 மாவட்டங்கள் உள்ளன. புதிய கட்டுப்பாட்டுப் பகுதி (New Territories)
கவ்லூண் மற்றும் புதிய கவ்லூண் பகுதி
ஒங்கொங் தீவுப் பகுதி
மக்கள் தொகை![]() ஒங்கொங்கின் மக்கள் தொகை 2007 ம் ஆண்டின் கணிப்பின் படி 6.94 மில்லியன்களாகும். இதில் 95% வீதமானோர் சீனர்களாவர். 5% வீதமானோரே ஏனையோர். பெரும்பான்மையானோரால் பேசப்படும் மொழி கண்டோனிசு (சீனம்). தவிர ஆங்கிலமும் ஓரளவு பேசப்படுகின்றது. தற்போது மண்டரின் (சீனம்) மொழியும் பேசப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. தவிர அமெரிக்கர், கனடியர், ஆங்கிலேயர், ஐரோப்பியர், யப்பானியர், இந்தியர், பாக்கிஸ்தானியர், நேபாள, பிலிப்பின், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து என பல்லினத்தவரும் உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் தமிழர்களும் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். தவிர ஒங்கொங்கிற்கு வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் ஒங்கொங் தொழிலாளர்களாக இங்கே வந்து சேவை செய்பவர்கள் கிட்டத்தட்ட 275,000 உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 140.000 (53.11% வீதம்) பிலிப்பின்களாகும். 120,000 (43.15% வீதம்) இந்தோனிசியா பெண்களாகும். தாய்லாந்து 4,000 பேர் வரையில் இருக்கலாம். கிட்டத்தட்ட 3,500 இலங்கையர்கள், கிட்டத்தட்ட 3,500 இந்தியர்கள். ஏனைய நாட்டுப் பணிபெண்கள் 4,000 வரையிருக்கும். சமயம்கன்பியூனிசம் மற்றும் பௌத்தம் ஆகியன பிரதான மதங்களாக இருக்கின்றது. அடுத்து கிறித்தவம் இருக்கின்றது. இஸ்லாம் மதத்தினரும் ஓரளவு இருக்கின்றனர். இந்து மத வழிபாட்டுத் தலங்கள் இரண்டு உள்ளது. ஆட்சிமுறைசீன-பிரித்தானிய கூட்டறிக்கையின்படியும், ஒரு நாடு இரண்டு முறைகள் எனும் கொள்கையின் அடிப்படையிலும் ஒங்கொங்கிற்கு சிறப்பு நிர்வாகப் பிரதேசம் என்னும் அதிகூடிய தன்னாட்சி அதிகாரம் மக்கள் சீனக் குடியரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதன்படு ஒங்கொங் (ஐக்கிய இராச்சிய ஆட்சி முறைபடி அமைந்த)தனித்துவமான அரசியல், ஆட்சி அதிகாரங்கள், சட்டத்திட்டங்கள், காவல் துறை, நாணயம், சுங்கக்கொள்கை, குடிவரவு குடியகல்வு சட்டங்கள், வெளிநாட்டு பிரதிநிதித்துவம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும் இதன் வெளிவிவகார கொள்கைகள், எல்லை பாதுகாப்பு போன்றன மத்திய சீன அரசிடமே உள்ளது. குடிநீர், மின்சாரம் போன்றனவும் சீனாவினூடாகவே கிடைக்கின்றது. கூட்டறிக்கைப்படி, ஒங்கொங், குறைந்தது 50 ஆண்டுகளுக்காவது, முதலாளித்துவப் பொருளாதார முறையையும், மக்களுடைய உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றையும் உறுதிப்படுத்துவதற்கு ஒத்துக்கொள்ளப் பட்டுள்ளது. நிறைவேற்று தலைமை அதிகாரியாக டொனால்ட் செங் அவர்களே கடந்த வருடங்களாக இருக்கின்றார். (சீனம்) கண்டனிஸ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஆட்சி மொழிகளாக உள்ளன. தரையமைவுஒங்கொங் தரையமைவு இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளுமாகும். சமதரைப் பிரதேசங்கள் இங்கு இருக்கவில்லை. ஆனால் மலைகளை செதுக்கி செதுக்கி கடல் பரப்பை நிரப்பியும் சில மலைகளையே தரைமட்டமாக்கியுமே ஒங்கொங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது. தற்போதும் சென்ரல் பிரதேசத்தில் வர்த்தகக் கட்டிடம் முன்பாக கடலின் ஒரு பெரு நிலப்பரப்பை செயற்கையாக நிரப்பி அபிவிருத்திகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம். கவ்லூண் பிரதேசத்தில் சிம் சா சுயி இல் அமைந்திருந்த சிறிய மலைக்குன்றும் சமதரையாக்கப் பட்டு அங்கே புதிய கட்டிடம் ஒன்று எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த மலைகளின் நிலவமைப்பைப் பார்ப்போமானால் ஒரு சில அடிகள் மட்டுமே மண் இருப்பதை அவதானிக்கலாம். அதன் கீழ் ஒரு வித வெண்கற் பாறைகளாகவே உள்ளன. இவ்வாறு பாறைகளான தரை அமைப்பே கட்டிடங்களின் அத்திவாரத்திற்கு ஏற்புடையதாக இருக்கின்றது எனலாம். கடலுக்கடி பகுதிகளும் கற்பாறைகளாகவே இருப்பதை சில வரைப்படங்களூடாக அறியக்கூடியதாக இருக்கின்றது. பல வானலாவிகளின் அத்திவாரங்கள் இருக்கத்தக்க 50 – 80 அடி நிலத்திற்கடியில் நீண்ட தொடரூந்து பாதைகள் அமைப்பதற்கும் இதனாலேயே ஏற்புடையதாக இருப்பதாகக் கொள்ளலாம். கட்டிடக்கலை![]() ஒங்கொங்கில் 7,558 வானளாவிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் உலகில் அதிக வானளாவிகளைக் கொண்டுள்ள நகரமாக இது விளங்குகிறது. ஒங்கொங் தீவில் துறைமுகக் கரைப் பகுதிகளிலிருந்து உட்பகுதியில் அமைந்துள்ள மலைச்சரிவுகள் வரையுள்ள சராசரித் தூரம் 1.3 கிலோமீட்டர்கள் மட்டுமே. இவ்வாறான இடவசதிக் குறைவினால் நகரம் விரிவடைவதற்கான நிலப்பற்றாக்குறை காரணமாக ஒங்கொங்கில் அடர்த்தி கூடிய உயரமான அலுவலகக் கட்டிடங்களும், குடியிருப்புக்கான கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. இதன் காரணமாக உலகின் 100 மிக அதிக உயரம் கொண்ட குடியிருப்புக்கான கட்டிடங்களில் 38 கட்டிடங்கள் ஒங்கொங்கில் உள்ளன. அத்துடன், 14 மாடிகள் உயரத்துக்கு மேல் வாழுகின்ற அல்லது வேலை செய்பவர்களின் எண்ணிக்கை உலகில் வேறிடங்களில் உள்ளதைக் காட்டிலும் ஒங்கொங்கில் அதிகமாக உள்ளது. நிலத்தேவைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, பழைய கட்டிடங்கள் ஒங்கொங்கில் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால், இந்நகரம் தற்காலக் கட்டிடக்கலையின் மையமாக விளங்குகிறது. ஒங்கொங்கின் மிக உயரமான கட்டிடம், 2 அனைத்துலக நிதி மையம் ஆகும். இதன் உயரம் 415 மீட்டர் (1,360 அடி). எச்.எஸ்.பி.சி தலைமையகக் கட்டிடம், முக்கோண வடிவிலான சென்ட்ரல் பிளாசா, இரவு நேரப் பல நிற ஒளிக் காட்சிகளுடன் கூடியத சென்டர், புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான ஐ. எம். பேய் என்பவர் வடிவமைத்த சீன வங்கிக் கோபுரம் என்பன இங்குள்ள பிற குறிப்பிடத்தக்க கட்டிடங்கள். மீந்திருக்கும் வரலாற்று மதிப்பு கொண்ட கட்டிடங்களில், சிம் சா சுயி மணிக்கூட்டுக் கோபுரம் (Tsim Sha Tsui Clock Tower), மத்திய காவல் நிலையம், மதிலால் சூழப்பட்டிருந்த கோலூன் நகரின் எஞ்சிய பகுதிகள் என்பன குறிப்பிடத்தக்கவை. பல புதிய கட்டுமானத் திட்டங்கள் உள்ளன. இவற்றுள், புதிய அரசாங்கக் கட்டிடங்கள், கடற்கரை மீள்மேம்பாட்டுத் திட்டம், மேற்குக் கோலூனில் கட்டப்படவுள்ள பல கட்டிடங்கள் என்பன இவற்றுள் அடங்கும். மேலும் பல உயரமான கட்டிடங்கள் கோலூனில், விக்டோரியா துறைமுகத்திம் மறுபக்கத்தில் கட்டப்படவுள்ளன. காய் டாக் வானூர்தி நிலையம் 1998 ல் மூடப்பட்டதன் பின், கட்டிடங்களுக்கான உயரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன. போக்குவரத்து![]() ஒங்கொங், தனியார் மற்றும் பொதுப் போக்கு வரத்து வசதிகளை உள்ளடக்கிய மிகவும் வளர்ச்சியடைந்த போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. 90%க்கு மேற்பட்ட அன்றாடப் பயணங்கள் (11 மில்லியன்) பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இது உலகிலேயே மிக அதிகமான அளவு ஆகும். "அக்டோப்பஸ் அட்டை" எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாத் தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும், வண்டித் தரிப்பிடங்களிலும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தமுடியும். நகரின் விரைவுப் போக்குவரத்துச் சேவையான எம்.டி.ஆர் 150 நிலையங்களைக் கொண்டு அன்றாடம் 3.4 மில்லியன் மக்களுக்குச் சேவை புரிகிறது. 1904 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் ஒரு டிராம் வண்டிச் சேவை, ஒங்கொங்கின் வடக்குப் பகுதிகளில் பயன்படுகின்றது. இரண்டு தட்டு டிராம்களுடன் இயங்கும் டிராம் சேவை உலகில் இது ஒன்றே. ஒங்கொங் பிரதான போக்குவரத்து சேவைகளில் உலகின் அதி நவீன சிறந்த போக்குவரத்து சேவைகளில் ஒன்றான நிலத்தடி சுரங்கப்பாதை தொடரூந்துச் சேவை செயல்படுகின்றது. மற்றும் பேருந்து, சிற்றூந்து, ட்ரேம் வண்டி, மகிழூந்துச் சேவை, ஸ்டார் பெரி (வள்ளம்) படகு சேவை, தீவுகளுக்கான அதிவேக படகு சேவை, சொகுசு படகு சேவை, போன்றன சேவையில் உள்ளன.
தமிழர்கள்ஒங்கொங்கில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தமிழர்கள் நிரந்தர வதிவுரிமை பெற்று வசிப்பவர்கள் இருக்கலாம் என கருதப்படுகின்றது. சரியான ஒரு கணக்கீடு இல்லை. ஒங்கொங் தமிழர்கள் என்போர் தமிழ்நாடு, இலங்கை, பர்மா, வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு வந்தவர்களாவர். இவர்களால் உருவாக்கப்பட்ட ஆங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வருகின்றது. இதனைத் தவிர இளம் இந்திய நண்பர்கள் குழு, தமிழ் மொழி வகுப்புகள் போன்றனவும் உள்ளன. இவற்றைத் தவிர தொழில் வாய்ப்புக்காக ஒங்கொங் வந்துள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் 100 முதல் 150 பேர்வரை இருக்கின்றனர். ஒங்கொங் யுஎன்எச்சிஆரில் அரசியல் புகலிடம் கோரிக்கைகளை முன்வைத்து ஒங்கொங் வந்த இலங்கைத் தமிழர்கள் யுன் லோங் பகுதிகளில் செறிந்து வாழ்கின்றனர். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia