ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்
ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் (1740–1748), போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம், ஓட்டோமான் பேரரசு ஆகியவை தவிர்ந்த ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் ஈடுபட்டிருந்த ஒரு போராகும். சலிக்குச் சட்டத்தின் படி பெண்களுக்கு அரசுரிமை இல்லையாதலால், ஆசுத்திரியாவின் மரியா தெரேசா, அப்சுபர்க்கின் அரசுரிமைக்குத் தகுதியற்றவர் என்னும் காரணத்தை முன்வைத்து இப்போர் தொடங்கியது. எனினும் உண்மையில் பிரசியாவும், பிரான்சும் அப்சு அர்க்கின் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டன. பிரான்சின் எதிரிகளான பெரிய பிரித்தானியாவும், இடச்சுக் குடியரசும் ஆசுத்திரியாவுக்குச் சார்பாக இருந்தன. இவற்றுடன் சார்டினிய இராச்சியமும், சக்சனியும் சேர்ந்துகொண்டன. பிரான்சும், பிரசியாவும் பவேரியாவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. ஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்துடன் 1748 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது. பின்னணி1740 ஆம் ஆண்டில் ஆறாம் சார்லசு இறந்த பின்னர் அவரது மகள் மரியா தெரேசா, அங்கேரி, குரோசியா, பொகேமியா ஆகியவற்றின் அரசியாகவும், ஆசுத்திரியாவின் ஆர்ச்டியூச்சசு (Archduchess) ஆகவும், பார்மாவின் டியூச்சசு (Duchess) ஆகவும் ஆனார். ஆறாம் சார்லசு புனித ரோமப் பேரரசர் ஆகவும் இருந்தார். ஆனால், இப்பதவி பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லையாதலால், மரியா தெரசா புனித ரோமப் பேரரசியாக முயலவில்லை. மரியா தெரசா பரம்பரையாக வரும் அப்சுபர்க் பகுதிகளின் அரசியாவதும், அவரது கணவர் லோரைனின் டியூக் முதலாம் பிரான்சிசு புனித ரோமப் பேரரசர் ஆவது என்பதுமே திட்டமாக இருந்தது. ஒரு பெண் அப்சுபர்க்கின் ஆட்சிக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது. இதனால், ஆறாம் சார்லசு பெரும்பாலான செருமன் நாடுகளை இணங்கவைத்து நடைமுறைக்கேற்ற இசைவாணை, 1713 என்பதை உருவாக்கினார். 1713ன் நடைமுறைக்கேற்ற இசைவாணையை மீறி, பிரசியாவின் அரசர் இரண்டாம் பிரடெரிக், 1537 ஆம் ஆண்டின் பிரீக் ஒப்பந்தத்தைச் சாக்காகக் கொண்டு 1740 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி சிலேசியாவைக் கைப்பற்றிக் கொண்டபோது சிக்கல்கள் தொடங்கின. ஒரு பெண் என்ற வகையில் மரியா தெரேசா பலம் குறைந்தவராகக் கருதப்பட்டு, பவேரியாவின் சார்லசு ஆல்பர்ட் போன்ற வேறு சிலரும் தமது பரம்பரை உரிமையைக் காட்டி ஆட்சியுரிமைக்குப் போட்டியிட்டனர். 1740ன் சிலேசியப் படையெடுப்பு![]() ![]() 1740 ஆம் ஆண்டில் சிலேசியா ஒரு சிறிய ஆனால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்துலக வல்லரசாக வளர்ந்துவரும் ஒரு நாடாக இருந்தது. 1733-1735 ஆண்டுக் காலப்பகுதியில் விட்டுவிட்டு இடம்பெற்ற போலிய வாரிசுரிமைப் போரே இதன் அண்மைக்காலப் போர் அனுபவமாக இருந்தது. இதனால் இது ஐரோப்பாவில் இருந்த சிறிய படைகளுள் ஓரளவு பெரிய படை என்ற கணிப்பே பிரசியப் படைகளைக் குறித்து இருந்தது. இவ்வாறான பல செருமன் நாடுகள் இருந்தன. மிகச் சிலரே இப்படைகள், ஆசுத்திரியா, பிரான்சு ஆகியவற்றின் நவீனமானதும் பலம் கொண்டனவுமான படைகளை எதிர் கொள்ளக்கூடும் எனக் கருதியிருப்பர். ஆனால் பிரசிய அரசர் முதலாம் பிரெடெரிக் வில்லியம் தனது படைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாகப் பயிற்சி அளித்திருந்தார். ஆசுத்திரிய வீரரொருவர் மூன்று சூடு சுடுவதற்குள் ஒரு பிரசியக் காலாட்படை வீரர் ஐந்து சூடுகள் சுட்டுவிடுவார் எனச் சொல்லுமளவுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன. பிரசியாவின் குதிரைப்படையும், பீரங்கிப்படையும் ஒப்பீட்டளவில் குறைவான செயற்றிறன் கொண்டவையாக இருந்தாலும் அவை கூடிய தரம் கொண்டவையாக இருந்தன. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிழக்குப் பகுதியின் போலந்தின் சிறந்த குதிரைப் படையையும், சுவீடனின் பீரங்கிப்படையையும் பிரசியப் படைகள் எதிர்கொண்டிருந்தன. போர்களினால் இடைஞ்சலுக்கு உள்ளாகாத தொழில்முறைப் படைகள் ஆயத்தமாக இருந்தது பிரெடெரிக்கின் படைகளுக்குத் தொடக்கத்தில் சாதகமாக இருந்தது. இதனால், பிரசியப் படைகள் எதிர்ப்பு அதிகம் இல்லாமலே சிலேசியாவைக் கைப்பற்றிக் கொண்டன. எனினும் பிரசியா டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே ஆடெர் ஆற்றங்கரையில் படைகளைக் குவுவிக்கத் தொடங்கிவிட்டதுடன், டிசம்பர் 16ல் போர் அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே ஆற்றைக் கடந்து சிலேசியாவுக்குள் நுழைந்து விட்டன. அப் பகுதிகளில் குறைவான ஆசுத்திரியப் படைகளே இருந்தன. இதனால் பெரும்பாலான இப்படைகள் பொகேமியா, மோரேவியா போன்ற மலைப்பகுதி முன்னணி நிலைகளுக்குப் பின்வாங்கின. ஒழுங்கமைவான பிரசியப் படைகள் குளூகோ, பிரீக், நீசே போன்ற வலுவான இடங்கள் உட்பட சிலேசியா முழுவதையும் விரைவிலேயே கைப்பற்றினர். இந்த் ஒரு நடவடிக்கை மூலம் பிரசியா தனது மக்கள்தொகையை இரட்டிப்பு ஆக்கியதுடன், மக்களை நல்ல முறையில் நடத்தியதன்மூலம் தொழிற்றுறை உற்பத்தியிலும் பெரும் நன்மைகளைப் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில் "தேசியம்" என்பது இன்று உள்ளதுபோல் முக்கியமான ஒரு காரணியாக இருக்கவில்லை. உருவாகிவரும் கருத்துருவின் தொடக்க நிலையிலேயே இருந்தது. சமூகத்தின் இந்த அரசியல்மயப்படாத நிலை பிரசியாவுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது. நூற்பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia