இந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கை, 2011யை நடுவண் அரசின் இரயில்வே அமைச்சர் மம்தா பானர்சி 25, பெப்ரவரி 2011 அன்று தாக்கல் செய்தார்.
வரலாறு
இந்திய இரயில்வேயின் நிதிநிலை அறிக்கையில் புதிய இரயில்களை அறிமுகப்படுத்தல், பழைய வழித்தடங்களை மாற்றியமைத்தல், நவீனமயமாக்கல் மற்றும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் போன்றவை அறிவிக்கப்படுகின்றன. இரயில்வேயின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப் படுகின்றன. இரயில்வே அறிக்கையானது மக்களவையில் பெரும்பான்மையோரால் ஆதரிக்கப் படவேண்டும். மாநிலங்களவை ஆலோசனைகள் வழங்குமெனினும் அவை திட்டங்களைக் கட்டுப்படுத்தாது. அரசின் மற்ற வரவு செலவுகளைப் போலவே இரயில்வேயின் வருமானத்திற்கும் தணிக்கைக் கட்டுப்பாடு உள்ளது. இந்திய இரயில்வேயின் லாப, நட்டங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது.
1924-ல் ஏற்படுத்தப்பட்ட புதிய மரபின் படி இரயில்வே நிதி அறிக்கையானது பொது நிதியறிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே மத்திய இரயில்வே அமைச்சரால் ஃபிப்ரவரி 26-ம் தேதி வாக்கில் சமர்ப்பிக்கப் படுகிறது. இவ்வறிக்கை பாராளுமன்றத்தில் தனியாக வழங்கப்பட்டாலும் இதன் வரவு செலவுகளும் பொது நிதியறிக்கையில் சேர்க்கப் படுகின்றன. இது அரசின் ஒரு பகுதியாக இருப்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. மேலும் இது இரயில்வேயின் எதிர்காலத் திட்டங்களையும் உரைக்கிறது.
இரயில்வேயின் கொள்கை உருவாக்கம் மற்றும் கட்டுப்பாடு போன்றன இரயில்வே வாரியத்தால் செயல்படுத்தப் படுகின்றன. இவ்வாரியமானது தலைவர், நிதி ஆணையர், பொறியியல், இயந்திரவியல், மற்றும் பல துறைகளில் செயல் உறுப்பினர்களால் இயக்கப்படுகிறது.
2011 இரயில்வே நிதியறிக்கையின் முக்கிய அங்கங்கள் [1]:
பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை
57,630 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்படுகிறது
9583 கோடி ரூபாய் புதிய தண்டவாளங்கள் அமைக்க ஒதுக்கப்படுகிறது
2011-201 ம் ஆண்டு 1300 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவிற்கு இரட்டை வழிச் சாலையும், 1017 கட்டை தூரம் மீட்டர் கேஜிலிருந்து அகன்ற இரயில் பாதை மாற்றமும் திட்டமிடப்பட்டுள்ளது.
56 புதிய அதிவிரைவு இரயில்களும், 3 புதிய சகாப்தி இரயில்களும், 9 துரந்தோ இரயில்களும் அறிவிக்கப்பட்டது
இணையம் மூலம் பயணச்சீட்டு பதிவு செய்ய புதிய இணையதளம் தொடங்கப்படும். இணைய முன்பதிவு கட்டணம் குளிர்சாதன பெட்டிக்கு 10 ரூபாயும் மற்ற பெட்டிகளுக்கு 5 ரூபாயாகவும் குறைக்கப்படும்
இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் "கோ இந்தியா" என்ற பல்முனை அட்டைகள் வழங்கப்படும்
இந்தியா முழுவதும் 236 ரயில் நிலையங்கள் மாதிரி இரயில் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்
மும்பை புறநகருக்கு 47 புதிய இரயில்களும், கொல்கத்தா புறநகருக்கு 50 புதிய இரயில்களும் அறிவிக்கப்பட்டது
இரயில்களை 160-200 கட்டை தூரத்திற்கு இயக்குவதற்கு சோதனைகள் மேற்கொள்ளப்படும்
ஆண்டுமுழுவதும் விபத்தில்லாமல் இயங்கும் மாநிலங்களுக்கு இரண்டு புதிய திட்டங்களும், இரண்டு புதிய இரயில்களும் சலுகைகளாக அளிக்கப்படும்
பெண் முதியவர்களுக்கான தகுதி அகவை 60இலிருந்து 58ஆகக் குறைக்கப்படுகிறது.
இரயில்வே ஊழியர்களுக்கான மருத்துவ வசதிகள் அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்
டி பணிப்பிரிவு ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மாதத்திற்கு 1200 ரூபாயாக உயர்த்தப்படும்
இரயில்வே ஊழியர்களின் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் 20 கூடுதலாக அமைக்கப்படும்
1.75 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். நிரப்பப்படாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் காலியிடங்கள் நிரப்பப்படும். மார்ச் 2011 ல் 16,000 முன்னாள் இராணுவத்தினர் இரயில்வேயில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
புதிய விளையாட்டிற்கான பிரிவுகள் தொடங்கப்படும்
2011-2012 ஐ பசுமை ஆண்டாக இரயில்வே அறிவித்துள்ளது
சரக்கு கையாளும் திறன் 993 மெட்ரிக் டன் என்றும் பயணிகள் போக்குவரத்து 6.4 சதவிகிதமாகவும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது
மொத்த வருவாய் 1,06,239 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முதலாக ஒருலட்சம் கோடி ரூபாயை தாண்டியது