இரணஜன்னி
இரணஜன்னி அல்லது ஏற்புவலி (tetanus அல்லது lockjaw), என்பது கிளாஸ்ட்ரீடியம் டெட்டானியால் ஏற்படும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது தசைப் பிடிப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது. மிகவும் பொதுவான வகைகளில், பிடிப்புகள் தாடையில் தொடங்கி, பின்னர் உடலின் மற்றப் பகுதிகளுக்கு முன்னேறும். ஒவ்வொரு பிடிப்பும் பொதுவாக சில நிமிடங்கள் நீடிக்கும். பிடிப்புகள் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு அடிக்கடி ஏற்படும்.[1] சில பிடிப்புகள் எலும்புகளை உடைக்கும் அளவுக்கு கடுமையானதாக இருக்கலாம்.[2] இந்நோயின் பிற அறிகுறிகளில் காய்ச்சல், வியர்வை, தலைவலி, விழுங்குவதில் சிரமம், உயர் இரத்த அழுத்தம், வேகமான இதயத் துடிப்பு ஆகியன அடங்கும். நோய்த்தொற்றுக்குப் பிறகு பொதுவாக 3 முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். குணமடைய பல மாதங்கள் ஆகலாம், ஆனால் கிட்டத்தட்ட 10% தொற்றுகளில் இறப்பு ஏற்படுகிறது.[1] C. டெட்டானி பொதுவாக மண், உமிழ்நீர், தூசி மற்றும் உரம் ஆகியவற்றில் காணப்படுகிறது. அசுத்தமான பொருளால் ஏற்படும் வெட்டு அல்லது துளையிடல் காயம் போன்ற தோலில் ஏற்படும் உடைவு மூலம் பாக்டீரியா பொதுவாக உடலுக்குள் நுழைகிறது.[1][3] இவை சாதாரண தசைச் சுருக்கங்களில் தலையிடும் நச்சுக்களை உருவாக்குகின்றன.[4] நோயறிதல் தற்போதுள்ள அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோய் மக்களிடையே பரவுவதில்லை.[1] தடுப்பு மருந்து மூலம் இந்நோயைத் தடுக்கலாம். கணிசமான காயம் உள்ளவர்களுக்கும், மூன்று தடவைகளுக்குக் குறைவாகத் தடுப்பூசி பெற்றவர்களுக்கும், தடுப்பூசியுடன், தசைவிறைப்பு எதிர்ப்புரதம் இரண்டும் பரிந்துரைக்கப்படுகிறது. காயம் சுத்தம் செய்யப்படு, இறந்த திசுக்கள் அகற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு, தசைவிறைப்பு எதிர்ப்புரதம், அல்லது, அது கிடைக்கவில்லை என்றால், நரம்பு வழி எதிர்ப்புப்புரதம் (IVIG) பயன்படுத்தப்படுகிறது.[1] பிடிப்புகளைக் கட்டுப்படுத்தத் தசை தளர்த்திகள் பயன்படுத்தப்படலாம். பாதிக்கப்பட்ட நபரின் சுவாசம் பாதிக்கப்பட்டால் இயந்திரக் காற்றோட்டம் தேவைப்படலாம்.[4] டெட்டனசு உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுகிறது, ஆனால் மண்ணில் அதிகக் கரிம உள்ளடக்கம் உள்ள வெப்ப, மற்றும் ஈரமான காலநிலையில் இது அடிக்கடி நிகழ்கிறது.[1] 2015 இல், உலகளவில் ஏறத்தாழ 209,000 நோய்த்தொற்றுகளும், 59,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன.[5][6] இது 1990 இல் 356,000 இறப்புகளாகக் குறைந்துள்ளது.[7] அமெரிக்காவில், ஆண்டுக்கு ஏறத்தாழ 30 பேர் பாதிக்கப்படுகின்றனர், இவை அனைத்தும் தடுப்பூசி போடப்படாதவர்கள் ஆவர்.[8] கிமு 5 ஆம் நூற்றாண்டில் இப்போக்கிரட்டீசு இந்நோயின் ஆரம்ப விளக்கத்தைத் தந்துள்ளார். 1884 ஆம் ஆண்டு தூரின் பல்கலைக்கழகத்தில் அன்டோனியோ கார்லி, சியார்ச்சியோ ராட்டோன் ஆகியோரால் நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டது, இதற்கான தடுப்பூசி 1924 இல் உருவாக்கப்பட்டது.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்விக்கிப்பீடியாவின் சுகாதாரக் கட்டுரைகளை மருத்துவ விக்கிப்பீடியா செயலி மூலம் இணைய-தொடர்பில்லா நிலையில் பார்க்கலாம்.
|
Portal di Ensiklopedia Dunia