இலங்கைப் பொருளாதார நெருக்கடி (2019–2024)
இலங்கைப் பொருளாதார நெருக்கடி என்பது இலங்கை நாட்டில் 2019 இல் தொடங்கிய பொருளாதார நெருக்கடியாகும்.[7] 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும்.[7] 2010 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கடுமையாக உயர்ந்தது. 2019 இல் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88% ஐ எட்டியது.[8] கோவியட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தொடக்கமானது நெருக்கடியை விரைவு படுத்தியது. மேலும் 2021 ஆம் ஆண்டில், வெளிநாட்டுக் கடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101% ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் 2022 இலங்கைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கையின் அரசாங்கம், தொடர்ச்சியாக அடுக்கடுக்கான கொள்கைப் பிழைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, இலங்கைக்குப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2019 சனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை ஈட்டி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றியது. அதன்பிறகு அதன் பொருளாதாரக் கொள்கையில் பல தவறுகளைச் செய்தது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதன் ஜனரஞ்சக திட்டங்களின் ஒரு பகுதியாக தற்போதைய அரசாங்கமானது வருவாய் மற்றும் நிதிக் கொள்கைகளில் பெரும் வரிக் குறைப்புகளைச் செய்தது. வரி குறைப்பு காரணமாக, பட்ஜெட் பற்றாக்குறையானது 2020 இல் 5% இல் இருந்த நிலையில் 2022 இல் 15% ஆக உயர்ந்தது. மேலும் மோசமான நிதிக் கொள்கைகளை அமுல்படுத்தியதும் இலங்கைக்கு ஒரு பேரழிவு நிலைமையை ஏற்படுத்தியது. இலங்கையில் சாதாரண குடிமக்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் சமூக அமைதியின்மை மற்றும் எதிர்ப்புகள் ஏற்படக் காரணமாயிற்று. 2022 சூலையில் இலங்கை அரசு திருப்பி செலுத்த வேண்டிய கடன்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் உட்பட, $7 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் நிலையில், 2022 மார்ச் நிலவரப்படி இலங்கை அரசிடம் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவனி 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது, போதுமானதாக இருக்காது என்பதால், இலங்கை திவால்நிலையின் விளிம்பில் உள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2022 பெப்ரவரியில் தேசிய பணவீக்க விகிதம் 17.5% ஆக அதிகரித்தது.[9] 2022 ஆம் ஆண்டு சூன் மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவாணியை முடியாமல் போனதாகவும் கூறினார்.[10] 2022 செப்டம்பரில், ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தண்டனை பெறாததன் விளைவாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறியது.[11] இலங்கை நிதி அமைச்சகத்தின்படி, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2023 பிப்ரவரியில் 23.5% அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது, இது 400 மில்லியன் அமெரிக்க டாலர் கூடியுள்ளதைக் குறிக்கிறது.[12] இலங்கை நிதி திவால்நிலையின் விளிம்பில் உள்ளது. மேலும் அதன் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்துதலை நிறுத்தியுள்ளது.[13] பின்னணிநீண்ட கால திட்டமிடலுக்குப் பதிலாக தற்காலிக தீர்வுகள் மற்றும் குறுகிய கால திட்டமிடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசியல்வாதிகளின் தொலைநோக்கு பார்வையின்மையினால் இலங்கை இத்தகைய அழிவுகரமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை தங்களின் சுயநலத்துக்கு பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்ட அரசியல்வாதிகளின் செயல்பாடுகளும் இதன் காரணங்களில் ஒன்றாக இருந்தது.[14] 2021 இல், இலங்கை அரசாங்கம் 73 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.[15] அண்டை நாடுகளான சார்க் நாடுகளிடம் இருந்து இலங்கை பண உதவி கேட்பது குறித்து இலங்கையின் உள்ளூர் செய்தித்தாள்கள் கேலிச்சித்திரங்களை வெளியிட்டன.[16] இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இந்த நெருக்கடியானது நிதிப் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ஒப்புக்கொண்டார்.[17] கடன் நெருக்கடிக்கு சில வர்ணனையாளர்கள் சீனாவைக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், ஆத்திரேலிய லோவி நிறுவனம், 2021 ஏப்ரல் நிலவரப்படி சீனாவுக்குக் செலுத்த வேண்டிய கடனானது வெளிநாட்டுக் கடன்களில் 10% மட்டுமே என்பதால், இலங்கை "சீனக் கடன் பொறியில் சிக்கவில்லை" என்று சுட்டிக்காட்டியது. மேலும், இலங்கையின் பெரும்பாலான வெளிநாட்டுக் கடன் பங்குகள் சர்வதேச மூலதனச் சந்தைகளிருந்து பெறப்பட்டன, இது 47% ஆக இருந்தது. அடுத்து 22% வளர்ச்சி வங்கிகளில் பெறப்பட்டவை. அதனைத் தொடர்ந்து யப்பான் இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10% ஐக் கொண்டுள்ளது.[18] 2020 ஆம் ஆண்டில், நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், இலங்கையின் தற்போதைய நிதி ஆதாரங்கள் 2021 ஆம் ஆண்டில் 4.0 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட கடன் சேவைத் தேவைகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று கூறியது. இந்தப் பொருளாதார சீக்கல்களைத் தீர்க்க சரியான பொருளாதார திட்டங்களைத் தீட்டுவதற்கு மாறாக, மேலும் மேலும் பணத்தாள்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டதால் பணவீக்கம் அதிகரித்து நாடு கடனில் மேலும் மூழ்கி வருகிறது.[19] கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, இலங்கைக்கு நம்பகமான நிதித் திட்டம் மற்றும் நாணயக் கொள்கை தேவை என்றும், கடனைத் திருப்பிச் செலுத்த ஏதுவாக வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், வட்டி விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதிகளை அனுமதிப்பது போன்றவை வரி வருவாய் மீண்டும் கருவூலத்திற்குச் செல்ல ஏதுவாகும் என்றும் பெல்வெதர் குறிப்பிட்டார். உள்நாட்டுக் கடன்களைக் குறைப்பதன் மூலம் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக வட்டி விகிதங்களை உயர்த்துவது மற்றும் டாலர்களை ஈட்டுவது சாத்தியம் என்றாலும், அதை பல ஆண்டுகள் தொடர்ந்து செய்வது நடைமுறையில் கடினம். கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரிப்பதை முதலீட்டாளர்கள் கண்டால், நம்பிக்கை மீண்டும் வரலாம், ஆனால் இது தற்போதைய சித்தாந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யலாம் அல்லது வேலை செய்யாமலும் போகலாம்.[20] கோவியட்-19 பெருந்தொற்றால் இலங்கையில் செழிப்பாக இருந்த சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட பாதிப்பானது, நாட்டின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு போதுமான தேசிய வருவாயை ஈட்ட முடியாமல் போனதாக காரணம் கூறப்பட்டுள்ளது.[21] உலக வங்கியின் கூற்றுப்படி, "இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அதன் மக்களின் வாழ்க்கையின் மீது கோவியட்-19 தொற்றுநோயின் தாக்கம், சவால்கள் பெருமளவில் இருந்தாலும், 2021 இல் பொருளாதாரம் மீண்டு வரும்." மீட்சிக்கான சாதகமான அறிகுறிகள் ஏற்கனவே காணப்படுகின்றன, சுயசார்பை கட்டியெழுப்ப சரியான வரிவிதிப்பு விகிதங்கள் மற்றும் எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கடன்களை அதிகம் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பது மிகவும் ஊக்குவிக்கப்படவேண்டும். கடன் நெருக்கடியின் போது வேலை இழந்தவர்களுக்கு உதவுவதற்கான தற்போதைய சமூகப் பாதுகாப்பு முயற்சிகள் பயனுள்ளவையாகக் கருதப்படுகின்றன. தற்போதைய கடன் நெருக்கடியில் இருந்து இலங்கைப் பொருளாதாரத்தை மீட்பதற்கு முறையான வரி விதிப்புக்கு மேலதிகமாக ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி அவசியமாகும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்ததுடன், சரியான முறையில் செயல்பட்டால் இலங்கை முழுமையான நிதி மீட்சியை அடையும் என கூறப்பட்டது.[22] 2022 சனவரியில், சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, அதன் கடன் சுமையை மறுசீரமைக்குமாறு சீனாவிடம் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறியது.[23] 2022 ஏப்ரலில் பணவீக்க நெருக்கடியைக் குறைக்க, அஜித் நிவார்ட் கப்ராலுக்குப் பதிலாக, இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 17வது ஆளுநராக டாக்டர். பி. நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டார்.[24] வேளாண் நெருக்கடி2021 இல் இலங்கையானது "100% இயற்கை வேளாண்மை " என்ற திட்டத்தைத் துவக்கியது. அதன்படி 2021 சூனில் இருந்து நாட்டில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு முழுவதும் தடை விதித்து உத்தரவு இடப்பட்டது. இந்த திட்டத்தை அதன் ஆலோசகர் வந்தனா சிவா வரவேற்றார்.[25] ஆனால் தேயிலை தொழிலை மையமாக கொண்ட தேசிய நாணயத்தின் மதிப்பிழப்பினால் ஏற்படும் நிதி நெருக்கடி [26] உட்பட வேளாண் உற்பத்தியில் ஏற்படும் சரிவு பற்றி எச்சரித்த அறிவியல் மற்றும் வேளாண் சமூகத்தின் விமர்சனங்களை அரசு புறக்கணித்தது.[26][27][28][29][30] இதன் தொடர்ச்சியாக 2021 செப்டம்பருக்குள், இலங்கை வேளாண் உற்பத்தியில் 50% வரை பெரும் வீழ்ச்சியையும் உணவுப் பற்றாக்குறையையும் சந்தித்தது. தேயிலை தொழில்துறையின் நிலைமை சிக்கலானதாக கூறப்பட்டது. வேளாண் துறையில் விளைச்சல் பாதியாக ஆனது.[31] 2021 செப்டம்பரில், அரசாங்கம் பொருளாதார அவசரநிலையை அறிவித்தது, ஏனெனில் இலங்கை பணமதிப்பு வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு விளைவாக பணவீக்கம் அதிகரித்தது, கோவியட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையினால் நாட்டின் வருமானம் மேலும் குறைத்தது ஆகியவற்றால் நிலைமையை மேலும் மோசமாகியது.[32] இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விற்பனை தடை செய்யப்பட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் வருமானத்தை இழந்தும் உணவுப் பொருட்கள் கிடைக்காமலும் தவிக்கும் நிலைக்கு ஆளாயினர்.[33][34][35] இந்த நடவடிக்கைகளில் சிலவற்றை அரசாங்கம் ரத்து செய்தது, ஆனால் யூரியாவை இறக்குமதி செய்வதற்கான தடை அப்படியே நீடித்துள்ளது.[36] அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் கட்டுபாட்டை இலங்கை கொண்டுவந்துள்ளது.[34] 2021 நவம்பரில், உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் இயற்கை வேளாண் திட்டத்திற்கு எதிராக வாரக்கணக்கில் போராட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து, உலகின் முதல் இயற்கை விவசாய நாடாகும் திட்டத்தை இலங்கை கைவிட்டது.[37] வளர்ச்சிபணவீக்க விகிதம் அதிகரித்துவருவது குறித்த கவலைகள் இருந்தபோதிலும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் 2022 சனவரியில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவையில்லை என்றார். மேலும் இலங்கையால் அதன் வெளிநாட்டுக் கடன்கள் உள்ளிட்ட கடனைத் தீர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.[38] 2022 பெப்ரவரி வரை, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.36 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால் 2022 சூலை 2022க்குள் திருப்பிச் செலுத்த வேண்டியதாக $1 பில்லியன் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் உட்பட, $7 பில்லியன் வெளிநாட்டுக் கடன் தொகையை செலுத்தவேண்டிய பொறுப்பை இலங்கை கொண்டுள்ளது.[39] கடன் மறுசீரமைப்புக்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு உலகளாவிய சட்ட நிறுவனத்தை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை மதிப்பிடுவதற்கும் மீளாய்வு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று 2021 திசம்பர் 7 முதல் 20 திசம்பர் வரை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது.[40] 2022 பெப்ரவரி 25 ஆம் நாள் நடந்த வருடாந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கையின் பொருளாதாரம் பற்றி கலந்துரையாடியது.[41] 2022 பெப்ரவரி 25 வரை, இலங்கையின் பொதுக் கடன் சுமை தாங்க முடியாதது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது மேலும் பணத் தேவைக்காக பணத்தை அச்சிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்தை எச்சரித்தது. அதேசமயம் பெருந்தொற்றின் தாக்கத்தைத் தணிக்க அதன் தடுப்பூசி இயக்கத்தை பாராட்டியது.[42] ஆலோசனை மதிப்பீட்டின் பிரிவு IV ஐ தொகுத்து இலங்கையின் நிலவும் பொருளாதார பேரிடரை சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டது.[43][44] மேலும், 2022 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதாரம் 2.6 வீதத்தால் வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 2022 மார்ச் 7, நிலவரப்படி, வங்கி நடைமுறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு தேசிய நாணயத்தின் மதிப்பை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. அமெரிக்க டாலருக்கு எதிராக 229.99 என குறைத்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.[45][46] இலங்கை பணத்தின் மதிப்பை குறைக்க எடுத்த முடிவானது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கான பாரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.[47][48] இலங்கை ரூபாயின் மதிப்பு குறைக்கப்படதையடுத்து 2022 மார்ச் அன்று இலங்கை பங்குசந்தையில் அனைத்து பங்குகளின் விலையும் 4 சதவிகிதம் குறைந்தது. இதனால் இலங்கைப் பங்குகள் 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தன. மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக குறைந்தபட்சம் 2022 மார்ச் இறுதி வரை அனைத்து தெரு விளக்குகளையும் அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.[49] இருப்பினும், இந்த நடவடிக்கை பெண் தொழிலாளர்களின் பொருளாதார பங்கேற்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற பணியிடங்களில் இரவுப் பணியில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தியது.[50] இலங்கையும் பல தசாப்தங்களாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது மேலும் அந்நிய செலவாணி கையிறுப்பு குறைந்து வருவதால் மின்சார நுகர்வு, எரிபொருள் நுகர்வு, சமையல் எரிவாயு ஆகியவற்றில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. குழப்பமான அந்நிய செலவாணி கையிருப்பு நெருக்கடியால் ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் பிரதிபலிப்பாக கிட்டத்தட்ட 1000 அடுமனைகள் மூடப்பட்டுள்ளன.[51] அன்னிய செலவாணி கையிருப்பு நெருக்கடி காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடினால் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் முன் கடந்த சில மாதங்களாக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.[52] உலகளாவில் எண்ணெய் விலை அதிகரித்த நிகழ்வானது, இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கியது, ஏனெனில் அந்திய செலவாணி அதிகமாக வெளியேறும் அபாயம் மட்டுமல்லாது எரிபொருள்களை இறக்குமதி செய்ய நாடு முன்பை விட அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது.[53][54] பால் மா, கோழி இறைச்சி, எரிவாயு, பிற உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக சாதாரண இலங்கை குடிகள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத வேளையில், நெடுஞ்சாலைகள், அதிவிரைவு நெடுஞ்சாலைகள், சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு போன்ற வெள்ளை யானைத் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் கோட்டாபய அரசாங்கம் தேவையற்ற அக்கறையுடன் செயல்படுவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.[55][56] மின்சாரத்தை சேமிப்பதற்காக, நாடு முழுவதும் அதிகாரிகளால் தினசரி மின்வெட்டு அமல்படுத்தபட்டுள்ளது, மின்வெட்டானது ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் முதல் ஏழரை மணி நேரம் வரை செயல்படுத்தபடுகிறது. பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் மின்வெட்டு காரணமாக, தேர்வில் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாக்கப்படுவதால், இணைய வழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விக்கு இந்த மின்வெட்டுகள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.[57][58] உருசிய-உக்ரேனிய போருக்கான ஆயத்தம் காரணமாக உக்ரைனுக்கும் உருசியாவிற்கும் இடையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் எதிரொலியாக இலங்கையில் ஏற்கனவே மந்தமான பொருளாதார நிலைமை உணரப்பட்டது.[59] 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நாட்டின் பொருளாதார பேரழிவை மேலும் மோசமாக்கியுள்ளது, ஏனெனில் உருசியா தேயிலை ஏற்றுமதியில் இலங்கைக்கு இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது மேலும் இலங்கையின் சுற்றுலாத் துறை இந்த இரண்டு நாடுகளையும் பெரிதும் நம்பியுள்ளது.[60] இதன் விளைவாக, உக்ரேனிய நெருக்கடியானது இலங்கையின் பொருளாதார மீட்சிப் பாதைக்கு தடங்கலாக ஆனதுடன், தேயிலை மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய இரண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2022 மார்ச்சில், இலங்கையில் உள்ள பல பள்ளிகளில் நடத்தபடவேண்டிய தேர்வுகள், நாடு முழுவதும் நிலவும் காகிதத் தட்டுப்பாடு காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[61][62] 2022 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி நாடளாவிலான பருவத் தேர்வுகள் நடைபெறவிருந்தன, ஆனால் அச்சுத் தாள் மற்றும் மை நாடா ஆகியவற்றின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, இயல்பு நிலை திரும்பும் வரை தேர்வுகளை முழுமையாக ரத்து செய்வது அல்லது ஒத்திவைப்பது என முடிவெடுக்கப்பட்டது. 22 மார்ச் 2022 அன்று, அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் மக்களிடையே பதற்றத்தைத் தடுக்கவும், எரிபொருள் விநியோகத்தை எளிதாக்கவும் பல்வேறு எரிவாயு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ராணுவ வீரர்களை நிறுத்துமாறு அரசாங்கம் இராணுவத்திற்கு உத்தரவிட்டது.[63][64] அதிக வெப்பம் காரணமாக மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்றதால் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.[65] எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் விசையுந்தில் பயணித்த ஒருவர் தானி ஒட்டுநரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.[66] சுற்றுலாத்துறையில் பாதிப்பு2022 மார்ச்சில், ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா நாடுகள் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தமது நாட்டு சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தன.[67] பின் விளைவுகள்எதிர்ப்புகள்![]() பொருளாதார விசயத்தில் அரசாங்கம் தவறுகள் செய்துவிட்டதாக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி சார்பற்ற அமைப்புகள் தன்னெழுச்சியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புகள் என பல பகுதிகளில் நடந்தது பதிவாகியுள்ளன. எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சனாதிபதியை பதவி விலகுமாறு கோரி சனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக மார்ச் 16 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.[68] மார்ச் 30 அன்று, பண்டாரவளையில் உள்ள விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவிற்கு நாமல் ராஜபக்ச வந்தபோது, கோபமடைந்த உள்ளூர் மக்கள் எரிபொருளைக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால், நாமல் ராஜபக்ஷ அந்த இடத்தைத் தவிர்த்துவிட்டார். அதற்குப் பதிலாக மைதானத்தை மேயர் திறந்து வைத்தார்.[69] மார்ச் 31 அன்று, மிரிஹானாவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தைச் சுற்றி ஒரு பெரிய போராட்டக் குழு ஒன்று கூடி, நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டுக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.[70][71] ஆர்ப்பாட்டம் துவக்கத்தில் குடிமக்களால் தன்னிச்சையான அமைதியான போராட்டமாக இருந்தது, காவல் துறையினர் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் தாக்கினர். இதன்பிறகு போராட்டக்காரர்கள் கலகக் கட்டுப்பாட்டு படைகள் சென்ற பேருந்தை எரித்தனர். இதனையடுத்து அரசாங்கம் கொழும்பில் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.[72][73] கண்டி-கொழும்பு நெடுச்சாலையிலும் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த சாலை போராட்டக்காரர்களால் தடை செய்யப்பட்டது.[74] போராட்டக்காரர்கள் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டி அவர்களைக் கைது செய்யத் தொடங்கியது.[75] மேலும் பல பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன, அதே நேரத்தில் மகிழுந்து ஆர்ன் அடிக்கும் போராட்டங்களும் பதிவாகியுள்ளன.[76] மே 2022 இல், எதிர்ப்பாளர்களால் ராஜபக்சேக்களின் சொந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டது.[77] எதிர்ப்புகளுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச மே 2022 இல் பிரதமர் பதவியை விட்டு விலகினார், ஆனால் கோட்டாபய ராஜபக்ச சனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் எதிர்ப்புகள் தொடர்ந்தன.[78] சூலை 9 அன்று, எதிர்ப்பாளர்கள் சனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை உடைத்து கைப்பற்றினர்.[79] மேலும் கொழும்பில் உள்ள பிரதமர் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தனர். வெளிநாட்டு உதவி2022 சனவரியில், இந்தியா 400 மில்லியன் டாலர் பரிமாற்றத்துக்கான காலத்தை நீட்டித்தது மற்றும் 500 மில்லியன் டாலர் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் தீர்வையை ஒத்திவைத்தது.[80] மேலும், பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு 500 மில்லியன் டாலர் மதிப்புக்கு புதிய கடனை இந்தியா வழங்கியது.[81] 2022 மார்ச் 17 அன்று, உணவுகள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக, இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற்றது.[82][83] நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் புதுதில்லி பயணத்தின் போது, இந்தியாவும் இலங்கையும் முறைப்படி கடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து, கடன் அளிக்கப்பட்டது.[84] இதனையும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia