இந்த நாடகம் இலங்கை, ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ஒரு தமிழ் குடும்பத்தின் 1956 முதல் 2004 வரையிலான[1][2] நான்கு தலைமுறைகளைப் பற்றியது.[3][4][5] இது நாடக ஆசிரியரின் சொந்தக் குடும்பக் கதையால் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டது.[6]
இலங்கையில் வாழும் இரண்டு மொழிகளைப் பேசும் இலங்கைத் தமிழர், சிங்களவர் ஆகிய சமூகங்களின் அரசியல் மயமாக்கப்பட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்நாடகம் எழுதப்பட்டிருக்கிறது.[7]இலங்கை இனக்கலவரத்தால் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆத்திரேலியா வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தின் புகலிட வாழ்வையும், தலைமுறை இடைவெளியையும் இந்நாடகம் விளக்குகிறது. இனப்பிரச்சினையின் வரலாற்றின் பின்புலத்தில் 1956 ஆம் ஆண்டுக்கும் 2004 ஆம் ஆண்டிற்குமிடைப்பட்ட காலத்தில் தமிழ்மக்கள் மீது நிகழ்ந்த வன்கொடுமைகள், கலவரங்கள், ஏதிலிகள் உருவாக்கம், புலப்பெயர்வு, கடல் மார்க்கமான அகதிகளின் வெளியேற்றம் பற்றி நாடகம் எழுதப்பட்டிருக்கிறது.[7] இந்நாடகத்தின் பிரதியை எழுதியிருக்கும் எஸ். சக்திதரன், இலங்கை அரசியல்வாதியும் கணித அறிஞருமான சி. சுந்தரலிங்கத்தின் கொள்ளுப்பேரன் ஆவார். தமிழ் அரசியல்வாதி மாணிக்கவாசகர், அவரது மகள் ராதா, ராதாவின் கணவர் திரு, மகன் சித்தார்த்தா ஆகியோரைச்சுற்றி இக்கதை, இலங்கையையும் ஆத்திரேலியாவையும் களங்களாகக் கொண்டு நகருகிறது.[7]
மாணிக்கவாசகர் என்ற தமிழ் அரசியல்வாதியாக பிரபல இந்தியக் கன்னடத் திரைப்பட நடிகர் பிரகாஷ் பெலவாடியும், ராதாவின் கணவர் திருவாக அந்தோனிதாசன் யேசுதாசன்யும் நடித்திருக்கின்றனர்.[7] சில பாத்திரங்கள் தமிழ், சிங்களம், அரபு மொழிகளில் பேசும்போது, மேடையிலிருக்கும் சில பாத்திரங்கள் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பினை உடனுக்குடன் தருவதனால், எவரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[7]
இந்த நாடகம் முதன்முதலில் சிட்னியில் உள்ள பெல்வோர் நாடக நிறுவனம், கோ-கியூரியஸ் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டு சனவரி 2019 இல் சிட்னி திருவிழாவிற்காக சிட்னி நகர மண்டபத்தில் அரங்கேறியது.[8] பெல்வோரின் கலை இயக்குநர் ஈமன் புளாக் இதன் இயக்குநராகப் பணியாற்றினார்.[9][10] மூன்றரை மணி நேர நாடகத்தில் இலங்கை, மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, ஆத்திரேலியா, பிரான்சு முதலான ஆறு நாடுகளைச் சேர்ந்த 19 கலைஞர்கள் 50 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தனர்.[6] அதே தயாரிப்பு பின்னர் மார்ச் 2019 இல் அடிலெய்டு விழாவில் அரங்கேற்றப்பட்டது.[11][12][13] இரண்டு பருவங்களும் மண்டபம் நிறைந்த காட்சிகளாக அரங்கேறின.[6]
ஆகத்து 2022 இல், "ஐக்கிய இராச்சியம்/ஆத்திரேலியா பருவத்தின்" ஒரு பகுதியாக, பிரித்தானியப் பேரவை, ஆத்திரேலிய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் வணிகத்துறை, ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இதே நாடகக் குழு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதலில் எடின்பரோவின் ஒரு பகுதியாக ரோயல் லைசியத்திலும், பர்மிங்காம் திருவிழாவின் ஒரு பகுதியாக "பர்மிங்காம் ரெப் அரங்கிலும் மேடையேறியது.[1][14][15]டைம்சு நாளிதழ் இதற்கு ஐந்து நட்சத்திர மதிப்பாய்வை வழங்கியது,[6][16]தி கார்டியன், பைனான்சியல் டைம்ஸ் ஆகியன ஐந்தில் நான்கை வழங்கியது.[2][14]
2024 மே 31 முதல் சூன் 23 வரை, மெல்பேர்ணில் நடந்த ரைசிங் கலைத் திருவிழாவின் போது, மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் யூனியன் நாடக அரங்கில் இந்நாடகம் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் மேடையேற்றப்பட்டது.[17]
2024 சூன் 29 முதல் சூலை 28 வரை, மீண்டும் சிட்னியில், ரெட்ஃபேர்ன் கரேச்வர்க்சு அரங்கில் மேடையேறியது.[6]
விருதுகள்
சக்திதரனின் நாடகத்தின் A Counting and Cracking of Heads என்ற மூலப் பிரதி வளர்ந்து வரும் நாடக ஆசிரியர்களுக்கான 2015 நியூ சவுத் வேல்சு பிலிப் பார்சன்சு ஆய்வு ஊக்கத்தொகையின் கூட்டு வெற்றியாளரானது.[18]
சிறந்த நாடகம், சிறந்த புதிய ஆத்திரேலியப் படைப்புகள்[19], 2019 சிட்னி நாடக அரங்குகள் விருதுகளில் சிறந்த முதன்மைத் தயாரிப்பு உட்பட ஏழு 2019 ஹெல்ப்மேன் விருதுகளை இந்நாடகம் பெற்றது.[20]
2020 விக்டோரிய முதலமைச்சரின் இலக்கிய விருதுகளில் இலக்கியத்திற்கான விக்டோரியப் பரிசு, நாடகத்திற்கான பரிசு ஆகிய இரண்டையும் வென்றது, நாடக இயக்குனரான ஈமான் பிளாக் இணை எழுத்தாளராகப் பாராட்டப்பட்டார்.[21]
ஏப்ரல் 2020 இல், நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சரின் இலக்கிய விருதுகளில் நாடகம் எழுதுவதற்கான நிக் என்ரைட் பரிசை வென்றது.[22]