கரும்புள்ளிச் செவ்வண்டினம் அல்லது காக்சினெல்லிடே (Coccinellidae) என்பது வண்டுகள் வரிசையினைச் சேர்ந்த கணுக்காலி குடும்பம் ஆகும். இவை சிறிய உருவமுடைய வண்டினங்கள். ஏறத்தாழ 0.8 முதல் 18 மி.மீ வரையிலான அளவுடையவை.[3] இவை பார்ப்பதற்குப் பெரும்பாலும் சிவப்பு, செம்மஞ்சள் அல்லது மஞ்சள் நிறத்தில் அல்லது கருநீலச்சிவப்பு நிறத்தில் காணப்படும். இவ்வண்டுகளின் சிறகில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. இச்சிறுவண்டினத்தின் கால்களும், தலையும், உணர்விழைகளும் கரிய நிறத்தில் இருக்கும். இந்த நிற அமைப்புகள் சில வண்டினங்களில் பலவாறு மாறுபட்டும் காணப்படும். பொதுவாக சிவந்த சிறகில் ஏழு கரும்புள்ளிகள் இருக்கும். ஆனால் பழுப்புநிறத்தில் பன்னிரண்டு வெள்ளைப் புள்ளிகள் உள்ள வகைகளும் உள்ளன. இக்கரும்புள்ளி செவ்வண்டினங்கள் கடலிலும், வட-தென் முனைப்பகுதிகள் தவிர உலகெங்கும் காணப்படுகின்றன. இவ்வினத்தில் ஏறத்தாழ 5,000 சிற்றினங்கள் விளக்கப்பட்டுள்ளன[4]. வட அமெரிக்காவில் மட்டும் 450 சிற்றினங்கள் உள்ளன. இங்கிலாந்தில் 'லேடிபர்டு' (ladybird) என்றும், அமெரிக்காவில் "லேடிபக்கு" (ladybug) அல்லது "லேடிக்கௌ" (ladycow) என்றும் அழைக்கின்றார்கள்.
இந்த வண்டினங்கள் மாந்தரின் தோட்டங்களுக்குப் பயனுடையவை. ஏனெனில் பயிரை அழிக்கும் பூச்சிகளான செடிப்பேன் முதலானவற்றை உண்ணுகின்றன. இப்படியான பூச்சிகள், செடிப்பேன்கள் குழுவில் முட்டைகள் இட்டு, அவை வெளிவரும்பொழுது அவற்றை உண்ணும்.[5]. ஆனால் எப்பிலாக்கினினே (Epilachninae) போன்ற குடும்பத்தைச் சேர்ந்த சில செவ்வண்டின வகைகள் செடிகளின் பகுதிகளையே உண்ணும். ஆகவே இத்தகைய வகைகள் வரவேற்கத்தக்கதாகக் கருதப்படுவதில்லை.
படத்தொகுப்பு
கரும்புள்ளிச் செவ்வண்டு எறும்புப்புற்றுக்கு முன் - ஒரு நிகழ்படம்
Brumoides suturalis என்பன புள்ளிகளுக்கு மாறாக நெடுங்கோடுகள் கொண்ட செவ்வண்டுகள்( Coccinellidae).
வழக்கத்துக்கு மாறாகப் புள்ளிகள் இல்லாமல் இருக்கும் பழுப்புநிறத்தில் உள்ள இவ்வண்டினம்Rhyzobius chrysomeloides எனப்படுவது.
Coccinella transversalis, வன்சிறகு (elytra) திறந்த நிலையில். இந்தச் செவ்வண்டின் கரும்புள்ளிகள் பெரிதாகி ஒன்றோடு ஒன்று ஒட்டும்படியாக உள்ளன.
தென்னாப்பிரிக்காவில் காணப்படும் ஆர்மோனியா ஆக்ஃசிரிடிசு (Harmonia axyridis) என்னும் இனத்தைச் சேர்ந்த ஒரு வண்டு தன் கூட்டுப்புழு நிலையில் இருந்து புதிதாக வெளிப்பட்டுள்ளது. அதன் புற வன்கூடு (exoskeleton) வலிமையுற்று வளரவளர கரும்புள்ளிகள் பின்னர் தோன்றும்.
ஒரு காக்ஃசினெலிடீ (coccinellidae) தன் கூட்டுப்புழு நிலையில் இருந்து புதிதாக வெளிப்பட்டிருப்பதைப் படம் காட்டுகின்றது. இரண்டு மணி நேரத்துக்கும் நான்குமணிநேரத்துக்கும் பிறகான காட்சிகள்.
ஃகெனோசெப்பிலாக்குனா குட்டாட்டோபுசுத்தாலாத்தா (Henosepilachna guttatopustulata), )என்னும் இலைதழையுண்ணும் வண்டு. மிகப்பெரிய "கரும்புள்ளி செவ்வண்டினங்களில்" இதுவும் ஒன்று. இது உருளைக்கிழங்கின் இலை ஒன்றை உண்டுகொண்டிருக்கின்றது. இது பன்னிறமுடையது.
இந்த மஞ்சள் நிறத் தோள்களையுடைய அப்போலினசு இலிவிடிகாசிட்டர் (Apolinus lividigaster) என்னும் செவ்வண்டினம் செடிப்பேன் ஒன்றை உண்டுகொண்டிருக்கின்றது. இவ்வண்டுக்கு இரண்டே புள்ளிகள்தாம் உள்ளன. சில இனங்களில் ஒரு புள்ளியும் இல்லாமலும் இருக்கும்.
காக்ஃசினெல்லா செப்டாபுங்க்டாட்டா (Coccinella septempunctata) என்னும் ஏழுபுள்ளி வண்டு.