கிறித்தவ மரபு புனைவு![]() கிறித்தவ மரபு புனைவு (Christian Mythology) என்பது கிறித்தவ சமயத்தோடு தொடர்புடைய புனைவுகளைக் குறிக்கும். மரபு புனைவுகள் பற்றிய கிறித்தவப் பார்வைஆங்கிலத்தில் myth என அழைக்கப்படுவது கிரேக்கச் சொல்லாகிய μύθος (muthos) என்பதிலிருந்து பிறக்கிறது. பண்டைய கிரேக்க நாட்டில் அச்சொல்லுக்கு "கதை", "புனைவு", "வரைவு", "உரை" போன்ற பொருள்கள் உண்டு. கிறித்தவம் பரவிய காலத்தில் muthos என்னும் சொல் "கட்டுக்கதை", "புராணக் கதை", "கற்பனைக் கதை" என்னும் பொருள் பெறலாயிற்று.[1][2] தொடக்க காலக் கிறித்தவர்கள் தமது வரலாறுகளைப் பிற சமய, குறிப்பாகப் பேகனிய வரலாற்றுக் கதைகளிலிருந்து மாறுபட்டவையாகக் காட்டி, அப்பிற கதைகளைக் கட்டுக்கதைகளாகக் கருதினார்கள்[1][3][4] கிறித்தவ வரலாறுகளை "மரபு புனைவுகள்" என அழைப்பது சரியா என்பது பற்றி கிறித்தவ அறிஞர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. ஜோர்ஜ் ஏவ்ரி (George Every) என்பவர் கூறுகிறார்: "விவிலியத்தில் மரபு புனைவுகள் உள்ளன என்று பெரும்பான்மையான கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்து சபையினரும் ஏற்றுக்கொள்வர்."[5] மரபு புனைவுகளுக்கு எடுத்துக்காட்டாக, ஏவ்ரி கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்: விவிலியத்தின் தொடக்க நூலின் முதல் இரண்டு அதிகாரங்கள் விவரிக்கின்ற படைப்பு பற்றிய உரையை "மரபு புனைவு" என்று கருதலாம். அதுபோலவே ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவா பாம்பினால் சோதிக்கப்படலும் ஆகும்.[5] நவீன கால கிறித்தவ எழுத்தாளர் பலர் (எடுத்துக்காட்டாக, சி.எஸ். லூயிஸ் - C.S. Lewis) கிறித்தவத்தின் சில கூறுகளை, குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை "மரபு புனைவு" (myth) எனலாம் என்கின்றனர். ஆனால், அந்த மரபு புனைவு "உண்மை" என்பதையும் சி.எஸ். லூயிஸ் சுட்டிக்காட்டுகிறார்.[6][7][8] ஆனால் வேறு சில கிறித்தவ ஆசிரியர்கள், கிறித்தவ வரலாறுகளை "மரபு புனைவு" என்று அடையாளம் காட்டுவது தவறு என்கின்றனர். மரபு புனைவு என்பது பலகடவுளர் நம்பிக்கையிலிருந்து பிறந்தது என்பதே இதற்கு முக்கிய காரணம்.[9][10][11] இது மரபு புனைவு வரலாற்றுத் தன்மை கொண்டதல்ல என்று காட்டுகிறது.[9][10][12][13][14] மரபு புனைவு என்ன என்பதும் சர்ச்சைக்கு உட்பட்டிருக்கிறது.[9][10][14] மரபு புனைவு பற்றி இரு அடிப்படைக் கருத்துக்கள்கிறித்தவத்தில் மரபு புனைவு உள்ளதா, கிறித்தவம் வழங்குகின்ற செய்தியையே மரபு புனைவு எனக் கருதலாமா என்பது பற்றி எழுகின்ற சர்ச்சையில் இரு அடிப்படை நிலைப்பாடுகள் உள்ளன. 1) மரபு புனைவு என்பதை வெறுமனே "கற்பனைக் கதை", "கட்டுக்கதை" என்னும் பொருளில் கொண்டால் கிறித்தவம் மரபு புனைவு அல்ல என்றே கூற வேண்டும். 2) மரபு புனைவு என்னும் சொல்லுக்கு "வரலாற்றின் அடிப்படையிலான இறை-மனித உறவுக்குக் குறியீடுகள் வழியாக விளக்கம் வழங்கும் உரைமுறை" என்று பொருள் கொடுப்பதாக இருந்தால் கிறித்தவத்தை மரபு புனைவு என்று அழைப்பது பொருத்தமே. இவ்வாறு மரபு புனைவின் பொருளை வேறுபடுத்திப் பகுப்பாய்வு செய்யும் அறிஞர்களுள் ஒருவர் ஏவ்ரி டல்லஸ் என்பவர். அவர் கருத்துப்படி, மரபு புனைவு என்பதை அதன் ஆழ்பொருளில் பார்ப்பதாக இருந்தால், அது குறியீடுகளின் வழியாக மனிதரின் உள்ளத்திலும் இதயத்திலும் ஆழமான இறை உணர்வுகளை எழுப்பி, அவர்களைச் சமய ஈடுபாட்டின் நெறியிலும் அறநெறியிலும் பிடிப்புடையவர்களாக்கும் பண்புடையது.[15] பழைய ஏற்பாட்டில்![]() பெர்னார்ட் மெகின் (Bernard McGinn) என்னும் இறையியலார் கூற்றுப்படி, மரபு புனைவு வகையான உரைப் போக்குகள் பழைய ஏற்பாடு முழுவதிலும் காணக் கிடக்கின்றன. அங்கே அப்புனைவுகள் தொடக்க காலத்தில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நிகழும் போராட்டத்தைக் கதையாகக் கூறுகின்றன.[16] மரபு புனைவுகளை வரலாற்று அடிப்படையில் விளக்கி உரைப்பது எபிரேய விவிலியத்தின் ஒரு பண்பாகும்.[16] இதற்கு எடுத்துக்காட்டாக, மெகின் பழைய ஏற்பாட்டு நூலாகிய தானியேல் நூலில் வருகின்ற காட்சிகளைக் காட்டுகின்றார். எருசலேமின் இரண்டாம் கோவில் காலத்திய யூதர்கள் பாபிலோனியர், மேதியர், பாரசீகர், கிரேக்கர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் அனுபவித்தவற்றைப் பிற்காலத்திற்கு ஏற்றி உரைத்து, கிரேக்க அரசை ஓர் அரக்க விலங்குக்கு ஒப்பிட்டுக் காட்டுவது மேற்கு ஆசியாவில் நிலவிய ஓர் மரபு புனைவை ஒட்டி அமைந்துள்ளது. அந்த மரபு புனைவில் ஒழுங்கற்ற நிலையை உருவாக்கும் ஓர் அரக்கப்பாம்பு வருகிறது.[16] வரலாற்றை மரபு புனைவாக மாற்றும் செயலும் எபிரேய விவிலியத்தில் நிகழ்ந்துள்ளது என்று மிர்ட்சா எலியட் (Mircea Eliade) என்னும் அறிஞர் கூறுகிறார்.[17] எடுத்துக்காட்டாக, நெபுகத்னேசர் மன்னனை அரக்கப்பாம்பு போலச் சித்தரிக்கும் பகுதியில் வீரன் ஒருவன் அரக்கப்பாம்பைக் கொல்லும் கதையான மரபு புனைவு வரலாற்று நபருக்கு ஏற்றி உரைக்கப்படுகிறது (காண்க: எரேமியா 51:34)[18] பிற கலாச்சாரங்களிலிருந்து பெறப்பட்ட புனைவுகள்விவிலியத்திற்குப் புறம்பே நிலவிய மரபு புனைவுகளின் கூறுகள் பல விவிலிய வரலாற்றில் நுழைந்தன என்று நீல் ஃபோர்சித் (Neil Forsyth), ஜான் எல். மக்கென்சி (John L. McKenzie) போன்ற கத்தோலிக்க விவிலிய அறிஞர் கூறுகின்றனர்.[19][20] ![]() கத்தோலிக்க மொழிபெயர்ப்பான "புதிய அமெரிக்க விவிலியம்" (New American Bible), தொடக்க நூல் 6:1-4இல் வருகின்ற கதை பற்றிக் குறிப்பிடும்போது, அதாவது இவ்வுலகில் "அரக்கர்கள்" (பழங்காலப் பெருவீரர்கள்) தோன்றியது எவ்வாறு என்பதைக் குறிப்பிடும்போது, அக்கதையின் சில அம்சங்கள் பண்டைக்கால மரபு புனைவுகளிலிருந்து எடுக்கப்பட்டன என்று கூறுகின்றது. "தெய்வப் புதல்வர்கள்" என்னும் பெயர் மரபு புனைவுகளில் விண்ணக தெய்வங்கள் என்று வருகின்றன.[21] அதே விவிலிய மொழிபெயர்ப்பு விவிலியத்தின் திருப்பாடல்கள் நூலில் பாடல் 93க்கு அளிக்கும் விளக்கத்தில், கடவுள் பூமியை நிரப்பிவிட்ட பெருவெள்ளத்தின் இரைச்சலையும் அலைகடலின் வல்லமையையும் அடக்கி, தன் அதிகாரத்தின் கீழ் கொணர்ந்து, மனித இனம் பூவுலகில், உலர்தரையில் உறைவிடம் கொள்ள வழிவகுத்தார் என்பதில் பண்டைக்கால மரபு புனைவு காணப்படுகிறது என்று கூறுகிறது. இங்கே கடல் வலிமை மிக்க ஆளாகவும், கடவுள் கடல் அரக்கனை எதிர்க்கும் வல்லமை மிக்க வீரராகவும் உருவகிக்கப்படுகின்றனர்.[22] விவிலியத்தில் வருகின்ற லிவியத்தான் என்னும் கடல் அரக்க விலங்கு, கானான் நாட்டு மக்களிடையே நிலவிய மரபு புனைவிலிருந்து பெறப்பட்டது என்று விவிலிய அறிஞர் கருத்துத் தெரிவிக்கின்றனர். அங்கே லிவியத்தான் ஏழு தலை கொண்ட அரக்க விலங்காக விவரிக்கப்படுகிறது. ஒழுங்கின்மைக்கு உருவகமான அலைகடலைக் கடவுள் தமது வலிமைமிகு குரலால் அடக்கி, தம் ஆளுகைக்குள் கொணர்ந்து ஒழுங்கை நிலைநாட்டுகின்றார் (காண்க: திருப்பாடல்கள் 93:3).[n 1][n 2] லூசிபெர் கதைஇன்னொரு அறிஞர் கருத்துப்படி, எசாயா 14:12இல் "வைகறைப் புதல்வனாகிய விடிவெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே!" என வரும் கூற்று லூசிபெர் (Lucifer) என்னும் வானதூதன் கடவுளை எதிர்த்ததால் வானத்திலிருந்து வீழ்ச்சியுற்றான் என்னும் புனைவை உள்ளடக்கியிருக்கிறது. இப்புனைவு யூத சமய இலக்கியங்களிலும் உள்ளது. இது கானானியரிடையே நிலவிய ஒரு புனைவை எதிரொலிக்கிறது. அப்புனைவில் அத்தார் என்பவன் பாகால் தெய்வத்தின் அரியணையைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்ததற்குத் தண்டனையாக பாதாளத்தில் தள்ளப்பட்டதாக உள்ளது.[23] உலகப் படைப்பு பற்றிய புனைவுஎபிரேய விவிலியத்தில் தொடக்க நூலின் முதல் இரு அதிகாரங்கள் கடவுள் எவ்வாறு உலகைப் படைத்தார் என்பதைக் கதைபோல் எடுத்துக் கூறுகின்றன. அனைத்திற்கும் தலைவரான ஒரே கடவுள் அமைதியாக, ஒழுங்கான முறையில் ஒவ்வொன்றாக உலகையும் உலகப் பொருள்களையும் மனிதரையும் படைப்பது அங்கே கூறப்படுகிறது. இந்த விவிலியப் புனைவு அக்கால மேற்கு ஆசிய கலாச்சாரங்கள் நடுவே நிலவிய படைப்புப் புனைவுகளுக்கு மாற்றாகவும், அவற்றை விமரிசித்தும் உருவாக்கப்பட்டதாக அறிஞர் கருதுகின்றனர். எனுமா ஏலிஷ் (Enuma Elish) என்னும் பிற கலாச்சார படைப்புப் புனைவில் பூமியும் அதில் வாழும் மனிதர்களும் முன் திட்டம் இன்றி, ஏதோ தேவைக்கு ஏற்ப படைக்கப்பட்டதாக உள்ளது. ஆனால் விவிலியத்திலோ கடவுள் முன் கூட்டியே திட்டமிட்டு, முழு ஈடுபாட்டோடு உலகையும் உலகில் வாழ் மனிதர்களையும் உருவாக்குகின்றார். பிற கலாச்சாரங்களில் காணப்படும் படைப்புப் புனைவு பரபரப்பான விதத்தில், தெய்வங்களின் மனம் போன போக்கில், சடங்குமுறை போல, நாடகப் பாணியில் அமைந்திருந்தன. ஆனால் விவிலிய ஆசிரியரோ அம்முறையைப் பின்பற்றாமல், கடவுள் உலகைப் படைத்த விதத்தை நன்முறையில் ஒழுங்குபடுத்தி அமைக்கிறார்; கம்பீரமான நடையைப் பயன்படுத்துகிறார்; தொடர் வரிசையாக அமைக்கிறார்; வெறும் கற்பனையான அம்சங்களைப் பெரும்பாலும் தவிர்க்கின்றார். பிற கலாச்சாரங்களில் காணப்படும் படைப்புப் புனைவுகளில் சூரியனும் சந்திரனும் பெயர்சொல்லிக் குறிப்பிடப்படுகின்றன; ஆட்சி செலுத்துகின்றன. ஆனால் விவிலியம் தருகின்ற படைப்புப் புனைவிலோ (தொடக்க நூல் முதல் அதிகாரம்) சூரியனும் சந்திரனும் நான்காம் நாளில் தான் படைக்கப்படுகின்றன; அவற்றிற்குப் பெயர் தரப்படவில்லை; அவை வெறுமனே பகலையும் இரவையும் காலங்களையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. [n 3][n 4] விவிலியத்தில் வரும் படைப்பு வரலாற்றில் மரபு புனைவு அம்சங்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்படுகின்றன. எனவே விவிலியத்தில் காணும் படைப்பு வரலாற்றை "மரபு புனைவுக் கூறுகள் நீக்கப்பட்ட புனைவு" எனக் கூறலாம் என்று சில அறிஞர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விவிலிய பாடத்தின் தனித்தன்மை தெரிகிறது.[24] ஜான் எல். மக்கென்சி என்னும் விவிலிய அறிஞரும் இக்கருத்தை ஆதரிக்கின்றார்.[25] இது மரபு புனைவு என்பதின் ஆழ்ந்த விளக்கம் என்று கூறலாம். புதிய ஏற்பாட்டில் மரபு புனைவுபுதிய ஏற்பாட்டில் கூறப்படுகின்ற இயேசுவின் வாழ்வின் சில நிகழ்ச்சிகளில் மரபு புனைவு கருத்துக்கள் அடங்கியிருப்பதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். பாதாளத்தில் இறங்குதல் என்னும் கருத்தும், நாயகனின் பயணம் என்னும் மரபு புனைவு கருத்தும், பிறந்து வளர்ந்து இறக்கும் கடவுள் என்னும் கருத்துப் புனைவும் பொதுவான மரபு புனைவாக உலக கலாச்சாரங்களில் காணப்படுவதுபோல இயேசுவின் வாழ்வு-இறப்பு-உயிர்த்தெழுதலில் காணப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.[26][27][28][29] இன்னும் சில அறிஞர் கருத்துப்படி, புதிய ஏற்பாட்டின் கடைசி நூலாகிய திருவெளிப்பாட்டில் பழைய மரபு புனைவு கருத்துகள் பல உள்ளன. அந்நூலில் 12:1-6 பகுதியில் கருவுற்ற ஒரு பெண் வானகத்தில் தோன்றுகிறார்; அவரை ஒரு பெரிய அரக்கப் பாம்பு அச்சுறுத்துகிறது. இந்த மரபு புனைவு அம்சங்கள் உலகின் பல நாடுகளில் நிலவுகின்ற மரபு புனைவுகளில் காணப்படுகின்றன. அதாவது, ஒரு மீட்பரைத் தன் உதரத்தில் கருவுற்றிருந்த ஒரு பெண் தெய்வத்தை ஒரு இராட்சதன் அழிக்கத் தேடுகின்றான். அதிசயமான விதத்தில் அப்பெண்ணும் குழந்தையும் காப்பாற்றப்படுகின்றனர். அக்குழந்தை இராட்சதனைக் கொன்று வெற்றிகொள்கிறது. இந்த விளக்கத்தை கத்தோலிக்க விவிலிய மொழிபெயர்ப்பின் குறிப்பில் உள்ளது.[30] திருவெளிப்பாடு நூலில் (அதிகாரம் 13) வருகின்ற இரு விலங்குகள், பண்டைய மரபு புனைவுகளான லிவியத்தான் (யோபு 11), பெகிமோத்து (யோபு 40:15-24) ஆகியவற்றின் பின்னணியில் எழுந்த புனைவு எனத் தெரிகிறது.[31] புதிய ஏற்பாட்டின் திருமுகங்கள் சிலவற்றில் "myths" (கிரேக்கம்: "muthoi") என்னும் சொல் வருகிறது. அதைத் தமிழ் விவிலியம் "புனைகதைகள்" என அழைக்கிறது (காண்க: 1 திமொத்தேயு 4:7; 2 திமொத்தேயு 4:4; தீத்து 1:14; 2 பேதுரு 1:16). இப்புனைகதைகள் பெரும்பாலும் ஞானக் கொள்கை என்று அழைக்கப்படும் ஒரு மெய்யியல் கொள்கையின் கருத்துகளைக் குறிப்பவை ஆகும். "சிபிலிய முன்னறிவிப்புகள்" (Sybillian Oracles) என்னும் ஏடுகளில் அடங்கிய ஒரு புனைவுப்படி, கிறித்தவர்களைக் கொடுமைப்படுத்திய உரோமை மன்னன் நீரோ பிற்காலத்தில் ஒருநாள் மீண்டும் "எதிர் கிறிஸ்துவாக" வருவான். இது புனைவுமொழியில் அமைந்த பிற்கால இடைச் செருகலாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.[32] நடுக்காலத்தில் எழுந்த கிறித்தவ மரபு புனைவுகள்மிர்ட்சா எலியட் என்பவர் கருத்துப்படி, நடுக்காலத்தில் மரபு புனைவுகள் பல எழுந்தன. ஒவ்வொரு குழுவும் தனக்கென்று புனைவுகளை உருவாக்கிக் கொண்டது.[33] ஒரு குறிப்பிட்ட தொழில் செய்த குழு தான் தோன்றியது எவ்வாறு என்பதை விளக்க ஒரு மரபு புனைவை உருவாக்கிக்கொண்டது. அது அத்தொழிலில் ஈடுபடுவோருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது. எடுத்துக்காட்டாக, போர்வீரர் குழுக்கள் தமக்கு முன்மாதிரியாக "லான்சலட்" (Lancelot) "பார்சிபல்(Parsifal) போன்ற வீரர்கள் பற்றிய கதைப் புனைவுகளைத் தமது வீர செயல்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டனர்.[33] நடுக்காலத்தில் நாடோடிக் கவிஞர்கள் பலர் தோன்றினர். அவர்கள் "காதல் புனைவு"களை உருவாக்கி, அவற்றிற்கு இசை அமைத்துப் பாடினர். அப்புனைவுகளில் கிறித்தவ அம்சங்களும் இணைக்கப்பட்டன.[33] நடுக்கால மரபு புனைவுளை ஆய்ந்தவர்களுள் ஒருவரான ஜோர்ஜ் எவ்ரி தமது "கிறித்தவ மரபு புனைவு" என்னும் நூலில் அவை பற்றிக் கூறுகிறார். இயேசுவின் அன்னையான மரியா, பிற புனிதர்கள் ஆகியோரின் வரலாற்றை எழுதும்போதும் மரபு புனைவுகள் அவற்றில் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக, மரியாவின் பிறப்பு, மரியா சூசையை மணத்தல் ஆகிய நிகழ்ச்சிகளைக் கூறலாம். ஒரு மரபு புனைவுப்படி, மரியாவின் பாட்டியான அன்னா கருத்தரிக்க இயலாதிருந்தார். அன்னாவின் உருக்கமான வேண்டுதல் இறைவனை எட்டியது. வானதூதர் ஒருவர் அன்னாவிடம் வந்து, அவர் கவலைப்பட வேண்டியதில்லை என்றும், உலகம் முழுவதும் உயர்த்திப் போற்றவிருக்கின்ற ஒரு குழந்தை ("மரியா") அவருக்குப் பிறக்கும் என்றும் கூறிச்சென்றார். மரியா தம் இளமைப்பருவத்தில் கடின ஒறுத்தல் முயற்சிகளைக் கடைப்பிடித்தார்; வானதூதர்கள் அவருக்குத் தோன்றி அப்பத்தை உணவாகக் கொடுத்தனர். திருமுழுக்கு யோவானின் தந்தையான செக்கரியா என்பவருக்கு ஒரு வானதூதர் தோன்றி, அந்நாட்டுப் பகுதியில் மனைவியை இழந்து வாழ்ந்த அனைத்து ஆண்களையும் ஒருங்கே கூட்டிவரச் சொல்கிறார். அனைத்து ஆண்களும் கூடி வந்த இடத்தில் ஒரு அதிசய நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு வந்த யோசேப்பு கையில் பிடித்திருந்த கோல் தளிர்விட்டு, பூப்பூக்கிறது. இன்னொரு கதைப்படி, யோசேப்பின் கைக்கோலிலிருந்து ஒரு புறா வெளிப்படுகிறது.[n 5] இந்த நிகழ்ச்சி வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி காப்பியத்திலும் காணக்கிடப்பது குறிப்பிடத்தக்கது. நடுக்காலத்தில் தோன்றிய கிறித்தவ மரபு புனைவுகள் சில வேளைகளில் பேகனிய புனைவுகளிலிருந்தும் கடவுளர் மற்றும் வீரர்களின் வரலாறுகளிலிருந்தும் பெற்ற பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கின்றன.[34] எடுத்துக்காட்டாக, புனித ஜோர்ஜியார் பற்றி கூறப்படுகின்ற புனைவைக் காட்டலாம். அப்புனைவிலும் அதுபோன்ற பிற புனிதர் பற்றிய புனைவுகளிலும் புனிதர்கள் அரக்கப் பாம்பை அழிக்கும் செய்தியைக் காணலாம். இச்செய்தி அதற்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த வேறு மரபு புனைவுளின் செய்தியை உள்ளடக்கியிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, உலகைப் படைத்துக் காக்கும் கடவுள் உலகத்தின் ஒழுங்கை குலைத்து அழிவுகொணர முயற்சி செய்கின்ற ஆதிகால ஒழுங்கின்மைக்கு எதிராகப் போராடி அதை அழிக்கின்றார். நடுக்காலத்தில் எழுந்த புனைவுகளான ஆர்தர் அரசர் மற்றும் "புனித கிண்ணம்" (Holy Grail) போன்றவற்றில் கெல்டிக் கலாச்சாரத்தைச் சார்ந்த ஆவியுலக அம்சங்களோடு சிறிது கிறித்தவப் பூச்சும் கலந்துள்ளதாக மிர்ட்சா எலியட் என்னும் அறிஞர் கூறுகின்றார்.[33] மறுமலர்ச்சிக்கால மரபு புனைவுகள்மறுமலர்ச்சிக்காலத்தில் புனித மரபை மரபு புனைவுகளிலிருந்து வேறுபடுத்திக் காணும் போக்கு வளர்ந்தது. புனிதர்கள் பற்றிய அதிசய புனைவுகள், புனிதர்களின் மீபொருள்கள், சிலுவை போன்ற புனித பொருள்கள் பற்றி விமர்சிக்கும் பார்வை எழுந்தது. மரபு புனைவு என்றாலே "கட்டுக்கதை" என்னும் கருத்து மேலோங்கலாயிற்று. ![]() கிறித்தவ புனைவுகளையும் கிறித்தவம் சேராத புனைவுகளையும் விரிவுபடுத்தி பல இலக்கியப் படைப்புகள் தோன்றின. எடுத்துக்காட்டாக ஆதி மனிதரின் படைப்பும் வீழ்ச்சியும் என்பதைக் குறிப்பிடலாம். இவற்றைப் படைத்த ஆசிரியர்கள் கிறித்தவ சமயத்தின் மட்டில் மதிப்பு காட்டினார்கள். அதே நேரத்தில் கடவுள், மனிதன், உலகம் பற்றிய வேறு கருத்துகளையும் சேர்த்துக்கொண்டார்கள்.[35] எடுத்துக்காட்டாக, ஜான் மில்டன் எழுதிய "இழந்த இன்பவனம்" (Paradise Lost) என்னும் காப்பியத்தைக் குறிப்பிடலாம்.[35] நவீன கால கிறித்தவ புனைவுகள்சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis), ஜே.ஆர்.ஆர். டோல்க்கியன் (J.R.R. Tolkien) போன்ற கதையாசிரியர்கள் கிறித்தவ கருப்பொருள்களை உள்ளடக்கிய புனைவுகளை 20ஆம் நூற்றாண்டில் உருவாக்கினர். சி.எஸ். லூயிஸ் எழுதிய "நார்னியா குறிப்பேடுகள்" (The Chronicles of Narnia) என்னும் நூல் உலகில் தீமைக்கும் நன்மைக்கும் இடையே நிகழும் போராட்டம், பாவ மன்னிப்பு, கடவுள் மனிதர் மீது இரக்கமுற்று தம்மையே மனித இனத்தின் நீடிய நலனுக்காகப் பலியாக்குதல், சாவுக்குப் பின் வாழ்வு, இறுதிக்காலத்தில் நன்மை வெற்றிகொள்ளுதல் போன்ற கிறித்தவக் கருத்துக்களை இந்த கதைத் தொடர் கொண்டுள்ளது. ஜே.ஆர்.ஆர். டோல்க்கியன் என்னும் கதையாசிரியர் எழுதிய கதை நூலின் பெயர் "கணையாழிகளின் நாயகன்" (The Lord of the Rings) என்பதாகும். மூன்று நூல்களாக வெளியான இக்கதையில் தீமை பற்றியும் அதிலிருந்து விடுதலை பெறுவது பற்றியும், சாவு, சாகாமை, உயிர்த்தெழுதல், மன்னிப்பு, பலி போன்ற பிற கிறித்தவ கருப்பொருள்கள் பற்றியும் அவர் கற்பனை உலகுப் பாணியில் எடுத்துக்கூறுகிறார். "எங்களை சோதனையில் விழ விடாதேயும், தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்" என்று இயேசு கற்பித்த இறைவேண்டலில் வரும் மன்றாட்டைக் கண்முன் கொண்டு இப்புதினத் தொடரை எழுதியதாக டோல்க்கியனே கூறியுள்ளார். கிறித்தவ மரபு புனைவுகளில் வரும் சில கூறுகள்கிறித்தவ மரபு புனைவுகளில் மலை, உலகு மையம், போராட்டம், பாதாளத்தில் இறங்குதல், இறக்கும் கடவுள், வெள்ளப் பெருக்கு, சமய நம்பிக்கைக்கு அடித்தளம் இடுதல், வீரன், இன்பவனம், பலி போன்ற பல கூறுகள் வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மலை![]() கடவுள் தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தும் இடமாக மலை உள்ளது. மலையில் ஏறிச் செல்வது ஒரு புனித பயணத்தைக் குறிக்கிறது. அங்கு கறைகள் கழுவப்பட்டு, அறிவும் ஞானமும் வழங்கப்பட்டு, புனித நிலை அனுபவம் ஏற்படுகிறது.[36] மோசே சீனாய் மலையில் ஏறிச்சென்று கடவுளனுபவம் பெற்று, பத்துக் கட்டளைகளைப் பெற்று மக்களுக்கு அளித்தார். இயேசு மலைக்கு ஏறிச் சென்று தந்தைக் கடவுளோடு உரையாடலில் இரவுகளைக் கழித்தார். இயேசு மலைமீது அமர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கினார். இயேசு மலைமீது ஏறிச்சென்று தம் சீடர்கள் முன்னிலையில் தோற்றம் மாறினார். இவ்வாறு பல நிகழ்வுகளில் மரபு புனைவு சார்ந்த மலை, கடவுளின் உடனிருப்பைக் காட்டும் கூறாக வருகிறது.[36] உலகு மையம்சில மரபு புனைவுகளில் "உலகு மையம்" (Axis Mundi) என்னும் கருத்துருவகம் உலகப் படைப்பு நிகழும் புனித இடமாக வருவதுண்டு. இந்த மையம் ஒரு மரமாக, மலையாக, தூணாக உருவகிக்கப்பட்டு, உலகின் அச்சாணியாக அமையும். இந்திய மரபில் மேரு மலை உள்ளது போல யூத-கிறித்தவ மரபில் சீயோன் மலை உலகு மையமாகக் கருதப்படுகிறது. அங்கு கடவுளின் படைப்புச் செயல் நிகழ்ந்தது. இயேசு உயிர்நீத்த சிலுவை நாட்டப்பட்ட கொல்கதா மலை உலக மையமாகக் கிறித்தவ புனைவுகளில் காணப்படுகிறது. அங்கு புதிய படைப்புச் செயல் நிகழ்ந்தது.[37][38] மனிதரை பாவத்திலிருந்து மீட்டதால் இயேசு புதிய படைப்புக்கு அடித்தளம் இட்டார். மேலும், கிழக்கு கிறித்தவ மரபின்படி, இயேசு உயிர்நீத்த கொல்கதா என்பது உலகு மைய மலையின் உச்சி என்பதாகும். அங்குதான் முதல் மனிதன் ஆதாம் படைக்கப்பட்டான்; இறந்து அடக்கம் செய்யப்பட்டான். இயேசு சிலுவையில் தொங்கியபோது அவரது உடலிலிருந்து வடிந்த இரத்தம் ஆதாமின் மண்டையோட்டின் மேல் விழுந்து அவனுக்கு மீட்பு அளித்தது.[38][39] இயேசுவை சிலுவையில் தொங்குபவராகக் காட்டும் கலைப்படைப்புகளில் அச்சிலுவையின் கீழே ஆதாமின் மண்டையோட்டைச் சித்தரிப்பது மரபாக உள்ளது.[38] போராட்டம்"போராட்ட மரபு புனைவு" (Combat myth) என்னும் உரை வகை பல கலாச்சாரங்களில் காணப்படுகிறது. கடவுள் அல்லது ஒரு குறிப்பிட்ட தெய்வம் தீமை இழைக்க எண்ணுகின்ற ஒரு அரக்க விலங்கை அடக்கி அதன்மேல் வெற்றிகொள்வதாக இப்புனைவு அமைகிறது. இத்தகைய பண்டைய மரபு புனைவு ஒன்றே "எனுமா எலிஷ்" (Emuma Elish) என்பது ஆகும்.[40][41][42] விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற லிவியத்தான் (Leviathan) (காண்க: யோபு 3:8; 41:1; திருப்பாடல்கள் 74:14; 104:26; எசாயா 27:1), மற்றிம் இரகாபு (Rahab) (காண்க: யோபு 9:13; 26:12; திருப்பாடல்கள் 89:10; எசாயா 30:7; 51:9) என்னும் கொடிய அரக்க கடல் விலங்குகள் பற்றிய செய்திகள் பிற கலச்சார மரபு புனைவுகளிலிருந்து பெறப்பட்டவை என்பது அறிஞர் கருத்து.[43][43][43][44][45] தீமையின் ஒட்டுமொத்த உருவான சாத்தான் நன்மையே உருவான கடவுளை எதிர்த்துப் போராடும் மரபு புனைவு "போராட்டம்" என்னும் புனைவு குறியீட்டிலிருந்து பிறந்ததாகலாம்.[43][46] மேலும், திருவெளிப்பாடு நூல், 12ஆம் அதிகாரத்தில் பெண்ணுக்கும் அரக்கப் பாம்புக்கும் இடையே நிகழும் மோதல் "போராட்டம்" என்னும் புனைவு குறியீட்டை எதிரொலிப்பதாகக் கொள்ளலாம்.[42][47] பாதாளத்துக்கு இறங்குதல்![]() கிறித்தவ மரபுப்படி, இயேசு தாம் சிலுவையில் உயிர்துறந்தபின் பாதாளத்தில் இறங்கி, அங்கிருந்த இறந்தோரின் ஆன்மாக்களுக்கு விடுதலை வழங்கினார். இந்த வரலாறு நிக்கதேம் நற்செய்தி என்னும் பண்டைய நூலில் உள்ளது. இந்நூல் விவிலியத் திருமுறை நூல் தொகுப்பைச் சேர்ந்ததல்ல என்றாலும் அதில் வருகின்ற செய்தி 1 பேதுரு 3:18-22 பகுதியின் விளக்கமாகக் கூட இருக்கலாம். "கிறிஸ்து காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்" (1 பேதுரு 3:19) என்பதை அந்நூல் விளக்குவதாகக் கொள்ளலாம்.[48] மரபு புனைவுகளில் வீரன் ஒருவன் பாதாளத்தில் இறங்குவது ஒரு பாணியாக உள்ளது. அதுவே இயேசுவுக்கும் பொருத்தி உரைக்கப்பட்டது என்று டேவிட் லீமிங் (David Leeming) என்பவர் கருதுகிறார்.[29] இறக்கும் கடவுள்பல கலாச்சாரங்களின் மரபு புனைவுகளில் ஒரு கடவுள் இறப்பதும் அதன் பின் உயிர்பெற்று எழுவதும் ஒரு பாணியாக உள்ளது. இது "இறக்கும் கடவுள்" என்னும் பாணியாக விளக்கப்படுகிறது.[28][49][50] ஜேம்சு ஜோர்ஜ் ஃப்ரேசர் (James George Frazer) என்னும் அறிஞர் இறக்கும் கடவுள் என்னும் பாணி உலக கலாச்சாரங்களின் மரபு புனைவுகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை விரிவாக ஆய்ந்துள்ளார்.[51] இறக்கும் கடவுளை நிலத்தின் வளமையோடு இணைத்துப் பார்ப்பதுண்டு.[28][52] ஃப்ரேசர் மற்றும் பிற அறிஞர்கள் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை "இறக்கும் கடவுளின்" மரபு புனைவோடு இணைத்துக் காண்கின்றனர்.[53] அவற்றிற்கிடையே ஒப்புமை உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.[28][54] இயேசுவும் தமது சாவின் வழியாக ஆன்மிக முறையிலான வளமையைக் கொணர்கிறார்.[28] 2006இல், நற்கருணைப் பெருவிழாவின் போது ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சிக்கும், பண்டைய கலாச்சாரங்களின் மரபு புனைவுகளில் காணப்படுகின்ற "இறக்கும், உயிர்த்தெழும் கடவுள்களுக்கும்" இடையே ஒப்புமை உள்ளதைக் குறிப்பிட்டார். அவர் கூறியது: "இந்த மரபு புனைவுகளில் மனித ஆன்மா, ஒருவிதத்தில், மனிதனும் கடவுளுமான இயேசுவை நோக்கி ஈர்க்கப்படுவதைக் காண்கின்றோம். இயேசு இகழப்பட்டவராய் சிலுவையில் உயிர்துறந்தாலும், தம் சாவின் வழியாக மனிதர் அனைவருக்கும் வாழ்வின் வழியைத் திறந்துவைத்தார்".[55] வெள்ளப் பெருக்குபல கலாச்சாரங்களில் வெள்ளப் பெருக்கு பற்றிய மரபு புனைவுகள் உள்ளன. உலகில் நிலவும் தீமைகளைக் களைந்து, உலகத்தை நீரால் கழுவித் தூய்மையாக்குகின்ற செயலை அப்புனைவுகள் சித்தரிக்கின்றன.[56][57] இத்தகைய புனைவுகள் உலகின் எல்லாப் பெருநிலப் பகுதிகளிலும் காணக்கிடக்கின்றன. ஒரு எடுத்துக்காட்டு, விவிலியத்தில் வருகின்ற நோவா காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்ற வெள்ளப் பெருக்கு ஆகும்.[57] அக்கதையை தொடக்க நூல் அதிகாரங்கள் 6-10இல் காணலாம்.[56][58] பிற கலாச்சாரங்களில் உள்ள வெள்ளப் பெருக்குப் புனைவு போன்றே விவிலியப் புனைவும் தீய உலகுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிப்பதோடு மக்களுக்கு புதியதொரு வாய்ப்பையும் நல்கும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.[56] சமய நம்பிக்கைக்கு அடித்தளம் இடுதல்சாண்ட்ரா ஃப்ராங்கியேல் என்னும் அறிஞர் கருத்துப்படி, இயேசுவின் வாழ்வு, போதனை, சாவு ஆகியவை கிறித்தவ சமயத்தின் நம்பிக்கைத் தொகுப்புக்கு அடித்தளம் இடுகின்ற "புனைவாக" அமைகின்றது.[59] பிற சமயங்களில் காணப்படுகின்ற "படைப்பு மரபு புனைவுளுக்கும்" கிறித்தவ சமய நம்பிக்கைக்கு அடித்தளம் இடும் புனைவுக்கும் இடையே அமைப்பு முறையான ஒற்றுமை உள்ளது எனலாம். ஏனென்றால், அத்தகைய புனைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து, சமய நம்பிக்கையை ஆழப்படுத்தும் செயல் தொடர்ந்து நிகழ்கின்றது. மேலும், சமய நம்பிக்கைக்கு அடித்தளம் இடுவதோடு, இயேசுவின் வாழ்வு, போதனை, சாவு ஆகியவற்றை உள்ளடக்கிய "புனைவு" கிறித்தவ சமயத்தைக் கடைப்பிடிப்போரின் வாழ்க்கையையும் உளப் பாங்கினையும் நிர்ணயிக்கிறது.[59] சமய நம்பிக்கைக்கு அடித்தளம் இடுவதாக இத்தகைய புனைவுகளை நாம் பார்ப்பதாக இருந்தால், அவற்றின் பொருளை விரிவாக்கும்போது, அங்கே "வானத்தில் நிகழும் போராட்டம்", "மனிதனின் வீழ்ச்சி" போன்றவற்றையும் உள்ளடக்கலாம். கீழ்ப்படியாமையின் விளைவாக மனித குலத்தைப் பெரும் இடர்ப்பாடு கவ்விக்கொண்டதாகக் காட்டுவது பல கலாச்சாரங்களில் உள்ளது.[60] வீரன்![]() மரபு புனைவுகளில் வரும் வீரர்களின் பிறப்பு பல கலாச்சாரங்களில் ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைகின்றன என்று ஓட்டோ ராங்க் (Otto Rank) என்னும் அறிஞர் கூறுகின்றார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய "புனைவு" இத்தகைய புனைவுகளின் கூறுகளை மிகச் சிறப்பாக உள்ளடக்கியிருக்கிறது என்று ஓட்டோ ராங்க் கூறுகின்றார்.[27] மிர்ட்சா எலியட் என்னும் அறிஞர் கருத்துப்படி, மரபு புனைவுகளில் வரும் வீரர்கள் அரக்கப் பாம்பைக் கொன்று மக்களைக் காப்பாற்றும் செயல் புரிவது பரவலான ஒன்று ஆகும். இவ்வாறு அரக்கப் பாம்பைக் கொல்லுகின்ற கருத்துருவகம், மிகப் பண்டைக் காலத்திலிருந்தே வருகின்ற கருத்தாகிய தெய்வீக வீரன் உலகத் தொடக்கத்தில் தீமையின் உருவான அரக்கப் பாம்பை அழிப்பதின் அடிப்படையில் அமைகிறது.[18] இக்கருத்துருவகத்திற்கு சிறப்பான எடுத்துக்காட்டாக புனித ஜோர்ஜ் என்பவர், ஓர் இளவரசியையும் அவளுடைய நாட்டு மக்களையும் பெரும் தீங்கிலிருந்து காப்பாற்றும் வண்ணம் அரக்கப் பாம்பை அழித்துவிடுவதாக வருகின்ற "புனைவு" உள்ளது.[61] புனைவுகளில் வரும் வீரன் அரக்கப் பாம்பைக் கொன்று வெற்றிவாகை சூடுகின்ற கருத்துருவகம் மோசே, இயேசு, ஆர்தர் மன்னன் புனைவுகளில் வெவ்வேறு வகைகளில் வருவதைக் கவனிக்கலாம்.[26][62] வீரன் தனது சாவுக்குப் பின் உயிர்பெற்றெழுதல் பண்டைய வீரன் பற்றிய மரபு புனைவின் ஒரு பகுதியாகும் என்று லீமிங் என்னும் அறிஞர் கூறுகின்றார்.[62][63] இவ்வாறு உயிர்பெற்றெழுகின்ற வீர்ன் தனது மக்களுக்கு "உணவாக" மாறுவதும் அப்புனைவுகளில் உண்டு. இயேசு தம் சீடர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்று கூறினார் (யோவான் 6:35).[62] இயேசு வரலாற்றின் புனைவுக்கும் பிற கிறித்தவ வீரர் புனைவுகளுக்கும் இடையே ஒற்றுமையும் வேற்றுமையும் இருப்பதை லீமிங் சுட்டிக்காட்டுகிறார். புனித ஜோர்ஜ் போன்ற வீரர் புனைவுகளில் கிறித்தவத்துக்கு முற்பட்ட வீரர் புனைவு அம்சங்கள் காணப்படுவதை அவர் எடுத்துக் கூறுகிரார். அங்கே இராணுவப் பண்பு மேலோங்குகிறது.[26] இன்ப வனம்![]() சமயம் சார்ந்த பல மரபு புனைவுகளில், தொடக்க காலத்தில் மனிதர் இன்ப வனத்தில் வாழ்ந்ததாகப் புனைந்துரைப்பது வழக்கம். அந்த இன்ப வனத்தில் அனுபவித்த மகிழ்ச்சியை மனிதர் இழந்து போவதும் பல புனைவுகளில் வருகிறது. விவிலியத்தின் தொடக்கத்தில் முதல் மனிதர் இன்ப வனத்தில் மகிழ்ந்திருந்த செய்தி உள்ளது (தொடக்க நூல் அதிகாரங்கள் 1-3). இது மரபு புனைவுவுகளில் வரும் கருத்துருவகத்தைப் பிரதிபலிக்கிறது.[64][65] பலிபலி என்பது சமய மரபுகளில் பரவலாகக் காணப்படும் ஒன்று. அது மரபு புனைவுகளாக சித்தரிக்கப்படுவது வழக்கம். விவிலியத்தில் ஆபிரகாம் தமது ஒரே மகனான ஈசாக்கு என்பவரைக் கடவுளுக்குப் பலி செலுத்த முன்வந்தது கூறப்படுகிறது (தொடக்க நூல் 22:1-14). இயேசு உலக மக்களின் மீட்புக்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார் (மாற்கு 15:21-32).[66] வெண்டி டோனிகர் என்னும் அறிஞர் இயேசுவின் சாவு ஒரு "மீபுனைவு" (meta-myth) என்கிறார். அதாவது, ஏற்கெனவே நிலவிய ஒரு மரபு புனைவு ஒன்றில் தாம் பங்கேற்று ஒரு புதிய "புனைவை" உருவாக்குவதை இயேசு அறிந்திருந்தார். பகைமையின் காரணமாக அவர் பலியாக்கப்பட்டாலும், அவர் தொடக்கமும் ஏற்பும் காட்டப்படுகின்ற ஒரு புதிய புனைவில் பங்கேற்று, அன்பின் வெளிப்பாடாகத் தம்மைப் பலியாக்குகின்ற கடவுளாக அப்புனைவில் வருகின்றார் எனக் கூறலாம்.[67] காலம் பற்றிய புரிதல்![]() அறிஞர் மிர்ட்சா எலியட் என்பவர் கருத்துப்படி, பல புராதன சமூகங்களில் காலம் பற்றிய புரிதல் சுழற்சி முறையில் அமைந்தது ஆகும். அதாவது மரபு புனைவுகளில் கூறப்படும் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் நிகழ்வதாகவும், அந்நிகழ்ச்சி தொடர்ந்து ஒரு சக்கரச் சுழற்சி போல் நடப்பதாகவும் அவர்கள் புரிந்தனர். இப்புரிதல் cyclic sense of time என அழைக்கப்படுகிறது.[68] இத்தகைய காலச் சுழற்சி மூலம் அந்தப் புராதன சமூகங்கள் தமது ஆதிகால நிலைக்கு மீண்டும் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை உருவாக்கப்பட்டது. இதை "முடிவுறா திரும்புகை" (eternal return) என்று கூறுவர்[69] கிறித்தவத்திலும் இத்தகைய காலச் சுழற்சி உள்ளது என எலியட் கூறுகிறார். அதாவது, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவர் புரிந்த செயல்கள், அவரது சாவு ஆகியவை காலத்தில் மீண்டும் மீண்டும் அடையாள முறையில் நிகழ்வதாக கிறித்தவர் அந்நிகழ்வுகளை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றனர். இத்தகைய காலச் சுழற்சி முறை கிறித்தவத்தில் உள்ளதால் அதில் ஒரு மரபு புனைவு அம்சம் உள்ளது என்று எலியட் கூறுவார்.[70] அதே நேரத்தில், யூத-கிறித்தவ சிந்தனை ஒரு புதிய முறையையும் புகுத்தியுள்ளது. அது மிகவும் சிறப்பான ஒன்று. அதாவது, யூத-கிறித்தவ சிந்தனை நேர்கோடாகச் செல்லும் காலக் கணிப்பு முறையைப் புகுத்தியது. இதை linear sense of time என்பர். இதையே "வரலாற்றுக் காலக் கணிப்பு" (historical time) எனவும் கூறலாம். கிறித்தவத்திப் பொறுத்தமட்டில், காலம் என்பது சுழற்சியாக மீண்டும் மீண்டும் வரும் காலம் அல்ல, மாறாக நேர்கோடாக முன்னேறிச் செல்லும் காலம் ஆகும். கடந்த காலம் மீண்டும் திரும்புவதில்லை; "முடிவுறா திரும்புகை"யும் இல்லை.[71] கிறித்தவம் மனித வரலாற்றில் காலம் பற்றிய ஒரு புதுப் பார்வையைக் கொணர்ந்தது. வரலாறு என்பது பழைய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடப்பது அன்று, புதிய காலம் தொடர்ந்து வருவதைக் குறிக்கும். எனவே கிறித்தவ மரபு புனைவின்படி, காலம் என்பது ஒரு குறிப்பிட்ட தொடக்கத்திலிருந்து தோன்றுகிறது; படைப்பு என்பது காலத்தில் நிகழ்ந்தது. காலத்தின் நடு நிகழ்வாக இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் அமைந்தது, காலம் தனது நிறைவை நோக்கி முன்னேறிச் செல்கின்றது.[72] ஹைன்ரிக் சிம்மர் (Heinrich Zimmer) என்னும் அறிஞரும் மேற்கூறிய கருத்தை வலியுறுத்துகிறார். காலம் பற்றிய "நேர்கோடு" பார்வை கிறித்தவத்தில் எழுவதற்கு காலம் மற்றும் வரலாறு பற்றி புனித அகுஸ்தீன் வழங்கிய கருத்துகள் அடிப்படையாக அமைந்தன என்று சிம்மர் கூறுகிறார்.[73] மேலும் சிம்மர் கருத்துப்படி, சுழல் முறையில் காலத்தைப் புரிந்துகொள்ளும் பார்வை இந்து சமய மரபு புனைவுகளில் உள்ளது.[74] வரலாற்றுக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை மரபு புனைவு முறையில் புனித நிலைக்கு உயர்த்துகின்ற பாணி யூதத்திலும் கிறித்தவத்திலும் உள்ளது என்றும், அது இச்சமயங்களின் தனிப் பாங்கு என்றும் நீல் ஃபோர்சித் (Neil Forsyth) என்னும் அறிஞர் கூறியுள்ளார்.[75] கிறித்தவ மரபு புனைவும் நவீன உலகின் கருத்துகளும் கொள்கைகளும்முன்னேற்றம், வளர்ச்சி பற்றிய கருத்துகார்ல் மிட்சாம் (Carl Mitcham) என்பவர் கருத்துப்படி, நவீன உலகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைவதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதில் கிறித்தவப் பார்வை பெரிதும் துணை நின்றுள்ளது. நிறைவுக் காலத்தில் மீட்பும் விடுதலையும் நிகழும் என்றும் அதை நோக்கி மனித வரலாறு முன்னேறிச் செல்கின்றது என்றும் கிறித்தவம் காலத்தைப் புரிந்துகொள்வதில் அடிப்படையில் அறிவியல் முன்னேற்றத்துக்கு வழிபிறந்தது.[76] கிறித்தவ மரபு புனைவை எடுத்து, அதை புனித நிலையிலிருந்து உலகு நிலைக்குக் கொண்டுவந்து, அறிவொளி இயக்கம் (Enlightenment) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றிய கருத்துருவகத்தை உருவாக்கிக் கொண்டது என்று ஹேடன் உவைட் (Hayden White) விவரிக்கிறார்.[77] அறவியல் மற்றும் அறிவியல் வளர்ச்சி நவீன உலகில் நிகழ்வதற்கு அடிப்படையாக இருந்தது மனித மீட்பு மற்றும் விடுதலை பற்றி கிறித்தவம் வழங்கிய மரபு புனைவு காரணமாயிற்று என்பது ரைன்ஹோட் நீபுர் (Reinhold Niebuhr) என்பவர் கருத்து.[78] மெய்யியல் மற்றும் அரசியல் வளர்ச்சி பற்றிய கருத்துநடுக்காலத்தில் யோவாக்கிம் தா ஃபியோரே (Joachim of Fiore) (1135-1202) என்னும் இறையியலார், விரைவிலேயே உலகம் அனைத்தும் புதுப்பிக்கப்படப் போகிறது என்றொரு கருத்தை முன்வைத்தார். அக்கருத்தின் தாக்கத்தைப் பிற்கால மெய்யியலார் லெஸ்ஸிங் (Lessing), ஃபிக்டே (Fichte), ஹேகெல் (Hegel), ஷெல்லிங் (Schelling) ஆகியோரின் படைப்புகளிலும், உருசிய எழுத்தாளர்களின் படைப்புகளிலும் காணலாம் என்று மிர்ட்சே எலியட் கூறுகின்றார்.[79] மார்க்சியம் முன்வைக்கின்ற கருத்தியலின் அடிப்படை "யூத-கிறித்தவ மெசியா கருத்தே" என்று மிர்ட்சே எலியட் கூறுகின்றார். மேற்கு ஆசியா, மத்தியதரைக் கடல் பகுதிகளில் தோன்றிய மரபு புனைவு, இறுதிக் காலத்தில் "நேர்மையாளர்கள்", "திருப்பொழிவு பெற்றோர்", "கபடமற்றோர்", "குற்றமற்றோர்" தாம் அநீதியாக அனுபவித்த துன்பங்களின் வாயிலாக உலகம் முழுவதிலும் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொணர்வார்கள் என்னும் கருத்தை எடுத்துரைத்தது. அக்கருத்தையே அதன் சமயப் பின்னணியிலிருந்து பெயர்த்து, உலக வளர்ச்சி என்னும் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் பொதுவுடைமைத் தத்துவத்தின் மையமாக எடுத்துரைத்தார். "பாட்டாளி மக்கள்" இந்த உலக மாற்றத்திற்கு வழிவகுப்பார்கள் என்பது மார்க்சின் கருத்து. மிர்ட்சே எலியட் கருத்துப்படி, மார்க்சின் இக்கருத்து யூத-கிறித்தவ மரபு புனைவிலிருந்து பிறக்கிறது. [80] வில் ஹெர்பெர்க் (Will Herberg) என்பவர், தாம் எழுதிய "சோசியலிசத்தில் காணப்படுகின்ற கிறித்தவ மரபு புனைவு" என்னும் கட்டுரையில் சோசியலிசம் (சமூகவுடைமை) தனது கருத்தியலைப் பெறுவது கிறித்தவ மரபு புனைவு மேற்கத்திய சிந்தனையில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகவே என்று கூறுகிறார்.[81] யூத-கிறித்தவ மெசியா கோட்பாட்டின் தாக்கம் 20ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்திய அரசுக் கோட்பாடுகளில் வெளிப்பட்டது என்று கூறி, அதற்கு எடுத்துக்காட்டாக சோவியத் ஏகாதிபத்திய அமைப்பைக் காட்டுகிறார் லீமிங் என்னும் அறிஞர்.[82] ஹூக் பைப்பர் (Hugh Pyper) என்பவரின் கருத்துப்படி, ஐரோப்பாவில் குறிப்பாக புரட்டஸ்தாந்து நாடுகளிலும் சிறிய நாடுகளிலும் தேசியவாத சிந்தனைகள் எழுந்ததற்கு விவிலியத்தில் கருத்தியல் மற்றும் இன அடிப்படையில் ஒரு மக்களுக்கு விடுதலையும் நாட்டுரிமையும் வழங்கப்படுகின்ற மரபு புனைவின் தாக்கமும் ஒரு காரணம் ஆகும்.[83] குறிப்புகள்
ஆதாரங்கள்
மூலங்கள்
|
Portal di Ensiklopedia Dunia