சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு (Charlie Hebdo shooting) என்பது 07 சனவரி 2015 அன்று ஒ.ப.நே 10:30 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிகழ்வாகும். முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.[12][13] கட்டிடத்தினுள் நுழைந்ததும் தானியங்கி ஆயுதங்களின் மூலம் ஆயுததாரிகள் சுட்டனர். 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.[14] பிரான்சு நாட்டில் 18 ஜூன் 1961 அன்று 28 பேர் கொல்லப்பட்ட தொடர்வண்டிக் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் நடந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.[14][15][16]
பின்புலம்
சார்லி ஹெப்டோ, பிரான்சு நாட்டிலிருந்து வெளியாகும் ஒரு வாராந்த இடதுசாரிப் பத்திரிகை ஆகும். இது கேலிச்சித்திரங்கள், அறிக்கைகள், நகைச்சுவைகள் மற்றும் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடும் பத்திரிகை ஆகும். 2011 ஆம் ஆண்டு இஸ்லாமிய இறைத்தூதர் முகம்மது நபி தொடர்பான கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இந்நிகழ்விற்காக, இப்பத்திரிகையின் பழைய அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல் செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டது. மேலும் இதன் இணையத்தளமும் விசமிகளால் முடக்கப்பட்டது.
தாக்குதல்
07 ஜனவரி 2015 அன்று ஒ.ப.நே 10 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.[12][13] இறந்தவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள். கட்டிடத்தினுள் நுழைந்ததும் தானியங்கி ஆயுதங்களின் மூலம் ஆயுததாரிகள் சுட்டனர். 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.[14] துப்பாக்கிச் சூடு நடத்தும் போது பதிவான காணொளியில் தீவிரவாதிகள் அல்லாஹூ அக்பர்[17] எனக் குரலெழுப்பினர். மேலும் நாங்கள் முகம்மது நபிக்காக பழிவாங்குகிறோம், அதனால்தான் கொன்றோம் எனவும் குரலெழுப்பினர்.[17][18][19][20] இந்தத் துப்பாக்கிச் சூடு முதலில் கட்டிடத்தின் நுழைவாயிலில் ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியிலும் நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டின் போது அலுவலகத்தில் ஊழியர்கள் கலந்துரையாடலில் இருந்தனர். மொத்த துப்பாகிச் சூடு நிகழ்வும் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் முடிவுற்றது. சில சாட்சிகளின் கூற்றுப்படி துப்பாக்கி ஏந்திய ஆயுததாரி சுடும் போது ஊழியர்கள் பெயரைச் சொல்லி அழைக்கப்பட்டிருக்கின்றனர்.[21] இந்தத் ஆயுததாரிகள் ஏமன் நாட்டினைச் சேர்ந்த அல் காயிதா தீவிரவாதிகள் எனத் தெரிகிறது.[8]
அல் காயிதா பொறுப்பேற்றது
சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல் காயிதா அமைப்பின் ஏமன் நாட்டுக் கிளை பொறுப்பேற்றுள்ளது. அல்கய்தா ஏமன் கிளையின் முக்கிய தளபதியான நாசர் அல் அன்சாய் இறைதூதரை இழிவுபடுத்தியதற்கு பழிக்குப்பழியாக சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என காணொளி மூலம் இத்தகவலை உறுதிப்படுத்தினார். மேலும், பிரான்சில் தாக்குதல் நடத்த அல்கய்தாவின் ஏமன் கிளை திட்டமிட்டதாகவும் தாக்குதலுக்கு திட்டம் வகுத்து நிதி உதவியை ஏமன் நாட்டு அல்கய்தா வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.[22]
தாக்குதலுக்குப் பின்னான நிகழ்வுகள்
தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் மூவரும் காத்திருந்த நான்காவது தீவிரவாதியின் வாகனத்தில் போர்ட் டி பான்டின் (Porte de Pantin) பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்து மற்றொரு வாகனத்தின் ஓட்டுனரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவ்வாகனத்தைக் கடத்தித் தப்பிச் சென்றனர். தடுத்த காவல் அதிகாரிகளையும் சுட்டனர்.[23] காயமுற்ற காவலரை அணுகிய தீவிரவாதி, நீ என்னைக் கொல்ல வேண்டுமா? எனக் கேட்டிருக்கிறார், காவலர் இல்லை, பரவாயில்லை எனப் பதிலளித்த பின்னர் அக்காவலர் தீவிரவாதியால் தலையில் சுடப்பட்டார்.[24]
வாசலருகே தவறவிடப்பட்ட அடையாள அட்டையிலுள்ள சையது கோவ்சியின் புகைப்படம்
சையது கோவ்சி (Saïd Kouachi, 07 செப்டம்பர், 1980) மற்றும் ஷெரீஃப் கோவ்சி (Chérif Kouachi, 29 நவம்பர், 1982) ஆகியோர் முகமூடி அணிந்து துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய நபர்கள் என பிரான்சு காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[49][50] இவருவம் சகோதரர்கள் மேலும் பிரான்சு நாட்டின் குடியுரிமை பெற்ற பிராங்கோ-அல்ஜீரியன் (Franco-Algerian) இஸ்லாமியர்கள் ஆவர்.[49][51][52][53] இவரது பெற்றோர் அல்ஜீரியாவிலிருந்து வந்து பிரான்ஸில் குடியேறியவர்கள்.[54] சகோதரர்கள் இருவரும் சிறுவயதில் தனியாக வாழ்ந்தவர்கள்.[52] ஷெரீஃப் கோவ்சி (Chérif Kouachi) ஏற்கனவே ஈராக் வழியாக சிரியா செல்லும் போது 2005 ஜனவரி அன்று கைது செய்யப்பட்டார். இவர் பாரிஸ் நகரிலுள்ள அட்டவா ( Addawa) மசூதிதியைச் சார்ந்த தீவிரப் பேச்சாள பரீத் பென்யெடெள (Farid Benyettou)- வின் மாணவர் ஆவார். இவரிடம் ஏற்கனவே ஈராக்கில்ஜிகாத் செய்யமுடியாவிட்டால் பிரான்ஸின் யூதர் வசிக்குமிடங்களைத் தாக்கும்படி பரீத் பென்யெடெள (Farid Benyettou) சொல்லியிருந்தார்.[55] 2008 ஆம் ஆண்டு ஷெரீஃப் கோவ்சி (Chérif Kouachi)- க்கு, ஈராக்கின்அபு முஸாப் அல்-ஸார்க்வி எனும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவிற்கு ஆட்கள் அனுப்பிய குற்றச் செயல்களுக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.[56]
மூன்றாவது சந்தேக நபராக வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எந்த நாட்டைச் சார்ந்தவர் என உறுதிப்படுத்தப்படாத வேலையிலாத இஸ்லாமிய இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்மீது துப்பாக்கிச் சூட்டின் போது வாகனம் ஓட்டியதாக சந்தேகப்படுகிறனர்.[49][57][58][59] ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்த போது இவர் வகுப்பறையில் இருந்ததாகவும்[60], எனவே உடன் படிக்கும் மாணவர்களிடம் இதை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படுகிறது.[61] இவர் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.[62]
சந்தேகத்திற்குரிய நபர்கள் சுட்டுக் கொலை
வடக்கு பாரிஸ் பகுதியில் பதுங்கியிருந்த சகோதரர்களான சையது கோவ்சி மற்றும் ஷெரீஃப் கோவ்சி இருவரும் பிரான்சு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரும் தொழிற்சாலைப் பகுதிகளில் பதுங்கியிருந்தபோது காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தினர். காவலர்களின் பதில் தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.[63] இவர்களுடன் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி கிழக்கு பாரீஸ் நகரின் வணிக அங்காடி ஒன்றில் பிணையக்கைதிகளுடன் பதுங்கியிருந்தான். சையது கோவ்சி மற்றும் ஷெரீஃப் கோவ்சி சகோதரர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை காவல்துறையியினர் கைவிட வேண்டும் என்று அந்தத் தீவிரவாதி மிரட்டியிருந்தான்.[64] பின்னர், தீவிரவாத எதிர்ப்புக் காவலர் பிரிவின் நடவடிக்கையில் அவன் கொல்லப்பட்டான். பிணையக்கைதிகளில் நால்வர் மீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர், மேலும் நால்வர் காயமடைந்தனர் மற்றும் பதினைந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காவலர்களில் இருவர் காயமடைந்தனர்.[63]
அல் காயிதா மிரட்டல்
பிரான்சில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அல் காயிதா எச்சரித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஏமனில் கல்வி பயின்றதாகவும் அங்கு அல் காய்தா பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதாகவும் ஏமன் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அரேபியன் தீபகற்பத்தில் உள்ள அல் காய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஷேக் ஹாரித் அல்-நதாரி (Sheikh Harith al-Nadhari), பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஜெவிஸ் பல்பொருள் விற்பனை அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் பிரான்சில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.[65]முஸ்லீம்கள் மீது ஆக்ரோஷம் காட்டுவதை குறைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. இதனால் நீங்கள் பாதுகாப்பாக வாழ முடியும். நீங்கள் ஏற்க மறுத்தால் போர் தொடுக்கப்படும் என மிரட்டலில் தெரிவித்துள்ளன.[66] தீவிரவாதி ஷெரீஃப் கோவ்சி இத்தாக்குதலுக்கு அல் காயிதா நிதி உதவி வழங்கியதாக கொல்லப்படுவதற்கு முன்னர் தெரிவித்தான்.[65]
↑"En direct : Des coups de feu au siège de Charlie Hebdo" (in French). see comments at 13h09 and 13h47: "LeMonde.fr: @Antoine Tout ce que nous savons est qu'ils parlent un français sans accent." and "LeMonde.fr: Sur la même vidéo, on peut entendre les agresseurs. D'après ce qu'on peut percevoir, les hommes semblent parler français sans accent."{{cite web}}: CS1 maint: unrecognized language (link)