சிக்கந்தர் பக்த் (அரசியல்வாதி)
சிக்கந்தர் பக்த் (Sikander Bakht) (24 ஆகஸ்ட் 1918 - 23 பிப்ரவரி 2004) இவர் இந்திய தேசிய காங்கிரசு, ஜனதா கட்சி, இறுதியாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் பாஜகவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் அதன் தலைவராக பணியாற்றினார். அடல் பிகாரி வாச்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். 2000ஆம் ஆண்டில், இந்திய அரசின் இரண்டாவது உயரிய குடிமகன்களுக்கு வழங்கப்படும் பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஆரம்ப கால வாழ்க்கைசிக்கந்தர் பக்த், 1918ஆம் ஆண்டு தில்லியின் குரேஷ் நகரில் பிறந்தார். இவர் தில்லியிலுள்ள ஆங்கிலாய-அரபு மூத்த மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், ஆங்கிலேய-அரபிக் கல்லூரியில் (இப்போது சாகிர் உசேன் கல்லூரி என அழைக்கப்படுகிறது) தனது இளம் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இவர் வளைதடிப் பந்தாட்ட வீரராக இருந்தார். மேலும் தில்லி பல்கலைக்கழக அணியியையும், தில்லியையும் பல்வேறு போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் சுதந்திர வளைதடிப் பந்தாட்ட சங்கத்தில் விளையாடி அதன் தலைவராகவும் இருந்தார். அரசியல் வாழ்க்கை1952ஆம் ஆண்டில் பக்த், இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக தில்லி மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968இல் தில்லி மின்சார விநியோகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969இல் காங்கிரசு கட்சி பிளவுபட்ட போது இவர் நிறுவன காங்கிரசுடன் தங்கினார். பின்னர் தில்லி பெருநகர அமைப்புக்கு நிறுவன காங்கிரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975 ஜூன் 25 அன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது, பகத் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து 25 ஜூன் 1975 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திசம்பர் 1976 இல் விடுவிக்கப்படும் வரை ரோத்தக் மாவட்டச் சிறையில் இருந்தார். பிரதமர் இந்திரா காந்தி மார்ச் 1977இல் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டவுடன், அவர்கள் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கினர். மார்ச் 1977இல், புது தில்லியிலுள்ள சாந்தனி சவுக் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி வேட்பாளராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொரார்ஜி தேசாய் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் பக்தை வேலைகள், வீட்டுவசதி, வழங்கல் மற்றும் மறுவாழ்வு துறைகளுக்கான அமைச்சராக நியமித்தார். பக்த் ஜூலை 1979 வரை இந்தப் பொறுப்பில் இருந்தார். 1980 இல் ஜனதா கட்சி பிளவுபட்டது. இவர், பாரதிய ஜனதாவுடன் இணைந்திருந்தார். பின்னர் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984இல் இவர் பாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1990இல் மத்தியப் பிரதேசத்திலிருந்து இந்திய மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992இல் இவர் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரானார். 1996 ஏப்ரல் 10 அன்று இவர் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மே 1996இல், வாச்பாய் தனது அரசாங்கத்தை அமைத்தபோது இவருக்கு நகர்ப்புற விவகார அமைச்சர் பதவியை வழங்கினார். இருப்பினும், இவர் வேறு ஒரு உயர் பதவியை கோரினார். பின்னர், மே 24 அன்று இவருக்கு வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. வாச்பாய் அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. 1 ஜூன் 1996 அன்று அரசாங்கம் கவிழ்ந்தபோது இவரும் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் ஒரு வாரத்திற்கும் மேலாக வெளியுறவு அமைச்சராக இவர் மீண்டும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரானார். 1998 இல் வாச்பாய் மீண்டும் பிரதமரானதும், இவர் தொழில்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 2002 வரை பதவியில் இருந்தார். கூடுதலாக, இவர் மாநிலங்களவையில் சபைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொழில்துறை அமைச்சராக முழு பதவியில் இருந்தபின், இவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், 2002இல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். கேரள ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பாஜக தலைவர் இவர்தான். விருதுகள்2000 ஆம் ஆண்டில் இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது. பாஜகவிலிருந்து அடல் பிகாரி வாச்பாய், லால் கிருஷ்ண அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோருக்கும் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டுள்ளது. வாச்பாய்க்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.[3] இறப்புபக்த், 9 ஏப்ரல் 2002 அன்று மாநிலங்களவையில் தனது பதவிக்காலத்தை முடித்தார். 9 நாட்களுக்குப் பிறகு, இவர் சுக்தேவ் சிங் காங்கிற்குப் பிறகு கேரள ஆளுநராகப் பதவியேற்றார். 83 வயதில், இவர் கேரள மாநிலத்தின் மூத்த ஆளுநராக இருந்தார். மேலும், தான் இறக்கும் வரை இந்த பதவியில் இருந்தார். 23 பிப்ரவரி 2004 அன்று கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிப்ரவரி 19 அன்று செய்யப்பட்ட குடல் அறுவை சிகிச்சையின் சிக்கல்களால் பக்த் இறந்தார். பதவியில் இறந்த கேரளாவின் முதல் ஆளுநர் இவராவார்.[4][5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia