திருநீற்றுப் புதன்

திருநீற்றுப் புதன்
கடைப்பிடிப்போர்பல கிறித்துவ பிறிவுகள்
வகைகிறித்தவம் (யூதம் வழி)[1]
அனுசரிப்புகள்திருப்பலியின் போது குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது சாம்பல் பூசுவது வழக்கம்
நாள்உயிர்த்த ஞாயிறுக்கு 46 நாட்களுக்கு முன்
2024 இல் நாள்பெப்ரவரி 14
2025 இல் நாள்மார்ச் 5
2026 இல் நாள்பெப்ரவரி 18
2027 இல் நாள்பெப்ரவரி 10
நிகழ்வுஆண்டுதோரும்
தொடர்புடையனதவக் காலம்
உயிர்த்த ஞாயிறு

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே [2][3]. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.

திருநீறு பூசும் நிகழ்ச்சி

திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.

திருநீற்றுப் புதன் வரும் நாள்

பொதுவான கிரகோரியன் கிறித்தவ நாட்காட்டிப்படி, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வருகின்ற முழுநிலா நாளையொட்டி வருகின்ற ஞாயிறு அவ்விழா நிகழும். இது பண்டைய யூத மரபுப்படி அமைந்த பாஸ்கா விழா கணிப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே, திருநீற்றுப் புதன் பெப்ருவரி 4ஆம் நாளிலிருந்து மார்ச் 10ஆம் நாள் வரை ஏதாவது ஒரு புதனன்று வரலாம். 2011ஆம் ஆண்டு இவ்விழா மார்ச் 9ஆம் நாள் வந்தது. 2014ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் மார்ச் 5ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

திருநீற்றுப் புதன் கொண்டாட விவிலிய அடிப்படை

கிறித்தவ விவிலியத்தில் அடங்கியுள்ள புதிய ஏற்பாட்டில் இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. நற்செய்தி நூல்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் புதன்.

முன்னாள்களில் விபூதிப் புதன் என்றும் இப்பொழுது திருநீற்றுப் புதன் (சாம்பல் புதன்) எனவும் வழங்கப்படுகின்ற இந்நாளில் கிறித்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலைத் தம்மீது தடவிக் கொள்கிறார்கள். சாம்பல் தவத்திற்கும் தன்னொறுத்தலுக்கும் மன மாற்றத்திற்கும் அடையாளம்.

கத்தோலிக்க சபை வழக்கப்படி, கடந்த ஆண்டு குருத்து ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, சாம்பலாக்கிக் கோவிலில் வைப்பர். அங்கே வழிபாட்டின்போது அச்சாம்பல் மந்திரிக்கப்படும். அதைக் கிறித்தவ குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது (நெற்றியில்) பூசுவார்; வழக்கமாக சிலுவை அடையாளத்தில் இப்பூசுதல் இருக்கும்.

அவ்வாறு பூசும்போது, குரு (திருத்தொண்டர்) கீழ்வரும் சொற்களைக் கூறுவார்:

அல்லது

உரோமையில் 2012 திருநீற்றுப் புதன் கொண்டாட்டம்

2012ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் பெப்ருவரி 22ஆம் நாள் வருகிறது. அன்று மாலையில் உரோமை நகரில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வழிபாடு நிகழ்த்தினார். வழக்கம்போல, உரோமை புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து பவனி தொடங்கியது. பின்னர் புனித சபீனா கோவிலில் வழிபாடு நடந்தது.

புனித சபீனா கோவில் உள் தோற்றம். உரோமை நகர். காலம்: 5ஆம் நூற்றாண்டு.

"மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் என நினைத்துக்கொள்" என்னும் விவிலியக் கூற்றை (தொடக்க நூல் 3:19) மையமாகக் கொண்டு திருத்தந்தை மறையுரை ஆற்றினார்.

பின்னர் வழிபாட்டில் கலந்துகொண்ட கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர் ஆகியோரின் தலைமீது திருத்தந்தை பெனடிக்ட் புனித நீறு பூசி, சிலுவை அடையாளம் வரைந்தார். அவரது தலைமீது கர்தினால் ஒருவர் அவ்வாறே நீறு பூசினார்.

குறிப்புகள்

  1. "Prayers and Reflections- buying ash from the Holy Land". Ash Wednesday. Archived from the original on 2012-04-24. Retrieved 2012-03-15.
  2. சாம்பல் புதன்
  3. கத்தோலிக்க கலைக்களஞ்சியம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya