இச்சான் ஆன்காக் மையம், சியர்சு கோபுரம், அரசர் அப்துலாச் பன்னாட்டு வானூர்தி நிலையம், மெக்மேத்-பியர்சே சூரிய தொலைநோக்கி , அரசர் அப்துலாச் பல்கலைக்கழகம், ஒன் மேக்னிபிசன்ட் மைல், ஒன்டரி மையம்
பச்லுர் ரகுமான் கான் (வங்காளம்: ফজলুর রহমান খান, Fozlur Rôhman Khan) (3 ஏப்ரல் 1929 – 27 மார்ச்சு 1982) என்பவர் வங்கதேச அமெரிக்கர்[2]. இவர் கட்டமைப்புப் பொறியாளரும் வடிவமைப்பாளரும் ஆவார். வானளாவிகளின் கட்டுமான அமைப்பை துவக்கியவர்.[3][4][5] அதனால் வானளாவிகளின் குழாய் வடிவமைப்பின் தந்தை என கருதப்படுகிறார்.[6] இவர் கணினி உதவு வடிவமைப்பின் (computer-aided design (CAD)) முன்னோடி மட்டுமல்லாது 1973 முதல் 1998 வரை உலகின் உயரமான வானளாவியாக இருந்த சியர்சு கோபுரத்துக்கும் 100 மாடி வானளாவியான இச்சான் ஆன்காக் மைய கட்டடத்துக்கும் வடிவமைப்பாளாராக கட்டமைப்புப் பொறியாளராக இருந்தார்.[7]
மற்றவர்களைவிட கானே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வானளாவிகள் கட்டுவது மீண்டெழ காரணமாக இருந்தார் [8] . கட்டமைப்பு பொறியியலில் இவர் புகுத்திய புதிய முறை காரணமாக இவர் கட்டமைப்புப் பொறியியலின் ஐன்சுடீன் என்றும் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கட்டமைப்புப் பொறியாளர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் முறையே நவீன வானளாவிகளின் கட்டமைப்பில் இன்றும் அடிப்படையாக உள்ளது.[3][9] இவரை சிறப்பிக்கும் விதமாக வானளாவி கட்டட அமைப்பு பச்லுர் ரகுமான் கான் வாழ்நாள் சாதனை விருதை அறிவித்துள்ளது.
வானளாவிகளுக்காக நன்கு அறியப்பட்டிருந்தாலும் சௌதி அரேபியாவில் உள்ள அரசர் அப்துலாச் பன்னாட்டு வானூர்தி நிலையம், மெக்மேத்-பியர்சே சூரிய தொலைநோக்கி உட்பட பல கட்டடங்களுக்கு வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.[10][11]
பிறப்பு
பச்லுர் ரகுமான் கான் 3 ஏப்பிரல் 1929இல் பிரித்தானிய இந்தியாவில் டாக்கா நகரில் பிறந்தார்[12] . டாக்காவுக்கு அருகிலுள்ள பரித்பூர் மாவட்டத்திலுள்ள பன்டரிகண்டீ என்ற சிற்றூரில் வளர்ந்தார். இவரின் தந்தை அப்துல் உயர் நிலைப்பள்ளியின் கணக்கு ஆசிரியர், மேலும் பாடபுத்தக ஆசிரியரும் ஆவார். பின்னாளில் வங்காள மாகாணத்தின் பொது செய்தி துறையின் இயக்குநராக பொருப்பு வகித்தார்.[12] இவரின் தந்தை பணி ஓய்வுக்குப் பின் டாக்காவிலுள்ள சகன்னாத் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.
கான் டாக்காவிலுள்ள அர்மானிடோலா அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்பு சீபூரிலுள்ள (தற்போது அவுராக்கு அருகில் உள்ளது) வங்காள பொறியியல் கல்லூரியிலும் பின்பு டாக்காவிலுள்ள அசனுல்லா பொறியியல் கல்லூரியிலும் குடிசார் பொறியியல் படித்தார். அமெரிக்காவின் புல்பிரைட் மற்றும் பாக்கித்தானிய அரசின் படிப்புதவித்தொகை கிடைத்ததால் 1952 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு படிக்க சென்றார். அங்கு சாம்பெய்ன்-அர்பானா என்ற இடத்திலுள்ள இலினோய் பல்கலைக்கழகத்தில் படித்தார். மூன்று ஆண்டுகளில் கான் இரண்டு முதுகலை பட்டங்களையும் ஒரு முனைவர் பட்டத்தையும் பெற்றார். பயன்பாட்டு விசையியல் கோட்பாட்டிலும் கட்டமைப்புப் பொறியியலில் முதுகலை பட்டமும் கட்டமைப்பு பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார் [13]. "செவ்வக வடிவ முன்னழுத்தப்பட்ட பைஞ்சுமை உத்திரத்தின் மீதான பல்வேறு வகை வடிவமைப்புகளின் தொடர்பை பகுத்துணரும் அவதானிப்பு" என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டை மேற்கொண்டார்.[14]