பிரைசு கன்யன் தேசியப் பூங்கா
பிரைசு கன்யன் தேசியப் பூங்கா (Bryce Canyon National Park) தென்மேற்கு யூட்டாவில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்கா ஆகும். இப்பூங்காவின் முக்கிய அம்சம் பிரைசு கன்யன் ஆகும். "கன்யன்" என்பது செங்குத்துப் பள்ளத்தாக்கைக் குறிக்கும். ஆனால், பெயர் குறிப்பது போல் இரு ஒரு பள்ளத்தாக்கு அல்ல. ஆனால் இது, போன்சோகன்ட் மேட்டுநிலத்தின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாக அமைந்த மிகப் பெரிய படி அமைப்புக்களின் தொகுதி ஆகும். பிரைசு, ஹூடூ (hoodoo) எனப்படும் நிலவியல் அமைப்புக்களுக்குப் பெயர் பெற்றது. இவ்வமைப்புக்கள் ஆறு, மற்றும் ஏரிப் படுகைகளின் படிவுப் பாறைகள் ஓடை அரிமானத்தாலும், உறைபனியாலும் ஏற்படும் சிதைவினால் உருவானவை. பாறைகளின் சிவப்பு, செம்மஞ்சள், வெள்ளை நிறங்கள் பூங்காவுக்கு வருபவர்களுக்குக் கண்கவர் காட்சியாக அமைகின்றது. "பிரைசு" அருகாமையில் உள்ள சியன் தேசியப் பூங்காவிலும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பிரைசின் விளிம்பு 8,000 இலிருந்து 9,000 அடி (2,400 - 2,700 மீட்டர்) வரை வேறுபடுகின்றது. பிரைசு கன்யன் பகுதியில் 1850களில் மோர்மன் முன்னோடிகள் குடியேறினர். 1874 இல் இங்கே குடியேறியிருந்த எபனேசர் பிரைசு என்பவரின் பெயரைத் தழுவியே இவ்விடத்தின் பெயர் ஏற்பட்டது.[2] பிரைசு கன்யனைச் சுற்றியுள்ள பகுதி, சனாதிபதி வாரன் ஜி. ஹார்டிங்கால் 1923 இல் தேசிய நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டது. 1928 இல் அமெரிக்கக் காங்கிரசு இதனைத் தேசியப் பூங்காவாக அறிவித்தது. 35,835 ஏக்கர் (55.992 ச.மைல்; 14,502 எக்டேர்; 145.02 ச கி.மீ.) பரப்பளவைக்[3] கொண்ட இப்பூங்காவைக் காண சியன் தேசியப் பூங்கா (2016 இல் ஏறத்தாழ 4.3 மில்லியன்) அல்லது கிராண்ட் கன்யன் தேசியப் பூங்காவுக்கு (2016 இல் ஏறத்தாழ 6.0 மில்லியன்) வருவோரிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைவானோரே வருகின்றனர். பிரைசு சற்றுத் தொலைவில் இருப்பதே இதற்குக் காரணம். 2016 இல் பிரைசு கன்யனுக்குப் பொழுதுபோக்குக்காக வந்தோர் தொகை 2,365,110. இது முன்னைய ஆண்டிலும் 35% அதிகமானது.[1] புவியியலும் காலநிலையும்பிரைசு கன்யன் தேசியப் பூங்கா தென்மேற்கு யூட்டாவில், சியன் தேசியப் பூங்காவில் இருந்து 50 மைல் (80 கி.மீ.) தொலைவிலும், 1,000 அடி (300 மீட்டர்) உயரத்திலும் உள்ளது.[4][5] இதனால், பிரைசு கன்யனின் காலநிலை கூடிய குளிரானதும், ஆண்டுக்கு 15 - 18 அங்குலம் (380 - 460 மிமீ) மழை வீழ்ச்சியைக் கொண்டதும் ஆகும்.[6][7] ஆண்டிற்கான வெப்பநிலை சராசரியாக சனவரியில் குறைந்தது 9°ப (−13°ச) இலிருந்து யூலையில் சராசரி அதிக அளவாக 83°ப (28°ச) வரை காணப்படுகின்றது. ஆனால், கடுமையான வெப்பநிலைகள் −30 முதல் 97°ப (−34 முதல் 36°ச) ஆக அமையலாம்.[7] இங்கே பதிவான ஆகக் கூடிய வெப்பநிலை 2002 யூலை 14 ஆம் தேதி நிலவிய 98°ப (37°ச) ஆகும். மிகக் குறைவான வெப்பநிலை −28°ப (−33°ச) ஆக 1972 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவானது.[8] இத்தேசியப் பூங்கா வட அமெரிக்காவின் கொலராடோ மேட்டுநிலப் புவியியல் மாகாணத்துக்கும், போன்சோனட் பிளவுக்கு மேற்கில் அமைந்த போன்சோனட் (பையூட் மொழியில் பீவரின் இருப்பிடம் எனப் பொருள்படும்) மேட்டுநிலத்தின் தென்கிழக்கு விளிம்புக்கும் இடையில் உள்ளது.[9] பூங்காவுக்கு வருவோர் மேட்டுநிலப் பகுதியூடாக நுழைந்து மேட்டுநிலத்தின் விளிம்புக்கு மேலாக பிளவைக் கொண்டுள்ள பள்ளத்தாக்கையும், அதற்கு அப்பல் உள்ள "பாரியா" (சேற்று நீரைக் குறிக்கும் பையூட் மொழிச் சொல்) ஆற்றையும் பார்க்கின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia