பைக்கனூர் விண்வெளி ஏவுதளம்![]() ![]() பைக்கானூர் விண்வெளி ஏவுதளம் (Baikonur Cosmodrome, உருசியம்: космодром «Байконур») உலகின் முதலாவதும் மிகப்பெரியதுமான விண்வெளி ஏவுதள நிலையமாகும். இது கசக்சுத்தானில் பாலை புல்வெளியில் (இசுடெப்பி) ஏரல் கடலுக்கு கிழக்கில் ஏறத்தாழ 200கிமீ (124 மைல்) தொலைவில், சைர் தர்யா ஆற்றுக்கு வடக்கில் கடல் மட்டத்திற்கு 90 மீட்டர் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இதன் அண்மையில் உள்ள தொடர்வண்டி நிலையம் இத்யுர்தம் ஆகும். இதனை கசக் அரசு உருசியாவிற்கு (தற்போது 2050 வரை) குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்த நிலையத்தை உருசிய நடுவண் விண்வெளி நிறுவனமும் உருசிய விண்வெளிக் காப்புப் படையும் கூட்டாக மேலாண்மை செய்கின்றன. குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலப்பகுதி நீள்வட்ட வடிவில் கிழக்கு-மேற்காக 90கிமீ (56 மைல்) நீளமும் வடக்கு-தெற்காக 85கிமீ (53 மைல்) நீளமும் உள்ளது. இதன் மையத்தில் விண்வெளி மையம் அமைந்துள்ளது. பிந்தைய 1950களில் சோவியத் ஒன்றியத்தால் சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான அடித்தளமாக இந்த நிலையம் கட்டமைக்கப்பட்டது. தற்போதைய உருசிய விண்வெளித் திட்டத்தில் பைக்கானூரிலிருந்து ஓராண்டில் வணிகத்திற்கான, படைத்துறைக்கான, அறிவியலுக்கான பல பயணங்கள் ஏவப்பட்டு வருகின்றன.[1][2] தற்போது, அனைத்து ஆளுள்ள விண்வெளிப் பயணங்களும் பைக்கானூரிலிருந்து ஏவப்படுகின்றன.[3] மனித வரலாற்றிலேயே முதல் ஆளுள்ள விண்கலமான வஸ்தோக் 1 மற்றும் அதன் முன்னோடியான, உலகின் சுழல்தட விண்கலமான இசுப்புட்னிக் 1 பைக்கானூரின் ஏவுதளங்களில் ஒன்றிலிருந்துதான் ஏவப்பட்டன; இந்த ஏவுதளம் யூரி ககாரின் நினைவாக காகரினின் துவக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia