முடியுருக் குருதிச்சுற்றோட்டம்
முடியுருக் குருதிச்சுற்றோட்டம் (Coronary circulation) எனப்படுவது இதயத்திற்கு, குறிப்பாக இதயத்தசைக்கு குருதியை வழங்கும் மற்றும் இதயத்தசையில் இருந்து குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் குருதி செலுத்தப்படுவதைக் குறிக்கும். இதயத்தசைக்கு ஆக்சிசன் நிரம்பிய குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து ஆக்சிசன் அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும். உடலின் ஏனைய பாகங்களில் உள்ள தமனிகள் பொதுவாக தமக்கிடையே பிணைப்பைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக காலுக்குச் செல்லும் பிரதான நாடியில் அடைப்பு ஏற்படின் அதற்கு மேலே உள்ள வேறொரு நாடி குருதியை எடுத்துச் செல்லும், இது இணை இரத்த ஒட்டம் எனப்படும். ஆனால் பெருந்தமனியில் இருந்து புறப்படும் முடியுருத்தமனிகள் மட்டுமே இதயத்துக்கு குருதியை வழங்குகின்றன, ஆதலால் இது முடிவுற்ற சுற்றோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. மூளை உட்பட உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஆக்சிசன் கலந்த குருதி சீராக எடுத்துச் செல்லப்படுவதற்கு இதயத்தின் தசையின் சுருங்கி விரியும் தொழிற்பாடு அவசியமானது. எனவே அத்தசைகளுக்கு ஆக்சிசன் மற்றும் ஊட்டக்கூறுகளை வழங்கும் முடியுருக் குருதிச்சுற்றோட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தடைப்படின் இதயத்தின் தசைகள் ஆக்சிசன் பெற்றுக்கொள்வது அற்றுப்போய் அவை நலிவுறும் வேளையில் இதயத்தசை இறப்பு (மாரடைப்பு) ஏற்படுகின்றது. முடியுரு நாடியின் அமைப்புஇடது, வலது என இரு முடியுரு நாடிகள் பெருநாடி அடைப்பிதழுக்குச் சற்று மேலே பெருந்தமனியின் ஆரம்பப் பகுதியான ஏறு பெருநாடியில் இருந்து புறப்படுகின்றன.[1] பெருநாடி அடைப்பிதழ்களின் ஒவ்வொரு இதழ்களும் நாடியின் சுவர்களும் சேர்ந்து மூன்று குழிவுகளை உருவாக்குகின்றன. இவை பெருநாடிக் குழிவுகள் (aortic sinus) அல்லது வல்சல்வாவின் குழிவுகள் எனப்படுகின்றன. இடது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து இடது முடியுரு நாடியும் முற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து வலது முடியுரு நாடியும் தோன்றுகின்றன. வலது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து முடியுருநாடி தோன்றாமையால் அது முடியுருநாடியிலாக் குழிவு எனப் பெயர் கொண்டுள்ளது.[2] பெருநாடிக் குழிவுகளின் பெயரீட்டில் வேறுபாடுகள் உள்ளது. இவை இடது பிற்புறப் பெருநாடிக் குழிவு, முற்புறப் பெருநாடிக் குழிவு, வலது பிற்புறப் பெருநாடிக் குழிவு என்று மரபு வழிப் பெயரிட்டாலும் இடது, வலது, பிற்புறக் குழிவுகள் என்று சில மூலங்களிலும் பெயரிடப்பட்டுள்ளது.[3] இடது முடியுரு நாடியில் இருந்து இடது முற்புற இறங்கு நாடியும் சுற்றுவளை நாடியும் கிளைகளாகப் பிரிகின்றன. இவை இதயத்தின் இடது மேலறை, கீழறைகளுக்கும் கீழறைப் பிரிசுவருக்கும் குருதியை வழங்குகின்றன. இடது சுற்றுவளை நாடியில் இருந்து இடது விளிம்பு நாடி தோன்றுகின்றது. வலது முடியுரு நாடியில் இருந்து பிற்புற இறங்கு நாடியும் வலது விளிம்பு நாடியும் தோன்றுகின்றது. இவை வலது மேலறை, கீழறைகளின் பகுதிகள், கீழறைப் பிரிசுவர் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியம் ஆகியனவற்றுக்கு குருதியை விநியோகிக்கின்றது.[4] முடியுரு நாடிக் கிளைகள்
முடியுரு நாடிப்பின்னல்கள்சுற்றுவளை நாடி வலது முடியுரு நாடியின் சிறுகிளைகளுடன் இணைந்து கொள்கின்றது. முற்புற இறங்கு நாடியின் (வேறு பெயர்: முற்புறக் கீழறையிடை நாடி) சிறுகிளைகள் வலது முடியுரு நாடியின் பிற்புற இறங்கு நாடி கிளைகளுடன் பொருந்துகின்றன. இவை முடியுரு நாடிப் பின்னல்கள் அல்லது முடியுரு தமனிப் பின்னல்கள் ஆகும். இந்த முடியுரு நாடிப்பின்னல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதன்மையான நாடியில் அடைப்பு ஏற்பட்டு, குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது வேறொரு நாடி குருதி வழங்குதலை முழுவதுமாக எடுத்துக்கொள்கின்றது. இவ் இயக்கத்துக்கு நாடிகளில் உள்ள அழுத்த வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கின்றது. உயர் அழுத்தம் காரணமாக நாளடைவில் புதிதாகத் திறந்து விடப்பட்ட கிளை நாடியின் பருமன் கூடி விரிவடையும். எனினும் இதயத்தில் உள்ள நாடிப் பின்னல்கள் மெய்யானவை அல்ல, தொழிற்பாட்டு முடிவுறுத் தமனி எனப்படுபவை. உடலின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் தொழிற்பாடு குன்றிய நிலையில் இருக்கின்றன. ஒரு முடியுரு நாடியில் அல்லது அதன் கிளையில் அடைப்பு ஏற்படும்போது அவை குருதியை வழங்கும் பகுதிகள் இறக்கின்றன. இதுவே இதயத் தசை இறப்புக்கான காரணியாக உள்ளது. குருதியூட்டக்குறை இதய நோய் அல்லது முடியுருநாடி இதய நோய் உள்ளவர்களில் ஏற்படக்கூடிய முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு மிகவும் மந்தமாக ஏற்படும் பட்சத்தில் தொழிற்படாத நாடிப் பின்னல்கள் நாளடைவில் புதிய நாடிகளைத் திறந்துவிடும் வாய்ப்பு உண்டு. முடியுரு நாடிப் பின்னல்களில் புதிதாக நாடிக்கிளைகள் திறந்துவிடப்படுவதற்கு உடற்பயிற்சியும் ஒரு காரணமாகின்றது. தொழிற்பாடுபெருநாடியில் இருந்து புறப்பட்ட முடியுரு நாடிகள் இதயத்தின் தசை மற்றும் பல்வேறு பாகங்களுக்கு உயிர்வளி கலந்த குருதியை விநியோகிக்கின்றது. ஒரு ஆரோக்கியமான முடியுருநாடி தம்மைத்தாமே குறுக்குவதன் அல்லது விரிப்பதன் மூலம் இதயத்துக்குத் தேவையான குருதி வழங்குதலைக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால், இவற்றுள்ளே தமனிக்கூழ்மைத்தடிப்பு ஏற்படும்போது ஏற்கனவே சிறிதாக இருக்கும் இந்த நாடிகளின் விட்டம் மேலும் சிறிதாகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் மார்பு நெறிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது. தமனிக்கூழ்மைத்தடிப்பு இன்னமும் வீங்கி முடியுரு நாடிக் குருதிக்குழாய் வெடித்து குருதி உள்ளே உறையும் சந்தர்ப்பத்தில் இதயத்தசை இறப்பு ஏற்படுகின்றது. இதயத்தில் இருந்து உயிர்வளியகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் என அழைக்கப்படுகின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia