யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டுயாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு என அறியப்படும் கல்வெட்டானது, யாழ்ப்பாணத்தின் ஐரோப்பியர் நகரப் பகுதியின் பிரதான வீதியில் இருந்த உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் கீழ்ப் பகுதியில் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஆகும். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கல்வெட்டு கோட்டை அரசனான ஆறாம் பராக்கிரமபாகுவின் பெயரால் பொறிக்கப்பட்டது. இது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. 1968 இல் தொல்பொருட் திணைக்களத்தினர் இதன் மைப்பிரதி ஒன்றை எடுத்தனர். இந்த மைப்பிரதி போதிய தெளிவின்றி இருந்ததால், 1969 இல் பேராசிரியர் கா. இந்திரபாலா இன்னொரு மைப்பிரதியை எடுத்து இக்கல்வெட்டை வாசித்துப் பதிப்பித்தார்.[1] கல்வெட்டுச் செய்திதெரியக் கூடிய பக்கத்தில் இருந்த 25 வரிகளில் 10 வரிகள் வாசிக்க முடியாதபடி அழிந்துவிட்டன. வாசிக்கக் கூடியதாக இருந்த 15 வரிகளில் காணப்பட்டவை ஒரு அரசனின் பெயர் விபரங்கள் மட்டுமே. இந்த விபரங்களை வைத்து இக்கல்வெட்டு ஆறாம் பராக்கிரமபாகுவின் பெயரால் வெட்டப்பட்டது என இந்திரபாலா கூறுகின்றார். இப்பகுதியில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலம் குறித்த தகவல் இருந்த போதிலும் அது தெளிவாக இருக்கவில்லை. கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காரணம் குறித்த விபரங்கள் வேறு கல்லிலோ அல்லது இதே கல்லின் மற்றப் பக்கங்களிலோ இருந்திருக்கக்கூடும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இக்கல்லின் ஒரு பக்கம் மட்டுமே தெரியக்கூடிய நிலையில் இருந்தது. இதன் மற்றப் பக்கங்களிலும் எழுத்துக்கள் இருக்கக்கூடும் என்பது இந்திரபாலாவின் கருத்தாக இருந்தது.[1] வரலாற்றுப் பின்னணிஆறாம் பரக்கிரமபாகு கிபி 1412 ஆம் ஆண்டு தொடக்கம் அவன் இறக்கும் வரை 55 ஆண்டுகள் கோட்டே இராச்சியத்தை ஆண்ட சிங்கள அரசன். இவனது வளர்ப்பு மகன் தென்னிந்தியாவைச் சேர்ந்த செண்பகப் பெருமாள் என்பவன். இவன் தனக்குப் பின் கோட்டே இராச்சியத்தைக் கவர்ந்து கொள்வான் என எண்ணிய பராக்கிரமபாகு, செண்பகப் பெருமாளைக் கோட்டேயில் இருந்து அகற்றும் நோக்குடன் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுமாறு அனுப்பினான். வீரனான செண்பகப் பெருமாள், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனைத் துரத்திவிட்டு 1450 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கோட்டேயின் மேலாதிக்கத்தை நிறுவி நல்லூரில் இருந்து அதை நிர்வகித்தான். நல்லூரை யாழ்ப்பாண அரசின் தலைநகரம் ஆக்கியவன் இவனே என்ற கருத்தும் உண்டு. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவனும் இவனே எனக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கோட்டே அரசு சார்பில் அவன் யாழ்ப்பாணத்தில் நிர்வாகம் நடத்தினான். 1467 இல் பராக்கிரமபாகு இறந்தபோது, யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கிய செண்பகப் பெருமாள் கோட்டேக்குச் சென்று அரசுரிமையைக் கைப்பற்றிப் புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் அரசன் ஆனான். இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தமிழ் அரசு ஏற்பட்டது.[2] எனவே, 1450 முதல், 1467 வரையான 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் ஆறாம் பரக்கிரமபாகுவின் ஆட்சியின் கீழ் இருந்தது. இக்கல்வெட்டை முதலில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலோ அல்லது வேறு ஒரு கட்டிடத்திலோ பொறித்திருக்கக்கூடும். 1620ல் போர்த்துக்கேயர் நல்லூரைக் கைப்பற்றித் தலைநகரைப் புதிய இடத்துக்கு மாற்றியபோது நல்லூரில் இருந்த கோயில்களையும் கட்டிடங்களையும் இடித்து அதன் கற்களைக் கொண்டு புதிய யாழ்ப்பாண நகரத்தில் கோட்டையையும் பிற கட்டிடங்களையும் அமைத்தனர்.[3] இதுவே இக்கல்வெட்டு யாழ்ப்பாண நகருக்கு வரக் காரணமாயிற்று. கல்வெட்டின் காலம்கல்வெட்டில் இருந்து நேரடியாகவே அதன் காலத்தை அறிய முடியாவிட்டாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அரசனின் பெயரை வைத்தும், எழுத்தமைதியை அடிப்படையாகக் கொண்டும், வரலாற்றுப் பின்னணிகளைச் சான்றாகக் கொண்டும் இக்கல்வெட்டின் காலத்தை அறிந்து கொள்ள முடியும். வரலாற்றுப் பிண்ணணியை வைத்துப் பார்க்கும்போது 1450க்கும் 1467க்கும் இடைப்பட்ட காலத்திலேயே ஆறாம் பரக்கிரமபாகுவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது. எனவே, இக்காலத்திலேயே இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. குறிப்புகள்உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia