விண்வெளி வீரரான வலரி பைக்கோவ்ஸ்கி எட்டு நாட்களுக்குச் சுற்றுப்பாதையில் இருப்பதாக முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தும், சூரியக் கதிர்வீச்சு அதிகமாக இருந்ததால் திட்டத்தில் பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதியில் 5 நாட்களிலேயே பூமிக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். எனினும் தனி ஒருவரை ஏற்றிக்கொண்டு சுற்றுப்பாதையில் அதிக நாட்கள் இருந்த விண்கலம் இன்றுவரை இதுவே ஆகும்.
இவ் விண்கலத்தின் கழிவு சேகரிப்புத் தொகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாகக் கலத்தினுள் நிலைமை நன்றாக இருக்கவில்லை. பைக்கோவ்ஸ்கி புவிக்குத் திரும்பும் நேரத்தில், வஸ்தோக் 1, 2 ஆகிய கலங்களைப் போலவே இதிலும் சேவைக் கலத்திலிருந்து சரியாகப் பிரிய முடியாத பிரச்சினை இருந்தது. இந்த மீள்கலம் இப்போது கலூகாவில் உள்ள த்சியோல்கோவ்ஸ்கி அருங்காட்சியகத்தில் வைக்கப்படுள்ளது.