வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம், 2010
வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம், 2010 (Foreign Contribution (regulation) Act, 2010 (FCRA) 2010-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. தேச நலனுக்காக இந்தியாவில் இயங்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், சமயம் சார்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியுதவிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், பெற்ற நிதியுதவிகளின் கணக்குகள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதற்கும் இயற்றப்பட்ட சட்டமாகும்.[3][4] 1976-ஆண்டின் இச்சட்டத்தின் குறைபாடுகளைப் போக்க இப்புதிய சட்டம் இயற்றப்பட்டது. சில தனிநபர்கள் அல்லது சங்கங்கள் அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் வெளிநாட்டு நிதி பங்களிப்பு அல்லது வெளிநாட்டு விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வதையும் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவதற்கும், தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயல்களுக்கும் வெளிநாட்டு பங்களிப்பு அல்லது வெளிநாட்டு விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வதையும், பயன்படுத்துவதையும் தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இச்சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக செயல்பட்ட 4,470 அரசு சார்பற்ற அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவிகளை பெற இயலாத படி, 2015-ஆம் ஆண்டில் இந்திய அரசு தடை செய்தது.[5] வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத் திருத்தம், 20202010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தில் இருந்த பல குறைபாடுகளை களைய, 2020-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.[6][7] 2020-ஆம் ஆண்டில் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் படி, எந்தவொரு அரசு சாரா தொண்டு நிறுவனம் அல்லது அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் ஆதார் எண்களை வழங்குவதை கட்டாயமாக்கப்பட்டது. என்ஜிஓக்கள் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவீனங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிரத்யேக எப்சிஆர்ஏ வங்கி கணக்குகளில் மட்டுமே வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும். வெளிநாட்டு நிதியுதவி பெறும் செயல்களில் பொதுத்துறை ஊழியர்கள் ஈடுபடக் கூடாது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. "சுருக்கமான விசாரணை" மூலம் ஒரு அமைப்பு வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கத்திற்கு அதிகாரங்கள் வழங்குகிறது.[8] இந்த திருத்தச் சட்டம் இணக்க பொறிமுறையை வலுப்படுத்துவதோடு வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தின் நலனுக்காக உழைக்கும் உண்மையான அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது சங்கங்களுக்கு உதவுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.[9][10] இந்தத் திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் 21 செப்டம்பர் 2020 அன்றும்; மாநிலங்களவையில் 23 செப்டம்பர் 2020 அன்றும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சர்ச்சைகள்இந்தியாவில் 32 இலட்சத்திற்கு மேற்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் செயல்படுகிறது.[11] 2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதியுதவிகளுக்கு சரியான கணக்குகள் பராமரிக்காத காரணத்தினால் தேசிய அளவில 8 தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை இந்திய உள்துறை அமைச்சகம் நீக்கியது. [12]அதில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா அறக்கட்டளை பின்னர் கணக்குகளை இந்திய அரசிடம் ஒப்படைத்ததால், அதற்கு மட்டும் நீக்கப்பட்ட பதிவுச் சான்றை இந்திய அரசு மீண்டும் வழங்கியது.[13] [14] 2013-இல் இந்திய அரசின் நிலக்கரி, அலுமினியச் சுரங்கத் திட்டங்கள் மற்றும் அனல் மற்றும் அணு மின் நிலையத் திட்டங்களை எதிர்த்து பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபடச் செய்ததால் கிரீன் பீஸ் இந்தியா மற்றும் தீஸ்தா செதல்வாட் எனும் சமூக செயற்பாட்டாளர் நடத்திய இரண்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய அரசு இரத்து செய்தது.[15][16] [17][18] 2017-இல் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கூட்டத்தில், உறுப்பு நாடுகளான ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியாவில் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக அடக்கு முறைகள் குறித்து தங்கள் கவலையை பதிவு செய்தனர். தெரிவித்தனர்.[19] 2010 வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தை கண்டித்து, 29 செப்டம்பர் 2020 அன்று இந்தியப் பன்னாட்டு மன்னிப்பு அவை இந்தியாவில் தனது அலுவலகத்தை மூடியது. [20] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia