ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி
ஸ்காட்லாண்டின் முதலாம் மேரி (டிசம்பர் 7/8 , 1542 – பிப்ரவரி 8, 1587 ) மேரி ஸ்டுவர்ட் அல்லது ஸ்காட்லாந்து மேரி என அழைக்கப்பட்ட இவர், 1542 ஆம் ஆண்டு டிசம்பர் 14 முதல் 1567 ஆம் ஆண்டு ஜூலை 24 வரை ஸ்காட்லாந்து ராணியாகவும் மற்றும் 1559 ஆம் ஆண்டு ஜூலை 10 முதல் 1560, டிசம்பர் 5 வரை பிரான்ஸ் ராணி மனைவியாகவும் இருந்தார். இவரது தந்தை ஸ்காட்லாந்து அரசன் ஐந்தாம் ஜேம்ஸ் இறந்தபின் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையான இவர் அரியணை ஏறினார். அக்காலத்தில் இவர் பெரும்பாலும் தன இளமை காலத்தை பிரான்ஸ் நாட்டில் கழித்தார். அச்சமயங்களில் ஸ்காட்லாந்து ஆளுனர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அதன் பின்னர் 1558 ல் அவர் பிரான்ஸ் அரசன் பிரான்சிசை திருமணம் செய்தார். அவர் 1559 ல் மன்னர் இரண்டாம் பிரான்சிஸ் என்ற பெயருடன் பிரஞ்சு அரியணை ஏறினார். அதன் பின்னர் 1560 டிசம்பர் 5 ல் மன்னர் இறக்கும் வரை பிரான்ஸ் அரசியாக இருந்தார். அதன் பின்னர் 1561 ஆகஸ்ட் 19 அன்று ஸ்காட்லாந்து திரும்பி அவரின் உறவினரான ஹென்றி ஸ்டுவர்டை திருமணம் செய்து கொண்டார். எனினும் 1567 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹென்றி ஸ்டுவர்டு கொல்லப்பட்டார். அவரின் மரணத்திற்கு காரணம் ஜேம்ஸ் ஹெப்பர்ன் என்று நம்பப்பட்டாலும் 1567 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் விடுவிக்கப்பட்டு அதற்கு அடுத்த மாதம் அவர் மேரியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு எதிராக ஏற்பட்ட ஒரு எழுச்சியைத் தொடர்ந்து மேரி, லுச் லெவென் கோட்டையில் சிறைவைக்கப்பட்டார். அதன் பின்னர் 1567 ஆண்டு ஜூலை 24 ம் தேதி அவர் பதவியை விட்டு நீக்கப்பட்டு அவரின் ஒரு வயது குழந்தை மன்னராக்கப்பட்டது. அதன் பின்னர் தனது உறவினரான இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத்தின் பாதுகாப்பைத் தேடி சென்றார். ஆனால் அதற்கு முன்னால் அவர் இங்கிலாந்து அரியணையைக் கைப்பற்ற முயற்சித்திருந்ததால் சந்தேகத்தின் பெயரில் பதினெட்டரை ஆண்டுகளுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் ராணி எலிசபெத்தைப் படுகொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
|
Portal di Ensiklopedia Dunia