அஞ்செலா டேவிசு
அஞ்செலா இவான் டேவிசு ( Angela Yvonne Davis, சனவரி 26, 1944) அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளரும் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். 1960களில் ஐக்கிய அமெரிக்கப் பொதுவுடமைக் கட்சித் தலைவராக அக்காலத்திய எதிர்ப்பண்பாடு இயக்கங்களில் முன்னணி வகித்தார். கருஞ்சிறுத்தைக் கட்சியின் அலுவல்முறையான உறுப்பினராக இல்லாதபோதும், குடிசார் உரிமைகள் இயக்கங்களில் பங்கேற்றமையால் அக்கட்சியுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தார். சிறைக் குற்றவாளிகளின் உரிமைகளை நிலைநாட்டப் பாடுபட்டார்; இதற்காக கிரிட்டிகல் ரெசிஸ்டன்சு என்ற அமைப்பை நிறுவினார். இது சிறை-தொழிற்சாலை முறையை எதிர்த்தது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டா குரூசு வளாகத்தில் உணர்வியல் வரலாற்றுத் துறையில் பேராசிரியையாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அதே பல்கலைக்கழகத்தின் பெண்ணியக் கல்வி துறைக்கு முன்னாள் இயக்குநராகவும் இருந்துள்ளார்.[2] இவருக்கு பெண்ணியம், ஆபிரிக்க-அமெரிக்கர்கள், மார்க்சியம், பரப்பிசை, சமூக உணர்வியல், தண்டனை மற்றும் சிறைச்சாலைகள் குறித்த மெய்யியல் ஆகியவற்றில் ஆய்வுக்கான விருப்பம் இருந்தது. பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தமையால் 1969இல் கலிபோர்னியா மாநிலத்தின் பல்கலைக்கழகங்களில் இவர் பணியாற்றுவதற்குத் தடை விதிக்க ரானல்ட் ரேகன் கோரினார். 1980களில் இரண்டு முறை ஐக்கிய அமெரிக்க பொதுவுடமைக் கட்சியின் சார்பில் அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia