அடையாளச் சின்னம்![]() அடையாளச் சின்னம் (logo) என்பது, வணிக நிறுவனங்கள், பிற அமைப்புகள் போன்றவற்றையும் சில சமயங்களில் தனியாட்களைக் கூடப் பொதுமக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பயன்படும் ஒரு வரைபடக் குறியீடு ஆகும். அடையாளச் சின்னங்கள் முழுதும் ஒரு வரைபடமாகவோ அல்லது குறித்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் பெயரை உட்படுத்திய அடையாள எழுத்துருக்களாகவோ இருக்கலாம். சில அடையாளச் சின்னங்கள் பண்புருவாக (abstract) அமையும். அருகில் உள்ள "சேஸ் வங்கி"யின் அடையாளச் சின்னம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஐ.பி.எம். கொக்கா கோலா ஆகிய நிறுவனங்களின் அடையாளச் சின்னங்கள் அடையாள எழுத்துருக்களைக் கொண்ட அடையாளச் சின்னங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. அச்சுக்கோத்து அச்சிடும் பழைய காலத்தில் அடையாளச் சின்னங்கள் தனித்துவமாக ஒழுங்கு படுத்தப்படும் அச்சுருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. தற்காலத்தில், அடையாளச் சின்னங்கள் வணிகக் குறியீடு என்பதற்கு ஈடான பொருளில் பயன்பட்டு வருகின்றது[1]. வரலாறுபல்வேறு கண்டுபிடிப்புக்களும், தொழில்நுட்பங்களும், அடையாளச் சின்னங்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளன. இவற்றுள் உருளை முத்திரைகள், நாணயங்கள்[2][3], படவெழுத்து மொழிகளின் பரவல், நீர்க்குறிகள்,[4], அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பன அடங்கும். 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, மேற்கத்திய சமூகங்களை வேளாண்மைச் சமூக நிலையில் இருந்து, தொழிற் சமூக நிலைக்கு மாற்றியது. ஒளிப்படமும், அச்சுத் தொழில்நுட்பமும், விளம்பரத்துறையின் துரித வளர்ச்சிக்கு வித்திட்டன. எழுத்துருக்களையும், படங்களையும் ஒரே பக்கத்தில் இருக்கும்படி செய்யத்தக்க நிலையும் ஏற்பட்டது[5]. எழுத்துருக்களில்கூடப் பல புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றின் வடிவம், வெளிப்படுத்தும் தன்மை என்பவற்றில் அக்காலத்தில் நூல்களை அச்சிடுவதற்காகப் புழக்கத்தில் இருந்த அடிப்படையான எழுத்துருக்களுக்கும் அப்பால், தடித்த எழுத்துருக்கள், அலங்கார எழுத்துருக்கள் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ![]() கலைகளின் நோக்கங்களும் விரிவடைந்து வந்தன. வெளிப்படுத்தல், அழகூட்டல் என்பவற்றோடு கூடிய கலையம்சம் கொண்ட கதை சொல்லல் போன்ற நிலையில் இருந்து, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றின் வணிகத் தயாரிப்புக்களையும் வேறுபடுத்திக் காட்டும் ஒன்றாகவும் கலைகள் வளர்ச்சியடைந்தன. வணிகக் கலை தொடர்பான ஆலோசனை நிறுவனங்களும், வணிகக் குழுக்களும் ஒழுங்கமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்தன. 1890 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் 8,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த 700 கல்லச்சுமுறை (lithography) அச்சகங்கள் இருந்தன.[6]. ஆக்கங்களுக்கான பெருமையும் தனிப்பட்ட கலைஞர்களுக்கு அன்றி அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கே உரித்தாயின. ![]() 1800 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் அச்சக நிறுவனமான ரூச்சன், 1850 ஆம் ஆண்டில் நியூ யார்க்கின் யோசேப் மோர்சு, 1870 ல் பிரான்சின் யோல்சு செரெட் இங்கிலாந்தின் பிரெடெரின் வாக்கர் போன்ற நிறுவனங்கள் காட்சிக் கலைகள், கல்லச்சு நுட்பம் என்பவற்றில் புத்தாக்கங்களைச் செய்தனர். இதன் மூலம் வண்ணப் படங்களை அச்சிடுவதில் பல முன்னேற்றங்கள் உருவாயின. அச்சுச் செலவு குறைந்து படிப்பறிவு வீதம் அதிகரித்ததுடன், காட்சிக்கலைகள் தொடர்பான பாணிகளும் மாற்றமடையலாயின. விக்டோரிய அழகூட்டல் கலைகள், வணிகச் சார்பான அச்செழுத்துப் பாணிகள், முறைகள் என்பவற்றையும் தழுவி விரிவடைந்தது[7]. தற்காலத்தில் அடையாளச் சின்னங்கள்![]() அடையாளச் சின்ன வடிவமைப்பில் தற்காலம் 1950 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. 1960 ஆம் ஆண்டில் சேர்மெயேஃப் கீசுமர் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சேஸ் வங்கியின் அடையாளச் சின்னம் அமெரிக்காவில் நவீன வரிவடிவ வடிவமைப்பின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. சேஸ் வங்கியின் அடையாளச் சின்னமே தற்காலத்தின் முதல் உண்மையான பண்புரு அடையாளச் சின்னம் ஆகும். மக்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த அடையாளச் சின்னத்தை வங்கியுடன் அடையாளம் காண்பதற்கான விளம்பரம் செய்யப்பட்டது. அந்த அடையாளச் சின்னம் எளிமையானதாகவும், தனித்துவமானதாகவும் இருந்ததுடன், எந்தவொரு பண்பாட்டுக் குழுவுடனும் அடையாளம் காணமுடியாததாக இருந்ததால் ஒரு சிக்கல்தன்மை கொண்ட பன்னாட்டு நிறுவனமொன்றிற்குப் பொருத்தமானதாக அமைந்தது. இன்று பல நிறுவனங்களும், உற்பத்திப் பொருட்களும், சேவை நிலையங்களும், முகவர் அமைப்புக்களும் படவுருக்களை (ideogram) அல்லது குறியீடுகளை அல்லது இரண்டும் கலந்த வடிவங்களைத் தமது அடையாளச் சின்னங்களாகப் பயன்படுத்துகின்றன. இதனால் சில அடையாளச் சின்னங்களையே மக்கள் அவற்றின் நிறுவனங்களுடன் அடையாளம் காண முடிகின்றது. தற்போது படவுருக்களையும், நிறுவனத்தின் பெயரையும் அடையாளச் சின்னங்களின் பயன்படுத்தும் போக்கும் காணப்படுகிறது. இதன் மூலம் அடையாளச் சின்னங்களை நிறுவனங்களுடன் அடையாளம் காண்பது இலகுவாகின்றது. பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்படும் அடையாளச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவற்றில் வழமையான எழுத்துருக்களையன்றிப் பெயரைத் தனித்துவமான வடிவமைப்புக்களுடன் கூடியனவாக எழுத்துக்களையும், குறிப்பிட்ட நிறங்கள், வரைபடக் கூறுகள் என்பவற்றையும் பயன்படுத்துவதன் மூலம் அமைக்கின்றனர். ![]() சில வேளைகளில் பெயர்களிலும் பார்க்கப் படவுருக்கள் கூடிய பொருத்தமானவையாக அமைகின்றன. பல்வேறு மொழிகளைப் பேசுவோர் அடையாளம் காணவேண்டிய நிலை இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மொழியைச் சார்ந்த எழுத்துக்கள் உகந்தவையாக இருக்காது. எடுத்துக்காட்டாக, அரபு மொழியில் அல்லது சீன மொழியில் எழுதப்பட்ட பெயர்கள் ஐரோப்பிய நாடுகளில் எவ்வித விளக்கத்தையும் ஏற்படுத்தா. படவுருக்கள் இவ்வாறான நிலைமைகளில் மிகவும் பொருத்தமானவையாக அமைகின்றன. அரசு சார்பற்ற நிறுவனங்களில், செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறைச் சங்கம் போன்றவற்றின் அடையாளச் சின்னங்கள் பெரும்பாலான நாடுகளிலும் பல்வேறு மொழிபேசுவோரிடமும் நன்று அறியப்பட்டவை. இதனால் இத்தகைய அடையாளச் சின்னங்களில் பெயர் எழுதும் அவசியம் கிடையாது. ஒரு மொழியில் எழுதப்பட்டாலும் கூட பயன்படுத்தப்பட்ட நிறம், எழுத்தின் வடிவம் போன்ற கூறுகள் சில அடையாளச் சின்னங்களுக்குப் பரவலான அறிமுகத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. கொக்கா கோலாவின் அடையாளச் சின்னம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia