அண்டிக்குவா
அண்டிக்குவா (Antigua) அல்லது சிலநேரங்களில் அண்ட்டீகோ,[1] உள்ளூர் மக்களால் வலாட்லி அல்லது வடாட்லி, கரிபியன் பகுதியில் லீவர்டு தீவுகளில் ஒரு தீவாகும்; இது அன்டிகுவா பர்புடா நாட்டின் முதன்மைத் தீவாகும். அண்டிக்குவா என்றால் எசுப்பானியத்தில் "தொன்மையானது" எனப் பொருள்படும்; செவீயா பெருங்கோவிலில் உள்ளதோர் திருவோவியத்தை ஒட்டி இப்பெயர் எழுந்துள்ளது.[2] உள்ளூர்ப் பெயரான வலாட்லி[3] என்பதற்கு "நம்முடையதே" எனப் பொருள் கொள்ளலாம். இத்தீவின் சுற்றளவு ஏறத்தாழ 87 km (54 mi) ஆகவும் பரப்பளவு 281 km2 (108 sq mi)ஆகவும் உள்ளது. இங்குள்ள மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80,161 ஆகும்.[4] அண்டிக்குவாவின் பொருளியல்நிலை சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்டது. வேளாண்மைத் துறை உள்ளூர் சந்தையின் தேவைகளை நிறைவு செய்கின்றது. தலைநகரமான செயிண்ட். ஜான்சில் 31,000 பேர் வசிக்கின்றனர். தலைநகரம் தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது; இங்கு நீண்ட பயணியர் சுற்றுலாக் கப்பல்களை நிறுத்தக்கூடிய ஆழமானத் துறைமுகம் அமைந்துள்ளது. ஆல் செயிண்ட்சு (3,412) லிபெர்ட்டா (2,239) ஆகியன மற்ற முதன்மைக் குடியிருப்புகளாகும். தென் கிழக்கிலுள்ள ஆங்கிலத் துறைமுகம் (English Harbour) பெரும் சுழற்காற்றுகளின்போதும் பாதுகாப்பு வழங்கும் தன்மைக்காக புகழ்பெற்றது. குடியேற்றக் காலத்தில் ஹோரஷியோ நெல்சன் நினைவாக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "நெல்சன் துறைமுகத்தை" சீரமைத்து இத்துறைமுகம் உருவாகியுள்ளது. இன்று இத்துறைமுகமும் அடுத்துள்ள பால்மவுத் சிற்றூரும் பன்னாட்டளவில் பாய்மரப் படகோட்டத்திற்காகவும் படகுப் போட்டிகளுக்காகவும் புகழ்பெற்றுள்ளது. ஏப்ரல் இறுதி/ மே மாத துவக்கத்தில் அண்டிக்குவா பாய்ப்படகு வாரம் கொண்டாடப்படுகின்றது; அப்போது உலகத்தர படகுப்போட்டி இங்கு நடத்தப்படுகின்றது. மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia