அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (Fast Moving consumer Goods) (அல்லது) அடைக்கப்பட்ட நுகர்வோர் பொருள்கள் (Consumer Pakaged Goods) என்பது விலை மலிவானதும், விரைவில் விற்றுத்தீரக்கூடியதும், காலாவதியாகக்கூடியதுமான பொருள்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக விரைவில் காலாவதியாகக் கூடிய பொருள்களான குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் விரும்பும் விலை மலிவான மிட்டாய்கள் மற்றும் சாக்லெட் போன்ற நுகர்பொருள்களையும் குறிப்பிடலாம்.[1][2] இந்தப் பொருள்களை உற்பத்தி செய்த சில நாள்கள் முதல் சில வாரங்களுக்குள் உபயோகபடுத்தியிருக்க வேண்டும், இல்லாவிடில் காலாவதியாகிவிடும். மாறாக நீடித்திருக்கும் பொருள்களான சமையல் உபகரணங்கள், தளபாடங்கள் போன்ற பொருள்களை ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது, இவை தேய்மானம் அடையும் மாறாக காலாவதி ஆகாது.
அ.நு.நு.பொ (FMCG) என்பது அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரின் தேவை காரணமாகவோ அல்லது பொருள்கள் விரைவில் காலாவதியாவதாலோ குறைந்தகாலம் மட்டுமே கடைகளின் அலமாரியில் உள்ளது. இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், மற்றும் வேகவைத்த பொருள்கள் போன்ற சில FMCG-க்கள் விரைவில் அழிந்துபோகக்கூடியவை. மது, கழிப்பறைப் பொருள்கள், முன்-பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், சாக்லேட், மிட்டாய்கள், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் துப்புரவு பொருள்கள் போன்ற பொருள்கள் அதிகளவு விற்பனை வருவாய் விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும் இது விடுமுறை காலங்கள் மற்றும் குறிப்பிட்ட பருவங்களில் அதிகளவு விற்பனை ஆகின்றது.
எஃப்எம்சிஜி பொருள்களின் தயாரிப்புகளில் இலாப அளவு ஒப்பீட்டளவில் சிறியது என்றாலும், அவை பொதுவாக அதிக எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன; இதனால் இத்தகைய தயாரிப்புகளின் ஒட்டுமொத்த லாபம் கணிசமாக இருக்கும். FMCG என்பதன் சிறப்புக் குறைந்த அளவு இலாபம் மற்றும் அதிக அளவு விற்பனை ஆகும். இந்தத் துறையில் உற்பத்தியாளர்கள் / மொத்த விற்பனையாளர்களைக் காட்டிலும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இலாப விகிதம் அதிகம்.
பண்புகள்
FMCG களின் முக்கிய பண்புகள் பின்வருமாறு: [1]
நுகர்வோர் பார்வையிலிருந்து:
அடிக்கடி கொள்முதல் செய்வது
குறைவான ஈடுபாடு (உருப்படியைத் தேர்ந்தெடுக்க குறைவான அல்லது முயற்சியே அல்லாமல்)
குறைந்த விலை மற்றும் விரைவில் காலாவதியாகிவிடும் (குறுகிய காலம்)