அமிர்தி உயிரியல் பூங்கா
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் அமிர்தி உயிரியல் பூங்கா (Amirthi Zoological Park) காணப்படுகிறது. இப்பூங்கா வேலூர் நகரில் இருந்து சுமார் 16 மைல் அல்லது 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ள அமிர்தி உயிரியல் பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும் காணப்படுகிறது. அமிர்தி வனத்தின் பாதி பரப்பளவு வனவிலங்கு சரணாலயத்திற்கும் மறு பாதி சுற்றுலாத் தலமாகவும் பிரித்துப் பராமரிக்கப்படுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையேற்றம் ஒரு அழகான நீர்வீழ்ச்சியை முழுமையாகப் பார்வையிட வழிவகுக்கிறது. நீர்வீழ்ச்சியில் பருவமழை காலங்களில் நீரின் வீழ்ச்சி அதிகமாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை விடுமுறை நாள்களில் மட்டும் அதிகமாக உள்ளது. இவ்வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள்,காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள்,முயல்கள், மலைப்பாம்புகள் முதலியன வாழ்கின்றன.[1][2] வளர்ச்சியும் விரிவாக்கமும்செப்டம்பர் 13, 2013 அன்று, தமிழக அரசு அமிர்தி உயிரியல் பூங்காவின் வளர்ச்சிக்காக 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் தங்கும் விடுதிகள், போதுமான குடிநீர் வசதி, அவசியமான தகவல் மையங்கள், உணவு விடுதிகள், நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் பாதைகள் மற்றும் பார்வை கோபுரங்கள் [3][4] போன்ற அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வனத் துறை 19 கோடி ரூபாய் செலவில் அமிர்தி விலங்கியல் பூங்காவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய சுற்றுலா ஆணையமும் (CZA) அமிர்தி மிருகக்காட்சி சாலையை மேம்படுத்த ஒப்புதல் [5] அளித்துள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம்கள் நடத்துவதற்கு வாய்ப்புள்ள சாத்தியமான காடுகளில் ஒன்றாக வேலூர் வனப்பிரிவில் உள்ள அமிர்தி காடு [6][7] இருக்கிறது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia