திருவண்ணாமலை மாநகரம் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை மாநகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை மாநகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது.
பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால், திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. 4ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,45,278 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 72,406 ஆண்கள், 72,872 பெண்கள் ஆவார்கள். இந்நகரம் பாலின விகிதம் 1,006 மற்றும் குழந்தையின் பாலின விகிதம் 958 ஆகும். மக்களின் சராசரி கல்வியறிவு 87.75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.98%, பெண்களின் கல்வியறிவு 82.59% ஆகும்.[3]
அருணாசலேஸ்வரர் மலையிலிருந்து அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத் தோற்றம்
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் ? என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி, அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.
திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.[6]
சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை உள்ளது.
கிரிவலம்
கார்த்திகை தீபத் திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதைகள் இரண்டு உள்ளன.
திருவண்ணாமலை மலை ஓர் இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் இது வெடித்து, இதன் தீக்குழம்பு, நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.[சான்று தேவை]
அண்ணாமலையார் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்தது.
இறைவன் பெயர் - அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்)
இறைவி பெயர் - உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்)
புகழ் பெற்ற விழா - திருகார்த்திகை தீபம்
விழா காலம் - கார்த்திகை மாதம்
இரமண மகரிசி ஆசிரமம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இதைச் சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. இங்கு தங்கும் வசதி உண்டு. இங்கு பல வெளிநாட்டவர் வந்து தங்குகின்றனர்.
போக்குவரத்து
திருவண்ணாமலை மாநகராட்சி தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து
திருவண்ணாமலை, இரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். வேலூர், ஆரணி, புதுச்சேரி, மற்றும் விழுப்புரம் போன்ற நகரங்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து செல்ல அடிக்கடி பேருந்து சேவைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்கள், நெடுஞ்சாலைகள் வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் (அதிக பேருந்து சேவைகள் மூலம்) இணைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இருந்து மூன்று நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை:
திருவண்ணாமலையில் வானூர்தி நிலையம் ஏதும் இல்லை. எனினும், பௌர்ணமிக்கு வரும் பக்தர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு இன்னும் 5 வருடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு சென்னை சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூர் மற்றும் சென்னைக்குச் சேவைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்கள்
அண்ணாமலையார் கோயில் கோபுரம் மற்றும் மண்டபம்.
அண்ணாமலையார் கோயில் கோபுரம்.
அண்ணாமலையார் கோயிலின், இராஜா கோபுரம்.
அண்ணாமலையார் கோயிலும், பின்புறத்தில் உள்ள மலையும்.