அம்மன்கிளி முருகதாஸ்
அம்மன்கிளி முருகதாஸ் ஒரு ஈழத்து எழுத்தாளரும் தமிழியல் ஆய்வாளரும் ஆவார். சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபாடுடையவர். இவை தொடர்பான நூல்கள் மற்றும் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். அம்மன்கிளி முருகதாஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று தனது இளங்கலை, முதுகலை, மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.[1] பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் முதுநிலைத்தமிழ்ப்பேராசிரியராக கடமையாற்றி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதே பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் தகைசால் ஓய்வுநிலைப்பேராசிரியராக கடமையாற்றுகிறார்.[2] பேராசிரியர் கா. சிவத்தம்பியின் "Drama in Ancient Tamil Society" என்ற ஆங்கில நூலினை "பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" என மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வாழ்க்கைக் குறிப்புஅம்மன்கிளி முருகதாஸ் யாழ்ப்பாணத்தின் பொலிகண்டி எனும் சிற்றூரில் இலங்கை நீர்ப்பாசண திணைக்களத்தின் மேற்பார்வையாளரான அமிர்தலிங்கம் கைலைநாதன், வல்லிபுரம் கைலாசபதியம்மா தம்பதிகளுக்கு மூத்தமகளாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை யாழ்/ பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரத்தினை யாழ்/ பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கற்று யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அங்கு தமிழை சிறப்புப்பாடமாக கற்று முதல் வகுப்பு சித்திபெற்று 1980 இல் தனது இளங்கலைப் பட்டத்தைப்பெற்றுக்கொண்டார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ் பேராசிரியர்களான பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ஆகியோரிடம் கற்கும் வாய்ப்பினைப்பெற்றார். 1985 இல் தமிழக பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (1925 - 2014) அவர்களின் நாவல்களை ஆய்வு செய்து தனது தமிழ் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். தனது முனைவர் பட்டத்தினை 1999 இல் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்து பெற்றுக்கொண்டார். கலாநிதிப்பட்டத்துக்காக இவர் செய்த ஆய்வே பின்னாளில் சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும் எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. 1983 இல் வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கந்தசாமி முருகதாஸ் அவர்களை திருமணம் செய்து நான்கு குழந்தைகளைப்பெற்றுக்கொண்டார். மட்டக்களப்பு சாந்தி, சுகந்தி, திரையரங்குகளின் முகாமையாளராக பணியாற்றிய கந்தசாமி முருகதாஸ் 2022 இல் மாரடப்பால் காலமானார். பல்கலைக்கழகப் பணிஅம்மன்கிளி முருகதாஸ் இளங்கலைப்பட்டப்படிப்பின் பின்னர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் நுண்கலைத்துறையில் தற்காலிக விரிவுரையாளராகவும் யாழ்/ சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் க. பொ. த உயர்தர மாணவிகளுக்கு தமிழ் மற்றும் நாடகமும் அரங்கியலும் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டு கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை யின் தமிழ்துறையில் விரிவுரையாளராக இணைந்துகொண்டார். 1999 இல் முனைவர் பட்டத்தினைப் பெற்ற பிறகு, அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றார். 2001 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். இந்தக் காலப்பகுதியிலேயே மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியானது சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமாக மாற்றப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.[3] இதே நிறுவகத்தின் பதில் பணிப்பாளராக 2015 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையும் பின்னர் 2019 முதல் 2021 வரையும் பணியாற்றினார்.[4][5] பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு துறைகளின் தலைவராகவும், பதில் தலைவராகவும், பல்கலைக்கழக பேரவை மற்றும் மூதவை உறுப்பினராகவும் பல்வேறு உபகுழுக்களின் உறுப்பினராகவும் இணைப்பாளராகவும் கடமையாற்றினார். அதே பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் துறையின் சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகளையும் வகித்து, 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.[5] பல்கலைக்கழகச் சேவையில் அவர் ஆற்றிய பணிகளுக்காக, ஓய்வுபெற்ற பின்னர் அவர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முதலாவது தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு, இன்றுவரை அப்பதவியில் தொடர்கிறார். இலக்கியப் பணிபேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் தமிழின் குறிப்பிடத்தகுந்த ஓர் ஆய்வாளர் ஆவார். சங்கப்பாடல்கள் பற்றியும் ஈழத்து இலக்கியம் பற்றியும் இவரின் ஆய்வுகள் முக்கியமானவை. குறிப்பாக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் எனும் ஆய்வு நூலின் வழி அவர் அறிந்த உண்மைகள் தமிழ் ஆய்வுலகிற்கு நல்ல சிந்தனைத் தூண்டலை முன்வைக்கின்றன.[6] இந்த ஆய்வு நூல் அவரது முனைவர் பட்ட ஆய்வின் நீட்சியாகும். இவ்வாய்வுக்காக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் 1999 ஆம் ஆண்டுக்கான தி. த. கனகசுந்தரம்பிள்ளை விருதினைப்பெற்றுக்கொண்டார்.[7] சங்கப் படைப்புகளின் ஆக்க முறைமை, இப்பாடல்களினூடு காணப்பெறும் வளர்ச்சி ஆகியன பற்றியும் இவை இரண்டிற்கும் சமூக நடைமுறைகளுக்கிடையில் காணப்பட்ட ஊடாட்டம் பற்றியும் இந்நூல் ஆராய்கின்றது.[8] 2005 ஆம் ஆண்டு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய Drama in Ancient Tamil Society எனும் ஆங்கில நூலை "பண்டைத்தமிழ்ச்சமூகத்தில் நாடகம்" எனும் தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.[9] இதற்காக 2005 ஆம் ஆண்டின் தமிழக அரசால் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதினை பெற்றுக்கொண்டார்.[10] எழுதிய நூல்கள்
மொழிபெயர்ப்பு
ஆதாரம்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia