அரியநாத முதலியார்தளவாய் அரியநாத முதலியார், விசயநகர முன்னாள் அரசப் பிரதிநிதியும் மற்றும் பின்னாள் ஆட்சியாளருமான விசுவநாத நாயக்கர் (1529–1564) ஏற்படுத்திய, மதுரை நாயக்க மன்னர்கள் அரசில் பணியாற்றியவர். இவர் விசயநகர ஆட்சியில் தளவாயும் முதலமைச்சருமாகப் பணியாற்றியவர்.[1][2][3] இவர் பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பை நாட்டின் பாளையங்களில் பாளையக்காரர் முறை என்ற பெயரில் நிறுவினார். இந்த அமைப்பில் நாட்டின் பகுதிகள் பாளையங்களாகப் (சிறு இளவரசாட்சிகள்) பிரிக்கப்பட்டு பாளையக்காரர்களின் (குறுநில முதன்மையர்கள்) ஆளுகையில் நிர்வாகிக்கப்பட்டன.[4] இவர் பாண்டிய நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார். இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பாளையங்களை 72 பாளையக்காரர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்.[2][4] அரியநாத முதலியார் இந்தியாவில் ஆங்கிலேய அரசுக்கு முந்திய இராணுவ அதிகாரி மட்டுமல்லாமல் தென் தமிழ்நாட்டில் குடிமக்களின் மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார். இவர், கால்நடைகளைப் பராமரித்தும் வேட்டையாடியும் வாழ்ந்த குழுக்களிடையே அடைக்கலமளித்துக் காக்கும் புரவலர் என்றறியப்பட்டார் இன்றளவும் கூட தென்தமிழ் நாட்டின் பாளையக்காரர்கள் (நிலமானிய முறை) இவரை நினைவு கூர்கிறார்கள்.[4] இளமைப் பருவம்அரியநாத முதலியார் தொண்டைமண்டலத்தில் (தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம்) அமைந்துள்ள மெய்ப்பேடு என்ற கிராமத்தில் தொண்டை மண்டல சைவ வேளாளராகிய, முதலியார் இனத்தில் காளத்தியப்பருக்கும் சிவகாமிக்கும் மகனாகப் பிறந்தார்.[3][5] இவர்களுக்கு இவர் ஒரே மகன். இவர் மூன்று மாதக் குழந்தையாயிருந்த போது இவரின் தாயார் இவரை தரையில் படுக்க வைத்துவிட்டு வேறு ஏதோ ஒரு வேலையைக் கவனிக்கத் தோட்டத்திற்குச் சென்றாராம். அப்போது குழந்தையின் தலைக்குமேல் ஒரு இராச நாகம் படம் எடுத்து ஆடியபடி இருந்தது. வீட்டிற்குத் திரும்பிய இவர் அன்னை இதைக் கண்டு பயந்து அலறி காளத்தியப்பரை அழைத்தார். அவர் வரும் சமயத்தில் நாகம் விருட்டென்று வெளியேறிப் போனது. அங்கு கூடிய ஊரார் அரியநாதன் அரச போகம் பெற்று வாழ்வான் என்று சோதிடம் சொல்வது போல் சொன்னார்கள். விசயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைந்த போது இவர் தளவாய் ஆக உயர்வு பெற்று விசயநகர அரசப் பிரதிநிதியான விசுவநாத நாயக்கருக்கு அடுத்த இரண்டாம் நிலையை அடைந்தான்.[2] படைமுதலி பட்டம்பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூடப் பேருதவியாக விளங்கினார். அரியநாதரின் இந்த செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு படைமுதலி என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் தளவாய் அரியநாத முதலியார் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு முதலியார் என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த விருதுப் பெயர் காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது.[6] பின்னாளில் தன்னைக் காணவந்த மெய்ப்பேடு முதியவருக்கு தன சொத்தில் கால் பங்கை வழங்க முன் வந்தாலும், முதியவர் வேண்டுதல்படி வீடு, வாசல் செல்வம் என்று எல்லாம் அளித்து மகிழ்ந்தார். விரைவில் பாண்டிய நாட்டிற்கு தன் அரசப் பிரதிநிதியாக விசுவநாத நாயக்கரையும் அமைச்சராக அரியநாதரையும் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் நியமித்தார். அதிகார மேன்மை![]() ![]() விசயநகர பேரரசின் தமிழ்நாட்டுப் பகுதிகளை ஒருங்கிணைக்கும் பணி 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதன் முதற்கட்டம் தமிழ்நாட்டுப் பகுதிகள் மதுரை, தஞ்சாவூர் மற்றும் செஞ்சி என்ற மூன்று நாயக்க அரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. இந்த நாயக்க அரசுகள் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தாலும் விஜயநகரப் பேரரசு மற்றும் இதன் மாமன்னர் கிருஷ்ணதேவராயரின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டனர்.[7] இவ்வாறு ஒருங்கிணைப்பு நடந்த போது, மாமன்னர் கிருஷ்ணதேவராயர் அவருடைய பல வெற்றிகளுக்குக் காரணமாகவிருந்த தளபதி நாகம நாயக்கரை ஒரு குறிப்பிட்ட போர் நிமித்தம் அனுப்பினார். சில பாண்டிய நாட்டுப் பகுதிகளை அபகரித்துக் கொண்ட வீரசேகர சோழன் என்ற சிற்றரசனை அடக்கும்படி நாகம நாயக்கர் பணிக்கப்பட்டார். பாண்டிய நாடு விசயநகரப் பேரரசின் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட அரசாகும்.[8] வீரசேகரனை வென்ற நாகம நாயக்கர் மதுரையைத் தான் ஆள விரும்பினார். நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மாமன்னர் கிருஷ்ண தேவராயரின் பெரிய விசுவாசியாக விளங்கினார். எனவே தன தந்தை கைப்பற்றிய மதுரையை அவரிடமிருந்து மீட்டு மாமன்னர் கிருஷ்ண தேவராயர் வசம் ஒப்படைத்தார். விசுவநாத நாயக்கரின் நேர்மையையும் விசுவாசத்தையும் கண்டு மகிழ்ந்த மாமன்னர் கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரை மதுரை மற்றும் அதைச் சுற்றிய தமிழ்நாட்டுப் பகுதிகளின் ஆளுநராக நியமித்தார்.[8] இவர் தொடர்ச்சியாக, விசுவநாத நாயக்கர் (1529–1564), முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1564–72), வீரப்ப நாயக்கர் (1572–95), இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1595–1601) ஆகிய நான்கு மன்னர்களுக்குத் தளபதியாக இருந்து வந்தார். தமது 80-வது வயதில் பொ.ஊ. 1600-இல் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகுதான் திருமலை நாயக்கர் (1623–1659) மன்னராக வந்தார். திருமலை நாயக்கருக்குத் தளபதியாகவோ, அமைச்சராகவோ அரியநாதர் இருந்ததில்லை.[9] விசுவநாத நாயக்கரின் படையை நடத்திய அரியநாத முதலியார் இரண்டாம் நிலை தளபதியாக உயர்ந்தார். இதன் தொடர்ச்சியாக விசுவநாதருடன் இணைந்து தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் தங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.[2] இதற்கிடையில் விசுவநாதரின் மகனும் வாரிசுமான கிருட்டிணப்ப நாயக்கர் தொடர்ந்து மதுரைப் பகுதியின் ஆளுநரானார். அரியநாதர் மதுரை நாயக்கர்கள் ஆண்ட அரசை படிப்படியாக விரிவு படுத்தினார். தொடர்ந்து பண்டைய பாண்டிய அரசு மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது.[8] விஜய நகர் பேரரசின் பாளையக்காரர்கள் சில உரிமைகளை பெற்றனர். வரி வசூல் செய்வது, இராணுவத்தினை பாதுக்காப்பது மற்றும் தவறுகளுக்கு தண்டனை வழங்குவது போன்ற வேலைகளை பாளையக்காரர்கள் செய்தனர். பாளையங்களும் பாளையக்காரர் முறையும்அரியநாத முதலியார் பாளையங்களையும் பாளையக்காரர் முறையையும் நிருவியவராவார். பாளையக்காரர் முறை என்பது 16 ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசை ஆள்வதற்கு பயன்பட்டது. பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பின்படி மதுரை நாயக்க அரசு பல பாளையங்களாக அல்லது சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரர் என்ற குறுநில முதன்மையரால் ஆளப்பட்டது.[2] இந்த அமைப்பின்படி மதுரை நாயக்க அரசு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்களை அரியநாதர் விசுவநாத நாயக்கர் மற்றும் இவருடைய மைந்தன் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 50 ஆண்டுக்காலம் நிர்வாகித்தார்.[4] தளவாய் அரியநாத முதலியார் மாசித் தேர் மண்டபம் கட்டி உள்ளார். இதனை மதுரை கீழமாசி வீதியில் பார்க்கலாம். அவருடைய மகன் காளத்தியப்ப முதலியார் பங்குனி மாதத்தில் ஒரு தேரோட்டத் திருவிழாவை நடத்தியிருக்கிறார். கல்வெட்டுக்கள்மதுரை கீரனூர் கல்வெட்டுச் செய்தியில் களாத்தியப்ப முதலியார் விசுவநாத நாயக்கரின் தலைமை அமைச்சர் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இவர் கொன்றங்கி கீரனூர் (கொண்டல் தங்கி கீரனூர்) எனும் கிராமத்தை அந்தணர்களுக்குக் கொடையாக வழங்கிய செய்தியை அறிய முடிகிறது.[10] விசுவநாத நாயக்கரின் வழித்தோன்றலான சொக்கநாத நாயக்கர் (1659–1682) ஆட்சி காலத்தில் சின்னத்தம்பி முதலியார் என்பவர் வாசல் பிரதானி (அதாவது முதல் குடிமகன் என்ற தலைமை அமைச்சர்) ஆகப் பொறுப்பு வகித்த செய்தியும் உள்ளது. இவர் தளவாய் அல்லது பிரதானி ஆக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த வரலாறு விவரிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக ராம் இம்மானுவேல் என்ற முன்னாள் வெள்ளை மாளிகை முதன்மை அலுவலர் கூட ஓவல் அலுவலகத்தின் வாசல் அலுவலராக குறிப்பிடப்படுகிறார்.[11][12] ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலின் மற்றொரு கல்வெட்டு முத்துன முதலியார் இராமகிருட்டிண நாயக்கரின் வாசல் பிரதானி என்று அழைக்கப்பட்டதாக சான்றளிக்கிறது. மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia