அவாயித் தீவுகள் (ஃகவாயித் தீவுகள், ஹவாய்த் தீவுகள்; அவாயி மொழியில் மொக்குப்புனி ஒ அவாயி) என்பன வடக்கு பசிபிக் கடலில் உள்ள எட்டுத் பெரிய தீவுகளும், மிகப்பல சிறு நிலத்திட்டுகளும் கொண்ட ஒரு தீவுக்கூட்டம். இத் தீவுக் கூட்டம் ஏறத்தாழ 2,400 கி.மீ நீளம் உடையது. இத்தீவுக் கூட்டங்களில், மிடுவே குறுந்தீவுக்கூட்டம் (Midway atoll) எனப்படும் பகுதி தவிர மற்றவை ஐக்கிய அமெரிக்காவின்அவாயி என்றழைக்கப்படும் ஒரு மாநிலம். ஒரு காலத்தில் இதனை சாண்டுவிச் தீவுகள் (Sandwich Islands) என்று அழைத்தார்கள். அவாயித் தீவுகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஏறத்தாழ 1860 மைல் (2993 கி.மீ) தொலைவில் உள்ளது.[1]
மீகாமன் சேம்சு குக் இந்தத் தீவுகளுக்கு சனவரி 18, 1778 இல் வருகை தந்தார், அப்பொழுது அவருடைய முன்னாள் முதலளித்து ஊக்குநராக இருந்த சாண்டுவிச்சின் நான்காவது ஏர்ல் ஆக இருந்த சான் மாண்டேகு (John Montagu, 4th Earl of Sandwich) அவர்களின் நினைவாக சாண்டுவிச்சுத் தீவுகள் என்று பெயரிட்டார் [2]
அவாயித் தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 16,636.5 சதுர கி,மீ ( 6,423.4 சதுர மைல்) மிடுவே கடற்திட்டு வரிசை (Midway atoll) என்னும் பகுதி தவிர, மற்றவை ஐக்கிய அமெரிக்காவின் 50 ஆவது மாநிலமாக அவாயி மாநிலம் என்னும் பெயரில் ஆகத்து 21, 1959 இல் இணைந்தது.
முதன்மையான தீவுகள்
நாசாவின் செயற்கைத் துணைக்கோள் படம். இதனை விண்வெளியில் இருந்து எடுத்தனர். முக்கிய அவாயித் தீவுகளும் தீவுக்கூட்டங்களும் தெரிவதைப் பார்க்கலாம்.
முக்கியமான எட்டுத் தீவுகளை மட்டுமே இங்கே குறிக்கப்பெற்றுள்ளன. இவை அவாயி விண்டுவர்டுத் தீவுகள் ( Hawaiian Windward Islands) என்றும் அழைக்கப்பெறுகின்றன. கஃகோ ஒலாவே (Kahoʻolawe) என்னும் தீவைத் தவிர மற்ற தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.