ஆன்ட்ரூ சைமன்ஸ்
ஆன்ட்ரூ சைமன்ஸ் (Andrew Symonds, 9 சூன், 1975 – 14 மே 2022) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். துடுப்பாட்டங்களில் சகலத்துறையராக விளங்கிய இவர் இருமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணம் வென்ற ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளரும் ஆவார். களத்தடுப்பாட்டத்திலும் குறிப்பிடத் தகுந்தவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டின் மத்திய காலங்களில் மதுபானம் அருந்தியது மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது ஆகிய காரணங்களினால் பெரும்பாலும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.[1] சூன், 2009 ஆண்டில் நடைபெற்ற 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியின் போது அணியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். இது இவரின் மூன்றாவது இடைநீக்கம் ஆகும்.[2] இவரின் நடவடிக்கைகளால் பல நிருவாகிகள் இவரை ஓய்வு பெறும்படி கூறினர்[3]. தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக பெப்ரவரி 16, 2012 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[4] சைமன்சு 2022 மே 14 அன்று குயின்சிலாந்து, டவுன்சுவில் என்ற இடத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.[5] இந்தியன் பிரீமியர் லீக்2008 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம் இவரை 1,350,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டின் அதிக பட்ச விலைக்கு ஏலம் போனவர்கள் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதே நிர்வாகம் சகநாட்டு வீரரான அடம் கில்கிறிஸ்ற் 700,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தை எடுத்து தலைவராக நியமித்தது. முதல் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஏப்ரல் 18,,2008 இல் துவங்கப்பட்டது. ஏப்ரல் 24, 2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 117 ஓட்டங்கள் எடுத்தார்.[6] ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் சார்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடியதால் இரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் பருவகால தொடர்களில் இவரால் பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் இறுதிகாலப் போட்டிகளில் அணிக்காக விளையாடி வெற்றிபெற்றுத் தந்தார். மூன்றாவது பருவகால 2010 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மங்கூஸ் மட்டை கொண்டு முதல் மூன்று போட்டிகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.[7][8] நான்காவது 2011 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 850,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. சர்வதேச போட்டிகள்இவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் மரபைச் சேர்ந்தவராக [9] இருந்தாலும் இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடத் தீர்மானித்தார்.[10] நவம்பர் 10, 1998 இல் லாகூரில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[11] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டம் 156 ஆகும். இவரின் ஸ்டிரைக் ரேட் 90 க்கும் அதிகமாக உள்ளது. துவக்ககாலத்தில் களத்தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் மட்டையாளராகவும், பந்து வீச்சாளராகவும் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார். இதனால் அணியில் நிலையான இடம் இவருக்கு வழங்கப்படவில்லை. 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஷேன் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia