இந்தியா ஒளிர்கிறதுஇந்தியா ஒளிர்கிறது (India Shining) என்பது 2004 இல் இந்தியாவின் பொருளாதார நம்பிக்கையின் உணர்வைக் குறிக்கும் ஒரு விளம்பர முழக்கமாகும். 2004 இந்தியப் பொதுத் தேர்தலுக்காக அப்போதய ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பஜக) இந்த முழக்கத்தை பிரபலப்படுத்தியது. இந்த முழக்கம் ஆரம்பத்தில் இந்தியாவை சர்வதேச அளவில் முதன்மைபடுத்தும் நோக்கில் இந்திய அரசின் பரப்புரையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. விளம்பர நிறுவனமான கிரே வேர்ல்டுவைட் 2003 இல் பரப்புரை வாய்ப்பை பெற்றது; இந்த முழக்கத்தையும், அதனுடன் தொடர்புடைய பரப்புரையை தேசிய படைப்பாற்றல் இயக்குநர் பிரதாப் சுதன், நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் கலந்தாலோசித்து உருவாக்கினார்.[1][2] "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கத்தை உள்ளடகமாக கொண்ட பரப்புரையை தேசிய தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும், செய்தித்தாள் விளம்பரங்களுக்கும் 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒன்றிய அரசு செலவிட்டது.[3] 2004 நாடாளுமன்றத் தேர்தலில், அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தின் தோல்விக்கு, குறிப்பாக நகர்ப்புறங்களை இலக்காக கொண்டு செய்யப்பட்ட இந்தியா ஒளிர்கிறது என்ற பரப்புரையே காரணம் என்று சில தலையங்கங்கள் குறிப்பிட்டன.[4][5][6] இந்தியா ஒளிர்கிறது பரப்புரையின் எதிர்மறை மதிப்பீடு தேர்தலுக்குப் பிறகு எதிரொலித்தது. முன்னாள் துணைப் பிரதமர் எல். கே. அத்வானி, இது "சரியானது", என்றாலும் "எங்கள் தேர்தல் பரப்புரைக்குப் பொருத்தமற்றது, இந்தியாவின் சமகால யதார்த்தத்தின் மற்ற அம்சங்களை முன்னிலைப்படுத்த எங்கள் அரசியல் எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம். இது எங்கள் கோரிக்கையை கேள்விக்குள்ளாக்கியது." [7][8] சர்ச்சைஇந்தியா ஒளிர்கிறது விளம்பரங்களில் அரசியல் ஆதாயத்திற்காக வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்த அரசாங்கத்துக்கு உரிமையில்லை என்ற சர்ச்சை எழுந்தது. பாஜக அரசு தோராயமாக ரூ. 5 பில்லியன் பணத்தை 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது விளம்பரப் பரப்புரைக்காக பயன்படுத்தியது.[9][10] இந்தியா ஒளிர்கிறது முழக்கமானது இந்தியாவின் வறுமை, சமூக சமத்துவமின்மை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சனைகளை மூடிமறைக்க பயன்படுத்தபட்டதாக பல்வேறு கட்டுரையாளர்களும்,[11][12][13] ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அரசியல் ரீதியாக விமர்சிப்பரவகளும் [14][15] விமர்சித்தனர். இந்த முழக்கம் 2004 தேசியத் தேர்தலுக்கான பாஜகவின் பரப்புரையில் ஒரு மையக் கருப்பொருளாக இருந்தது. இது பாஜகவின் அரசியல் எதிரிகளால் பொதுப் பணம் கட்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை இந்த முழக்கத்தை ஒளிபரப்ப தடை விதித்தது. இருப்பினும் பாஜக அரசியல்வாதிகள் இந்த முழக்கத்தை மற்ற சூழல்களில் தொடர்ந்து பயன்படுத்தினர்.[2][16][17] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia