இந்திராகாந்தி படுகொலை![]() இந்தியாவின் மூன்றாவது தலைமை அமைச்சரான இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணியளவில், புது தில்லி, சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் சத்வந்த் சிங், பியாந்த் சிங் என்ற அவரது இரு பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1][2][3] 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிருதசரசு நகரிலுள்ள சீக்கியர்களின் முக்கிய கோயிலான பொற்கோயிலை இந்திய இராணுவத்தினர் தாக்கிய புளூஸ்டார் நடவடிக்கையால் பொற்கோயில் பெரிதும் சேதமடைந்தது. இந்நடவடிக்கையின் எதிர்விளைவே இவரது படுகொலையாகும்.[4] படுகொலைஅயர்லாந்து நாட்டுத் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த பிரித்தானிய நடிகர் பீட்டர் உஸ்தொனோவிற்குப் பேட்டியளிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணிக்கு இந்திராகாந்தி புதுதில்லி, சப்தர்ஜங் தெருவிலமைந்துள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலிருந்து அடுத்தமைந்துள்ள அக்பர் வீதியிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.[1] அங்கிருந்த சிறுவாயிலை அவர் கடக்கும்போது அவ்வாயிலைக் காத்துநின்ற அவரது பாதுகாவலர்கள் சத்வந்த் சிங், பியாந்த் சிங் ஆகிய இருவரும் அவரைச் சுடத் தொடங்கினர். பியாந்த் சிங் இந்திராகாந்தியின் அடிவயிற்றில் மூன்றுமுறையும், கீழே விழுந்துவிட்ட இந்திராகாந்தியை சத்வந்த் சிங் இயந்திரத் துப்பாக்கியால் 30 முறையும் சுட்டனர்.[5] சுட்டபின்பு இருவரும் தமது ஆயுதங்களைக் கீழெறிந்து விட்டனர். பியாந்த் சிங் "நான் செய்யவேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்து கொள்ளலாம்." எனக் கூறினார். அடுத்த ஆறு நிமிடங்களில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த தார்செம் சிங் ஜாம்வால், ராம் சரண் என்ற வீரர்கள் பியாந்த் சிங்கை சுட்டுக் கொன்றனர். சத்வந்த் சிங், இந்திராகாந்தியின் மற்ற பாதுகாவலர்களால் பலத்த காயங்களுடன் சிறைபிடிக்கப்பட்டார்.[6] 1989 இல் சத்வந்த் சிங்கும் உடன் குற்றவாளியான கெகர் சிங்கும் தூக்கிலிடப்பட்டனர்.[7] இந்திராகாந்தி சுடப்பட்டு 10 மணி நேரங்கழித்துதான் தூர்தர்ஷன் மாலைச் செய்தியில் அவர் இறந்த செய்தி அறிவிக்கப்பட்டது.[8][9] உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளையும் மீறி இந்திராகாந்தியின் செயலாளர் ஆர். கே. தவான் பாதுகாப்பு நடவடிக்கையாக கொலையாளிகள் உட்பட்ட பிற சீக்கியக் காவலர்களை நீக்கிவிடுமாறு உத்தரவிட்டார்.[10] கொலையாளிகள்இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்களில் ஒருவரான பியாந்த் சிங், இந்திரா காந்திக்குப் பிரியமான பாதுகாவலர்களுள் ஒருவர். பியாந்த் சிங்கை இந்திராகாந்திக்கு பத்தாண்டுகளாகத் தெரியும்.[5] மற்றொரு கொலையாளியான சத்வந்த் சிங், கொலை நிகழ்வின்போது 22 வயது இளைஞர்; ஐந்து மாதங்களுக்கு முன்புதான் இந்திரா காந்தியின் பாதுகாவலராகப் பணியேற்றிருந்தார்.[5] இறப்புஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துமனைக்கு 09:30 மணிக்குக் கொண்டு செல்லப்பட்டார். 14:20 மணிக்கு அவரின் இறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டது. டி. டி. தோக்ரா தலைமையிலான மருத்துவர் குழு இந்திரா காந்தியின் உடலைக் கூறாய்வு செய்தது. இயந்திரத் துப்பாக்கி, சுழல் கைத்துப்பாக்கியென இருவிதமான ஆயுதங்களிலிருந்து அவரது உடலில் கிட்டத்தட்ட 30 குண்டுகள் தாக்கியுள்ளதாக கூறாய்வு முடிவில் கூறப்பட்டது. கொலையாளிகள் அவரை நோக்கிச் சுட்ட 33 குண்டுகளில் 30 குண்டுகள் அவரைத் தாக்கியிருந்தன. 23 குண்டுகள் அவர் உடலைத் துளைத்து வெளியேறியிருந்தன; 7 குண்டுகள் அவர் உடலில் தங்கியிருந்தன. கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை அடையாளம் காண்பதற்காக தோக்ரா இந்திரா காந்தியின் உடலிலிருந்த குண்டுகளை வெளியே எடுத்தார். குண்டுகள் கொலையாளிகள் பயன்படுத்தியிருந்த ஆயுதங்களோடு ஒத்துப் போயின. இந்திரா காந்தி கொலை வழக்கில் ஒரு முக்கிய சாட்சியமாக தோக்ரா சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.[11] நவம்பர் முதலாம் நாளன்று அவரது உடல் ஒரு பீரங்கி வண்டியில் தில்லி தெருக்களின் வழியே தீன் மூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டது.[1] நவம்பர் 3 ஆம் நாளன்று அவரது உடல் ராஜ்காட்டுக்கு அருகே தகனம் செய்யப்பட்டது. அவரது மூத்த மகனான ராஜீவ் காந்தி அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தார். பின்விளைவுஇந்திரா காந்தி இரு சீக்கியர்களால் கொலைசெய்யப் பட்டதன் எதிர்விளைவாக அடுத்துவந்த நான்கு நாட்களில் நடந்த வன்முறை நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்திரா காந்தி கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி தாக்கர் ஆணையம் கொலைக்குப் பின்னுள்ள சதியை விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப் பரிந்துரைத்தது. சத்வந்த் சிங்குக்கும் உடன் குற்றவாளியான கெகர் சிங்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் நாளன்று தூக்கிலிடப்பட்டனர். இந்திரா காந்தியைக் கொலைசெய்த இரு பாதுகாவலர்களின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்ட பஞ்சாபித் திரைப்படம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 ஆம் நாளன்று வெளியாக இருந்தது. ஆனால் இந்திய அரசு அத்திரைப்படத்தை வெளியிட முடியாமல் தடை செய்தது.[12][13] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia