இந்தோனேசியாவில் இந்து சமயம்
![]() இந்தோனேசியாவில் இந்து சமயம் அந்நாட்டின் மொத்தக் குடித்தொகையில் 1.7% மக்களாலும், பாலித் தீவின் 83.5% குடித்தொகையாலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.[1] இந்தோனேசியாவின் ஆறு உத்தியோகபூர்வமான சமயங்களில் இந்து சமயமும் ஒன்றாகும்.[2] 2010 கணக்கெடுப்பின் படி, சுமார் 4 பில்லியனுக்கும் மேலான இந்துக்கள் இந்தோனேசியாவில் வசிக்கின்றனர்.[1][3] வரலாறுஇந்து சமயத்தின் வருகை![]() இந்தோனேசிய இந்துநெறியானது, அந்நாட்டுத் தொல்குடிகளின் நீத்தார் வழிபாடு இயற்கை மற்றும் விலங்கு வழிபாடுகளுடன், இந்திய மரபுகள் உரையாடியதன் விளைவாக வளர்ச்சி கண்டதாகும்.[5] இங்கு இந்து சமயமென்பது, உண்மையில் இந்தியாவின் சைவ நெறியையே குறிப்பாகச் சொல்கின்றது.[6] தென்னகத்திலிருந்தே இது பரவியிருக்கலாம் என்பது முக்கியமான ஊகங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.[7][8][9][10] பெரும்பாலும் இந்து சமயம், பொ.பி முதலாம் நூற்றாண்டிலேயே தமிழக மற்றும் கலிங்க வணிகர்கள் மூலம் இந்தோனேசியாவை வந்தடைந்திருக்க வேண்டும்.[9] இந்தோனனசியாவெங்கும் காணப்படும் "சண்டி" எனப்படும் பழைமமவாய்ந்த இந்துக் கோயில்களும், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கால் கல்வெட்டும் சிவன், உமை, பிள்ளையார், திருமால் முதலியோரின் வழிபாடுகள், கிறிஸ்துவுக்குப் பின் ஆயிரம் ஆண்டுகளாக, அங்கு இநநது சமயம் நிலவியதற்கு சான்றுகளாகும்.[11] பொ.பி 414இல் இலங்கையிலிருந்து சீனா திரும்பிய அந்நாட்டுப் பயணி பாகியன், சாவகத்தில் முறையே சைவத்தையும் பௌத்தத்தையும் கடைப்பிடித்த சஞ்சய மற்றும் சைலேந்திர வம்ச அரசுகள் அங்கு ஒற்றுமையாக ஆட்சி புரிவதையும், சஞ்சய மன்னன் பெரும் செல்வவளத்துடன் திகழ்வதையும் குறிப்பிட்டுள்ளார்.[12] மாதாராமுக்குப் முன்னும் பின்னும் விளங்கிய, தருமாநகரம், கெலிங்கம், கேடிரி, சிங்காசாரி, ஸ்ரீவிஜயம் முதலான இராச்சியங்களும், அவற்றை அடுத்து பதினோராம் நூற்றாண்டில் ஜாவாவில் உதித்த மயாபாகித்து பேரரசும் சைவ சாம்ராச்சியங்களாகவே விளங்கியதுடன், சோழரைப் போல மதச்சகிப்புத் தன்மையுடன், சைவத்துடன் சேர்த்து, பௌத்தத்தையும், சாவகத் தொல்நெறிகளையும் கூடவே புரந்து வந்திருக்கின்றன. காலனித்துவ ஆட்சியும் இந்து சமயமும்![]() பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாகத்தில், மயாபாகித் பேரரசின் இறுதிக் காலத்தில், வாணிகம் மூலம் இந்தோனேசியாவில் கால்பதித்த அரேபியர்[13] மூலம், உருவான “சுல்தானகங்கள்” எனும் இஸ்லாமிய அரசுகள், மெல்ல மெல்ல, இந்தோனேசிய இந்து – பௌத்த மக்களை, இஸ்லாம் நோக்கி ஈர்த்தன. வட சுமாத்திரா, தென் சுமாத்திரா, மேல் மத்திய சாவகம், தென் போர்னியோ (காளிமந்தன்) ஆகிய இடங்களில் பலம் வாய்ந்த சுல்தானகங்கள் எழுச்சி பெற்றன.[14] அவற்றில் இஸ்லாம் அரச மதமாக அமர்ந்ததுடன், சுல்தானகங்களின் கீழ் ஆளப்பட்ட இந்துக்கள், பௌத்தர்கள், சாவகத் தொல்நெறியினர், பெரும்பாலும் மதம்மாற, சிலர் ஜிஸ்யா வரியைச் செலுத்தி சுல்தானகங்களுடன் சமரசத்துடன் வாழ்ந்து வந்தனர்.[15] பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில், மயாபாகித் பேரரசின் இறுதிமன்னன், ஐந்தாம் பிரவிஜயனின் மைந்தன், இஸ்லாமைத் தழுவி சுல்தானகமொன்றை நிறுவிக்கொண்டதுடன், இந்தோனேசியாவின் இறுதி இந்து-பௌத்தப் பேரரசு மறைந்துபோனது. எஞ்சிய இந்துக்கள், அருகிலிருந்த பாலித்தீவுக்கு இடம்பெயர்ந்தனர்.[16] இவ்வேளையில் ஏற்பட்ட ஒல்லாந்துக் காலனியாதிக்கம், இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் பெரும்பகுதியைத் தன் வசமாக்கிக் கொண்டது.[16][17] எவ்வாறெனினும், ஒல்லாந்தர் வருகையானது, அங்கு ஏற்கனவே நிலவிய மதப்போராட்டங்களுக்கு முடிவு கட்டியதுடன். சமரசப்போக்கான புரிந்துணர்வு கொண்ட புதியதோர் இந்தோனேசியச் சமுதாயமொன்று உருவாகிவரக் காரணமானது.[18] சமகாலத்தில் இந்து சமயம்கிழக்கிந்திய இடச்சுக் கம்பனியின் காலனித்துவ நாடாக விளங்கிய இந்தோனேசியா, அந்நாட்டிடமிருந்து 1952இல் சுதந்திரம் பெற்றுக்கொண்டது. எனினும் இந்தோனேசியா, பெரும்பான்மை சமயமான இஸ்லாமுக்கே முன்னுரிமை அளித்ததுடன், பாலி இந்துக்களை இஸ்லாமைத் தழுவ வற்புறுத்தி,, அதுவரை அவர்கள் “நெறியிலார்” (சமயம் அற்றோர்) ஆவர் என்றும் வகைப்படுத்தியது.[19][19] இதனால் வெகுண்டெழுந்த பாலி மாகாணப் பிரிவு, தன்னைத் தனிநாடொன்றாகப் பிரகடனப்படுத்தியதுடன், இந்தியாவிடமும், தம்மை சுதந்திரத்திற்கு முன்பு ஆண்ட நெதர்லாந்திடமும் தஞ்சம் கோரியது.[20] இதையடுத்து பாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலேற்பட்ட பண்பாட்டு உரையாடல்கள், பாலி இந்து சமயத்தை மறுமலர்ச்சிக்குட்படுத்தியதுடன், இந்தோனேசிய அரசுடன் சமரசத்துக்குச் செல்லவும் வழிகோலியது..[19] மதமாக அங்கீகரிக்கப்படாத “கெபத்தினன்” எனும் சாவகத் தொல்நெறியைக் கடைப்பிடித்தோரும், இந்தோனேசியப் பழங்குடிகளும் பாலி இந்துக்களுடன் கைகோர்க்க,[21] 1986இல், அவர்கள் அனைவரையும் இந்துமதமாக வரையறுக்கவேண்டிய நிர்ப்பந்தம், இந்தோனேசிய அரசுக்கு ஏற்பட்டது. எனினும், இந்தோனேசியா, “இறைவன் ஒருவனே” என வலியுறுத்தும் அரசியலமைப்பைக் கொண்டிருந்ததால், அவர்கள் மீண்டுமொரு சமரசத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[5] இறுதியில், “அசிந்தியன்” (இந்தோனேசிய பாஷை: சாங்யாங் வீதிவாசன்) எனும் ஏகதெய்வத்தையே தாம் இனி வழிபடுவதாக இந்தோனேசிய இந்துக்கள் ஒத்துக்கொண்டதை அடுத்து, இந்து சமயம், இந்தோனேசியாவின் ஒரு தனிநெறியாக அரசால் அங்கீகரிக்கப்பட்டது.[19][22][5][23] இந்த அசிந்தியன் என்பது, இந்தோனேசியாவுக்குப் புதிய தெய்வம் அல்ல! பதினாறாம் நூற்றாண்டளவில், இஸ்லாமுக்கெதிராக பாலித்தீவெங்கும் சைவ பக்தி இயக்கத்தை முன்னெடுத்த “டாங்யாங் நிரார்த்தா” எனும் ஞானியே, உருவமற்ற பரசிவத்தை, “அசிந்தியன்” என்ற பெயரில் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இந்து சமயம் என்று ஒன்றுபடும் போது, தமக்கென்று தனித்துவமான ஒரு இந்துப்பண்பாடு இருப்பதை மறவாதிருக்க, பாலி இந்துச் சான்றோரால், அசிந்தியனே அவர்களது முழுமுதற்கடவுளாக முன்வைக்கப்பட்டார் என்பதே பொருத்தம். சாவகத் தொல்நெறிகள் தனிமதமாக இந்தோனேசியாவில் அங்கீகரிக்கப்பாடாத போதும், அவை இந்து சமயத்தின் கீழ் தம்மை வகைப்படுத்திக் கொண்டு, தத்தம் சலுகைகளைப் பெற்று வருகின்றன.[24][25] பொது நம்பிக்கைகள்![]() இந்தோனேசிய இந்து நெறியின் பொதுவான அம்சங்களை வருமாறு வகைப்படுத்திக் கொள்ள முடியும்.[26][27]
இந்து விடுமுறைகள்![]() கரி ராய காலுங்கான் – 210 நாட்களுக்கு ஒருமுறை பத்து நாட்கள் கொண்டாடப்படும் சமயப் பண்டிகை ஆகும். இப்பண்டிகைக்காக முன்னோர் பூவுலகு வருவதாக பாலி மக்கள் நம்புகின்றனர். அதன் இறுதிநாளான "குனிங்கன்" அன்று, தெய்வங்களும் முன்னோர்களும் வழியனுப்பி வைக்கப்படுவர்.[30] கரி ராய சரசுவதி பாலித் தீவில் எடுக்கப்படும் கலைமகளுக்கான விழா ஆகும். ஏட்டுச்சுவடிகள், புத்தகங்கள் இந்நாளில் வழிபடப்படும். 210 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் கரி ராய சரஸ்வதி, பாலி பாவுகோன் நாட்காட்டியின் படி, ஆண்டின் முதனாள் ஆகும்.[31] கரி ராய நியேபி பேசா நோன்பு நோற்கப்படும் ஓர் புனித நாளாகும். மார்ச்சு அல்லது ஏப்ரல் முழுநிலவு நாளொன்றின் மாலையன்று கிராமங்களைச் சுத்தம் செய்து, வீடுகளில் உணவு தயார் செய்து விட்டு, வீதிகளில் கூட்டம் கூட்டமாகக் கூடி, தீய ஆவிகளை விரட்டப் பெருங்குரல் எடுத்துக் கூவுவர். அடுத்த நாள் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படும். உல்லாசப் பயணிகள் உள்ளிட்ட எவருமே வெளியே நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதனாள் சமைத்துத் தயாராக வைத்திருக்கும் உணவையே அன்று உண்பர்..[32] இந்துக் குடித்தொகை2010 கணக்கெடுப்பின் படி, 4,012,116 இந்துக்கள் இந்தோனேசியாவில் வசித்து வருகின்றார்கள்.[1] எனினும் 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தோனேசியாவில் இந்துக்களின் வளர்ச்சி வீதம் குறைவாகும். இஸ்லாமியரிடம் பிறப்புவீதம், 2.1 முதல் 3.2 விழுக்காடாக அமைய, இந்துக்களிடம் 1.8 தொடக்கம் 2.0 ஆகக் காணப்படுகின்றது. ![]() உசாத்துணைகள்
மேலதிக வாசிப்புக்கு
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia