இரண்டாம் அஜிசிலேயஸ்
இரண்டாம் அஜிசிலேயஸ் (Agesilaus II, கிரேக்கம்: Ἀγησίλαος Agesilaos ; ஆட்சிக் காலம் கி.மு. 442 – 358 ) என்பவர் எசுபார்த்தாவின் அரசராக கி.மு. 399 முதல் 358 வரை இருந்தவர். பொதுவாக எசுபார்த்தாவின் வரலாற்றில் மிக முக்கியமான மன்னராக இவர் கருதப்படுகிறார். பெலோபொன்னேசியப் போரைத் தொடர்ந்து (கிமு 431-404) ஏற்பட்ட எசுபார்த்தன் மேலாதிக்கத்தின் போது அஜெசிலேயஸ் முக்கிய பாத்திரம் வகித்தார். போரில் துணிச்சலான செயல்களில் ஈடுப்பட்ட போதிலும், எசுபார்த்தாவின் உயர்ந்த நிலையைப் பாதுகாப்பதற்கான இராசதந்திர திறன்களை அஜிசிலேயஸ் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக அதிகரித்துவந்த தீப்சின் சக்திக்கு எதிராக, கிமு 371 இல் லியூக்ட்ராவில் நடந்த போரில் எசுபார்த்த தோல்வியுற்ற பிறகு அது கிரேக்கத்தின் இரண்டாம் நிலை சக்தியாக குறைந்து போனது. அஜிசிலேயசின் ஆட்சியானது குறிப்பாக கிமு 411 முதல் 362 வரையிலான ஆண்டுகளை உள்ளடக்கிய வரலாறானது, கிரேக்கத்தின் ( ஹெலனிகா ) பெரும் வரலாற்றை எழுதிய அவரது நண்பர் செனபோனின் படைப்புகளால் நன்கு அறியப்படுகிறது. அதில் அஜிசிலேயசின் ஆட்சி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. செனபோன் அவரது நண்பரான அஜிசிலேயசின் வாழ்க்கை வரலாற்றையும் இயற்றினார். ஒருவேளை அஜிசிலேயசுக்கு எதிராகக முன்வைக்கபட்ட விமர்சனங்களிலிருந்து காத்து அவரது பெருமையை காட்டும் விதமாக இருக்கலாம். மேலும், புளூட்டாக் தனது பேர்லல் லிவ்ஸ் என்ற நூலில் அஜெசிலேயசின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இதில் செனபோனால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட பல கூறுகள் உள்ளன. துவக்க கால வாழ்க்கைஇளம்பருவம்எசுபார்த்தாவின் இரண்டு அரச குடும்பங்களில் ஒன்றான யூரிபோன்டிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர் இரண்டாம் ஆர்க்கிடாமோஸ் (ஆர். 469–427) என்பவர் அஜிசிலேயசின் தந்தை ஆவார். ஆர்க்கிடாமோசுக்கு ஏற்கனவே லாம்பிட்டோ என்வரின் வழியாக அகிஸ் என்ற மகன் உண்டு.[1] லாம்பிட்டோவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்க்கிடாமோஸ் 440 களின் முற்பகுதியில் மெலசிப்பிடாஸின் மகள் யூபோலியாவை மறுமணம் செய்து கொண்டார்.[2] 358 இல் அவர் இறக்கும் போது அவருக்கு 84 வயது இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏகேசிலாஸ் அநேகமாக 442 இல் பிறந்திருக்கலாம். [3] அஜிசிலேயசுக்கு கினிஸ்கா என்ற சகோதரியும் இருந்தார் (பண்டைய வரலாற்றில் பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றியைப் பெற்ற முதல் பெண்).[4][5] அஜிசிலேயஸ் என்ற பெயர் அரிதானது மேலும் எசுபார்த்தாவின் துவக்ககால மன்னர்களில் ஒருவரான முதலாம் அஜிசிலேயசுக்கு இப்பெயர் உண்டு.[6] அஜிசிலேயஸ் முடமாகப் பிறந்தார். சில அறிஞர்கள் அவர் தன் உயிரை இழக்க வேண்டும் என்று வாதிட்டனர், ஏனெனில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட புளூட்டாக்சின் கூற்றின்படி, ஊனமாக பிறந்த எசுபார்த்தன் குழந்தைகள் ஒரு பள்ளத்தில் தள்ளப்பட்டனர்.[7] ஆனால் நவீன தொல்லியல் சான்றுகள் ஊனமுற்ற குழந்தைகளைக் கொல்வது என்பது ஒரு கட்டுக்கதை என்று நிரூபித்துள்ளன; சிசுக்கொலை நடந்தது ஆனால் அது அரிதானதாகவே இருந்தது. மேலும் பல ஊனமுற்ற குழந்தைகள் பிறந்த பிறகு வளர்க்கப்பட்டனர், கொல்லப்படவில்லை.[8] குழந்தைகள் தூக்கி எறியப்பட்டதாகக் கூறப்படும் கீடாஸில் உள்ள பள்ளத்தின் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் குழந்தைகளின் எச்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.[9] 7 வயதில், அஜிசிலேயஸ் எசுபார்த்தாவின் அகோஜ் எனப்படும் கடுமையான போர்க் கல்வியைப் பயில வேண்டியிருந்தது.[10][11] அவர் ஊனமுற்றவராக இருந்தபோதிலும், அவர் தன் பயிற்சியை அற்புதமாக முடித்தார்,[7] இது அவரது கௌரவத்தை பெருமளவில் உயர்த்தியது, குறிப்பாக அவர் அரசரான பிறகு.[12] உண்மையில், அரச வாரிசுகளுக்கு அகோஜிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் குடிமக்களைப் போலவே மிகச் சில எசுபார்த்தா மன்னர்கள் இப்பயிற்ச்சியை பயிற்சி பெற்றனர். இவரைப் போலவே குறிப்பிடத்தக்க விதிவிலக்காக பயிற்சி பெற்று பின்னர் மன்னராக ஆன லியோனிடாசு ஆவார்.[13] 433 மற்றும் 428 க்கு இடையில், லிபியாவில் ஓரளவு செல்வாக்கைக் கொண்டிருந்த குடும்பத்தையும், ஆர்க்கிடாமோஸ் வட்டத்தைச் சேர்ந்த பிரபுவான லைசாந்தருடன் ஒருபால் உறவு கொண்டவராக இருந்தார்.[14][15] எசுபார்த்தாவின் இளவரசராகஅஜிசிலேயஸ் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய வாலிப வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. முக்கியமாக இவரது நண்பரும், வரலாற்றாசிரியருமான செனபோன் இவரது ஆட்சியைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளார்.[16] இவரது சிறப்பு அந்தஸ்து காரணமாக, கிரிப்டியா இரகசியக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்காலம். இக்குழுவானது இளம் எசுபார்டான்களைக் கொண்ட உயரடுக்கு குழுவாகும். இவர்கள் எசுபார்த்தன் பிரதேசத்தில் கமுக்கமாக சென்று ஆபத்தானதானவர்கள் என்று கருதப்படும் எலட்களைக் கொல்லுவர்.[17] இவர் 20 வயதை அடைந்து முழு குடிமகனாக ஆனநிலையில் இவரது ஒன்றுவிட்ட அண்ணன் இரண்டாம் அகிஸ் கிமு 427 இல் மன்னரானார்.[18] ஏதென்சுக்கு எதிரான பெலோபொன்னேசியப் போரின் போது ( [19] ) அஜிசிலேயஸ் ஒருவேளை கிமு 418 இல் மாண்டினியா போரில் பணியாற்றினார். கிமு 408 – 400 இக்கு இடைப்பட்ட ஒரு காலக் கட்டத்தில் அஜிசிலேயஸ் கிளியோராவை மணந்தார்.[20] கிளியோரா தன் கணவன் மீது செல்வாக்கு செல்லுபவராக இருந்தபோதிலும், அவர் குறித்து அவ்வளவாக அறியப்படவில்லை. கிளியாராவின் தந்தை அரிஸ்டோமெனிடாஸ், தீப்சில் நல்ல செல்வாக்கு கொண்ட ஒரு பிரபு ஆவார்.[21] 412-411 இல் பாரசிகத்துடன் கையொப்பமான மூன்று ஒப்பந்தங்களுக்கு கைமாற்று உதவியாக எசுபார்த்தாவுக்கு பாரசிகம் நிதி உதவியை அளித்தது. அதைக்கொண்டு ஏதென்சை தோற்கடித்த கடற்படை ஒன்றை எசுபார்த்தா உருவாக்கியது.[22] இந்த கடற்படை முக்கியமாக லைசாந்தரால் வழிநடத்தப்பட்டது. இந்தப் போரில் எசுபார்த்தா அடைந்த வெற்றியானது ஆசியாவில் இருந்த கிரேக்க நகரங்களிலும், எசுபார்த்தாவிலும் அவருக்கு மகத்தான செல்வாக்கைக் கொடுத்தது, அதனால் அவர் மன்னராகவும் திட்டமிட்டார்.[23][24] கிமு 403 இல் எசுபார்த்தாவின் இரண்டு மன்னர்களான, அகிஸ் மற்றும் பௌசானியாஸ் ஆகிய இருவரும் அவரது செல்வாக்கை குறைக்க ஒன்றாக திட்டமிட்டு செயல்பட்டனர்.[25] ஆட்சிஅரியணை ஏறுதல் (கிமு 400–398)கிமு 400 மற்றும் 398 க்கு இடையில் தெல்பியிலிருந்து திரும்பும் போது இரண்டாம் ஆஜிஸ் இறந்தார். [i] அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகு, அவரின் மகன் லியோடிசிடாசின் உரிமைகோரலை எதிர்த்து அரியணைக்காக அஜிசிலேயஸ் போராடினார். லியோடிசிடாஸ் அவரது தாயாருக்கும் ஆல்சிபியாடீசுக்குமான கள்ளத் தொடர்பில் பிறந்தவர் என்று எசுபார்த்தாவில் பரவியிருந்த வதந்தியைப் பயன்படுத்தி அஜிசிலேயஸ் போட்டியிட்டார். பிரபல ஏதெனியன் அரசியல்வாதியும் பெரிக்கிளீசின் மருமகனுமான ஆல்சிபியாடீசு, பெலோபொன்னேசியன் போரின்போது ஏதெனிலிருந்து நாடுகடத்தப்பட்டதால் எசுபார்த்தாவுக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கு அரசியை மயக்கியனார் என்ற கருத்துகள் இருந்தன. மேலும் மன்னர் ஆஜிஸ் கூட மரணப் படுக்கையில் இருந்த லியோடிசிடாசை தன் மகனாக மட்டுமே அங்கீகரித்தார் என்ற உண்மையால் வதந்திகள் வலுப்பெற்றன.[28][29] லியோடிசிடாசின் ஆதரவாளரான டியோபீத்ஸ், எசுபார்த்தாவின் மன்னராக வருபவர் ஊனமுற்றவராக இருக்கக் கூடாது என்று ஒரு பழைய ஆரக்கிளை மேற்கோளாக காட்டி வாதிட்டார். ஆனால் லைசாந்தர் தந்திரமாக ஆரக்கிளை உருவகமாகமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி அக்கூற்றை மறுத்தார். ஆரக்கிளால் எச்சரிக்கப்பட்ட ஊனம் என்பது லியோடிச்சிடாசின் தந்தை யார் என்பதன் மீதான சந்தேகத்தையே குறிக்கும் என்று வாதிட்டடு வாதத்தில் வென்றார்.[30][31] அஜிசிலேயசை ஆட்சிக் கட்டிலில் ஏற்றதில் லைசாந்தரின் பங்கு குறித்து வரலாற்றாசிரியர்களால் விவாதிக்கப்பட்டது. முக்கியமாக புளூட்டாக் அவரை சதித்திட்டத்தின் முக்கிய தூண்டுகோலாக காட்டுகிறார். அதே நேரத்தில் செனபோன் லைசாந்தரின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடுகிறார்.[32][33] கிமு 403 இல் தான் இழந்த அரசியில் செல்வாக்கை மீண்டும் பெற புதிய அரசர் தனக்கு உதவுவார் என்று நம்பியதால், லைசாந்தர் சந்தேகத்திற்கு இடமின்றி அஜிசிலேயசை ஆதரித்தார்.[34] சினாடனின் சதி (கிமு 399)சினாடனின் சதி கிமு 399 ஆம் ஆண்டு கோடையில் அஜிசிலேயசின் ஆட்சியின் முதல் ஆண்டில் நடந்தது.[35] சினாடோன் என்பவர் எசுபார்த்தன் குடிமகன் அந்தஸ்தை இழந்தவர். ஏனெனில் அவர் சார்ந்த கூட்டு உணவகத்திற்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை அவரால் செலுத்த முடியாத காரணத்தால் அவர் குடிமகன் அந்தஸ்தை இழந்தார். பாரம்பரியக் காலத்தில் எசுபார்த்தன் குடிமக்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சிக்கல் ஒலிகன்ட்ரோபியா என்று அழைக்கப்பட்டது.[36][37][38] கிமு 404 இல் ஏதென்சுக்கு எதிரான எசுபார்த்தாவின் வெற்றிக்குப் பிறகு எசுபார்த்தா கிரேக்கத்தின் முதன்மை ஆதிக்க சக்தியாக வளர்ந்தது. இதனால் நகரத்தில் பெருவாரியாக செல்வம் குவிந்தது. குடிகளிடையே ஏற்றத்தாழ்வு பெருகியது. இது எசுபார்த்தாவில் பணவீக்கம் ஏற்படவும் காரணமாயிற்று. இதன் விளைவாக சினடான் போன்ற ஓரளவு மட்டுமே வருமானம் கொண்ட பல குடிகளை வறுமையில் ஆழ்த்தியது. அதனால் அவர்கள் செலுத்தவேண்டிய கட்டணங்களை செலுத்த இயலாததால், அவர்கள் குடிமக்கள் தரத்திலிருந்து கீழிறக்கப்பட்டனர்.[39] இவ்வாறு குடியுரிமை நிலையில் இருந்து தரமிறக்கப்பட்ட குடிமக்களின் நிலையை மீட்டெடுப்பதே இச் சதித்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.[40] எவ்வாறாயினும், இச்சதி கண்டுபிடிக்கப்பட்டு சினாடனும் சதிதிட்டத்தைத் தீட்டிய அதன் தலைவர்களுக்கும் மரண தண்டணை விதிக்கபட்டது. அநேகமாக இச்சதியைக் முறியடித்தில் அஜிசிலேயசின் தீவிர பங்கேற்பு இருந்திருக்கலாம் [41] ஆனால் சதி தோன்றுவதற்கு காரணமான சமூக நெருக்கடியைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் எசுபார்த்தா சமூகம் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சனையை உணர அஜிசிலேயசு தவறியது நவீன வரலாற்றாசிரியர்களால் விமர்சிக்கப்படுகிறது.[42][43] அனத்தோலியா மீதான படையெடுப்பு (கிமு 396–394)எசுபார்த்தாவிற்கும் பாரசீகப் பேரரசுக்கும் இடையில் கிமு 412 மற்றும் கிமு 411 இல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் பிந்தைய ஒப்பந்தத்தின்படி, ஆசியா மைனரில் இருந்த கிரேக்க நகர அரசுகள் பாரசீகத்தின் ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டவையாக மாறின.[44][45] கிமு 401 ஆம் ஆண்டில், இந்த நகர அரசுகளும் எசுபார்த்தாவும் இளைய சைரஸ் (பாரசீகப் பேரரசரின் இளைய மகன் மற்றும் லைசாந்தரின் நெருங்கிய நண்பர்) பாரசீகத்தின் அரியனையைக் கைப்பற்றும் முயற்சியை ஆதரித்தன. அவரது அண்ணனும், பாரசீகத்தின் புதிய பேரரசருமான இரண்டாம் அர்தசெராக்சசுக்கு எதிரான போரில் அவர் குனாக்சா சமரில் தோற்கடிக்கபட்டார்.[46] இதில் எசுபார்த்தா அர்தசெராக்சசுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. மேலும் ஆசியாவில் இருந்த கிரேக்க நகர அரசுகளும் எசுபார்த்தாவின் செயலுக்கு துணை நின்றன.[47] கிமு 397 ஆம் ஆண்டில், பெலோபொன்னேசியப் போரின் முடிவில் ஆசியவில் உள்ள கிரேக்க நகரங்களின் மீது தாங்கள் கொண்டிருந்த செல்வாக்கை மீட்பதற்காக, அஜிசிலேயஸ் தலைமையில் ஆசியாவில் ஒரு பெரிய போர்பயணத்தை மேற்கொள்ளும் திட்டத்தை லைசாந்தர் வடிவமைத்தார்.[48][49] எசுபார்த்தன் சட்டசபையில் போருக்கு ஒப்புதலைப் பெறுவதற்கு வசதியாக, லைசாந்தர் 30 எசுபார்த்தன் குடிமக்கள் மட்டுமே படையில் இணைத்திருந்தார் அதனால் ஒப்புதல் பெறுவதில் உள்ள சிக்கல் குறைக்கும் என்பதே திட்டம். இராணுவத்தின் பெரும்பகுதியினர் 2,000 நியோடாமோட்கள் (விடுதலை தரப்பட்ட எலட்கள் ) மற்றும் 6,000 கிரேக்க நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்களாவர்.[50][51] கூடுதலாக, ஒலிம்பியாவில் சியுசு மற்றும் தெல்பியில் அப்பல்லோவின் ஆரக்கிள்களின் ஆருடத்தின் ஆதரவைப் பெற்றார்.[52] ஆலிசில் பலி (கிமு 396)லைசாந்தர் மற்றும் அஜிசிலேயஸ் இந்த போர் பயணத்தை கிரேக்கர்கள் அனைவரும் இணைந்த ஒரு கூட்டமைப்பு போர் பயணமாக விரும்பினர்.[53] ஆனால் இதில் ஏதென்சு, கொரிந்து, குறிப்பாக தீப்ஸ் போன்றவை கலந்துகொள்ள மறுத்துவிட்டன.[54][55] கிரேக்க இராணுவத்தின் தலைவனாக இருந்ததாக இலியட்டில், கூறப்பட்ட அகமம்னான் திராய்க்கு புறப்படுவதற்கு முன்னர், ஆலிசில் (போயோடியன் பிரதேசத்தில் ) பலியிட்டார் எனப்படுகிறது. அந்த இடத்தில் பலிகொடுக்க 396 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், அஜிசிலேயஸ் வந்தார். இருப்பினும், அவர் இதுகுறித்து போயோட்டியர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, மேலும் உள்ளூர் நபருக்குப் பதிலாக தனது சொந்த பூசகரைக் கொண்டு பலியிடும் நிகழ்வை நடத்த வந்தார். இதையறிந்த போயோட்டியர்கள் அவர் பலியிடுவதைத் தடுத்து அவரை அவமானப்படுத்தினர்; எசுபார்த்தாவிற்கும் தீப்சுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமாகிவிட்டதால், அவர்கள் மோதலைத் தூண்ட நினைத்திருக்கலாம். அஜிசிலேயஸ் பின்னர் ஆசியாவிற்குச் சென்றார், ஆனால் தீப்ஸ் அவரை அவரது வாழ்நாள் முழுவதும் வெறுத்தது.[56] ![]() ஆசியாவில் போர்த்தொடர் (கிமு 396–394)எசுபாத்தாவின் முக்கிய தளமான எபேசசில் அஜிசிலேயஸ் தரையிறங்கியவுடன், பாரசீக ஆளுநர் திசாபெர்னசுடன் மூன்று மாத போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வந்தார் இதனால் கிரேக்க நட்பு நாடுகளிடையேயான சிக்கல்களைத் தீர்க்கும் எனக்கருதினார்.[57] இளைய சைரசால் முன்னர் பணியமர்த்தப்பட்ட சில கிரேக்க கூலிப்படையினரை ( பத்தாயிரம் ) இவர் தனது இராணுவத்தில் ஒருங்கிணைத்துக்கொண்டார். அவர்கள் பாரசிகத்திலிருந்து செனபோனின் தலைமையில் திரும்பியிருந்தனர். அவர் அஜிசிலேயசிடம் வேலைக்கு சேர்ந்தார்.[58] எபேசசில், அஜிசிலேயசின் அதிகாரமானது லைசாந்தரால் மங்கவைக்கப்பட்டது. அவர் பெலோபொன்னேசியன் போரின் முடிவில் கிரேக்க நகரங்களின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் பலருடன் மீண்டும் உறவை புதுப்பித்துக்கொண்டார். அவர் அப்பகுதியில் செல்வாக்கு செலுத்துவதால் கோபமடைந்த அஜிசிலேயஸ், லைசாந்தரை இராணுவத்திலிருந்து வெளியேறும் நிலைக்கு உள்ளாக்க பலமுறை அவமானப்படுத்தினார். அவர்களிருவருக்கும் இருந்த முந்தைய உறவு, அஜிசிலேயஸ் அரியணை ஏறுவதில் லைசாந்தரின் பங்கு இருந்தது போன்றவற்றையும் தாண்டி இது நிகழ்ந்தது.[59][60] புளூடார்க் கூற்றின்படி, அஜிசிலேயசால் லைசாந்தர் இராணுவப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அரியணையை தேர்ந்தெடுக்கும் வகையில் லைசாந்தர் தனது இரகசியத் திட்டத்துடன் திரும்பிச் சென்றார்.[61] லைசாந்தர் வெளியேறிய பிறகு, அஜிசிலேயஸ் பாரசிக ஆளுநரான பர்னாபாஸ் பொறுப்பில் இருந்த பிரிஜியா பிரதேசத்தின் தன் கவனத்தைத் திருப்பினார். அந்தப் பகுதி முழுவதும் சூறையாடப்பட்டது.[62][63] பின்னர் வந்த குளிர்காலத்தில் இவர் எபேச்சில் இருந்தார். அங்கு இவர் ஒரு குதிரைப்படைக்கு பயிற்சி அளித்தார். ஒருவேளை பத்தாயிரவரின் குதிரைப்படைக்கு தலைமைதாங்கிய செனோபோனின் ஆலோசனையின் பேரில் பயிற்சி அளித்திருக்கலாம்.[64][65] 395 ஆம் ஆண்டில், ஆசியா மைனரின் தெற்கில் உள்ள காரியாவைத் தாக்குவேன் என்று எசுபார்த்தன் மன்னர் திசாபெர்னசை ஏமாற்றி, மீண்டர் ஆற்றின் மீது பாதுகாப்புக் கோட்டைப் பாதுகாக்கும் விதமாக பாரசிக ஆளுநரை திசைத்திருப்பினார். அதைத் தாக்காத மன்னர், அகேசிலாசுக்கு வடக்கே உள்ள முக்கியமான நகரமான சர்திசாக்கு சென்றார். அங்கு மன்னரை எதிர்கொள்ள திஸ்சபெர்னஸ் விரைந்தார், ஆனால் முன்கூட்டியே அனுப்பப்பட்ட அவரது குதிரைப்படை அஜிசிலேசின் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.[66][67] சர்டிஸ் போரில் வெற்றி பெற்ற பிறகு, நிலம் மற்றும் கடற்படை என இரண்டிற்கும் தலைமை வகித்த முதல் மன்னரானார் அஜிசிலேயஸ் ஆவார்.[68] இவர் தன் கடற்படையை ஒழுங்குபட அமைத்து தன் மைத்துனரான பெய்சாந்தர் அனுபவமற்றவராக இருந்தபோதிலும் அவரை கடற்படை தளபதியாக்கினார்; ஒருவேளை அஜிசிலேயஸ் மீண்டும் ஒரு லைசாந்தரை உருவாக்குவதை தவிர்க்க விரும்பி இருக்கலாம். போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, திசாபெர்னசுக்கு பாரசிக மன்னர் மரணதண்டனை விதித்தார்.[69][70][71] லியோன்டன் கெபாலாய், கோர்டியன் மற்றும் மிலேடோ தீச்சோஸ் கோட்டைகளை கைப்பற்றுவதற்கு தேவையான முற்றுகை உபகரணங்கள் இல்லாததால், 394 ஆம் ஆண்டு அஜிசிலேயசின் பிரிஜியன் போர்த்தொடர் பலனளிக்கவில்லை.[72] ![]() மேலும் கிழக்கே ஆசியாவில் போர்த்தொடர்களை மேற்கொண்டு அகமானசியப் பேரரசின் குடிமக்கள் மத்தியில் ஆட்சியின்மீது அதிருப்தியை உருவாக்க அல்லது ஆசியாவைக் கைப்பற்றவும் அஜிசிலேயஸ் விரும்பினார் என்று செனபோன் கூறுகிறார்.[72] புளூடார்க் கூறுகையில், பாரசிகத்தின் இதயப் பகுதிக்கு, தலைநகரான சூசா வரையில் போர்பயணத்தை, அஜிசிலேயஸ் நடத்த விரும்பியதாக எழுதினார், இதனால் அவரை பேரரசர் அலெக்சாந்தரின் முன்னோடியாக மாற்றினார். அஜெசிலேயஸ் உண்மையில் இவ்வளவு பெரிய போர்த்தொடரை மனதில் வைத்திருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.[74] ஆனால் கிமு 394இல் விரைவில் இவர் ஐரோப்பாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொரிந்தியப் போர் (கிமு 395–387)பெலோபொன்னேசியப் போர் நடந்த காலம் முழுவதும் தீப்சும் கொரிந்தும் எசுபார்த்தாவின் கூட்டாளிகளாக இருந்து போரில் வெற்றியை ஈட்டின. கிமு 404 இல் போர் முடிவடைந்த பிறகு கிரேக்க உலகின் தலைவராக எசுபார்த்தா உயர்ந்து போர் வெற்றியின் முழு நலன்களையும் அனுபவித்ததால் அவை அதிருப்தி அடைந்தன. ஏஜியன் கடல்பகுதியில் எசுபார்த்தாவின் ஏகாதிபத்திய விரிவாக்கமானது அதன் முன்னாள் கூட்டாளிகளை பெரிதும் வருத்தமடையச் செய்தது, குறிப்பாக சிறிய நகரங்களில் நட்பு ஆட்சிகள் மற்றும் தன்னுடைய துணைப்படைகளை நிறுவுவியதில் அதிருப்தியைப் பெற்றது.[75][76] பாரசீகம் வழங்கிய தங்கம் குறித்து மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டாலும் ஆசியாவில் இருந்து அஜெசிலேயஸ் திரும்பிச் செல்லவேண்டும் என்பதற்காக எசுபார்த்தாவின் முன்னாள் கூட்டாளிகள் போரைத் தொடங்க பெரிய பரிசுகள் மூலம் பாரசிக மன்னர் தித்ராஸ்டெஸ் அவர்களைத் தூண்டினார்.[68][77] கிரேக்கத்தில் போசிஸ், லோக்ரிஸ் ஆகிய அரசுகளிடையே எல்லைத் தகறாறு இருந்துவந்தது. போசிஸ் எசுபார்த்தாவின் உதவியையும், லோக்ரிஸ் தீப்சின் உதவியையும் நாடின. இதனால் எசுபார்த்தா தீப்சின் மீது படையெடுக்கத் தீர்மானித்தது.[78] இதனால் லைசாந்தரும் எசுபார்த்தாவின் இன்னொரு மன்னரான பௌசானியாசும் போயோட்டியாவிற்குள் தனித்தனியாக படைகளுடன் நுழைந்தனர். இந்நிலையில் தீப்ஸ் போரில் தனக்கு உதவியாக ஏதென்சை அழைத்தது. இந்நிலையில் லைசாந்தர் பௌசானியாசின் வருகைக்காக காத்திருக்காமல் ஹாலியார்டசை முற்றுகையிட்டார். அங்கு போயோடியர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தோல்வியால் எசுபார்த்தாவில், லைசாந்தரின் நண்பர்களால் பௌசானியாஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் அந்த தண்டனை நாடுகடத்தலாக மாற்றப்பட்டது.[10][79] ஹாலியார்டசில் தீப்ஸ் பெற்ற வெற்றிக்குப் பிறகு, எசுபார்த்தாவிற்கு எதிராக ஒரு பலமான கூட்டணியை உருவாக்கியது. குறிப்பாக ஆர்கோஸ் மற்றும் கொரிந்த்து ஆகியவை இணைந்தன. அங்கு ஒரு போர் ஆலோசனைக் குழு நிறுவப்பட்டது.[80][81] லைசாந்தரின் இறப்பு, பௌசானியாஸ் நாடுகடத்தப்படுதல் என இரு தலைமைகளின் இழப்பால், கிரேக்கம், பாரசீகம் என இரண்டு முனைகளில் போரை நடத்த முடியாத நிலை எசுபார்த்தாவுக்கு ஏற்பட்டது. இதனால் ஆசியாவிலிருந்து அஜெசிலேயசை எசுபார்த்தாவுக்கு திரும்ப அழைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.[82] இவருக்காகப் போராடிய ஆசிய கிரேக்கர்கள் இவருடனே தொடர்ந்து சேவை செய்ய விரும்புவதாகக் கூறினர். அதே சமயம் அஜெசிலேயஸ் முடிந்தவரை விரைவில் ஆசியாவுக்குத் திரும்புவதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.[83] ![]() அஜெசிலேயஸ் தரைவழியாக கிரேக்கத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஹெலஸ்பாண்ட்டைக் கடந்து அங்கிருந்து ஏஜியன் கடலின் கரையோரமாக வந்தார். தெசலியில் அவர் தீப்சுடன் கூட்டணி வைத்த பார்சலியர்களுக்கு எதிராக நார்தாசியம் அருகே குதிரைப்படை போரில் வெற்றி பெற்றார்.[84][85][86] பின்னர் இவர் தெர்மோபைலே வழியாக போயோட்டியாவிற்குள் நுழைந்தார். அங்கு இவர் எசுபார்த்தாவிடமிருந்து துணைப்படைகளைப் பெற்றார்.[87] இதற்கிடையில் ஆசியா மைனரில் பெய்சாந்தரின் தலைமையிலான எசுபார்த்தாவின் கடற்படைக்கும் நாடுகடத்தப்பட்ட ஏதெனியன் தளபதியான கோனான் தலைமையிலான பாரசீகப் படைகளுக்கும் கோரஸ் தீவுக்கு மேற்கே நீட்ஸ் தீபகற்பத்துக்கு அருகே கிமு. 394 இல் நடந்த கடற் போரில் எசுபார்த்தன் கபபற்படை போரழிவை சந்தித்தது. போரில் பெய்சாந்தரும் கொல்லப்பட்டார். எசுபார்த்தாவின் கடலாதிக்கமும் முடிவுக்கு வந்தது. அஜெசிலேயசை எசுபார்த்தாவுக்கு வந்து சேருவதை தடுத்து எசுபார்த்தன்-எதிர்ப்பு கூட்டாளிகள் கொரேனியா என்ற இடத்தில் போரிட்டனர் ஆனால் அவர்களை விரைவாக அஜெசிலேயஸ் தோற்கடித்தார். என்றாலும் போரில் அஜெசிலேயஸ் காயமுற்றார். ஆனால் தீபஸ்கள் நல்ல முறையில் பின்வாங்கிச் சென்றனர். ஆனால் அது பெயரளவிற்கான வெற்றியாகவே இருந்தது. எதிரிப் படைகளை தோல்வியுறச் செயாலும் அவர்களின் படைகளை அவற்றை கிழித்துக் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் கொரேனீயா பிரதேசத்தை விட்டு நீங்கி வேறுவழியாக எசுபார்த்தாவுக்கு வந்து சேர்ந்தார்.[88] 393 இல் கிரேக்கத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க போரும் நடைபெறவில்லை. ஒருவேளை அஜெசிலேயஸ் அவருக்கு ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வர தாமதம் ஆகி இருக்கலாம். அல்லது அவர் திரும்பி வந்த பிறகு தீர்க்கமான வெற்றியை ஈட்டாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தினாலும் லைசாந்தர் மற்றும் பௌசானியாஸ் ஆகியோரின் நண்பர்களின் எதிர்ப்பின் காரணமாக இவர் போர் தலைமையை இழந்திருப்பார்.[89] எசுபார்த்தன் கடற்படையின் அழிவிற்குப் பிறகு, பெலோபொன்னீசின் தெற்கில் உள்ள கைதேரா தீவை கோனான் எளிதாக கைப்பற்றினார். அங்கிருந்து அவர் எசுபார்த்தன் பகுதிகளைத் தாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.[90] இதனால் பாரசீகத்துடன் சமாதானமாக எசுபார்த்தா கிமு 392 இல், ஆசியாமைனருக்கு அண்ட்டல்சிடாஸ் என்பவரை லிடியாவின் பாரசீக ஆளுநரான டிரிபாசஸ் என்பவருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது. மேலும் எசுபார்த்தா ஆசியாவில் உள்ள கிரேக்க நகரங்களின் மீது பாரசீகத்தின் இறையாண்மையை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தது. இதுகுறித்து அறிந்த ஏதென்சு உள்ளிட்ட எதிர்தரப்பினர் எசுபார்த்தாவின் பேச்சுவார்த்தையை பலிக்கவிடாமல் செய்ய ஒரு தூதுக் குழுவை டிரிபாசசிடம் அனுப்பினர். ஆனால் டிரிபாசசிடஸ் எசுபார்த்தாவுக்கு ஆதரவாக இருந்தார்.[91] அன்டலிசிடாசிடம் தனிப்பட்ட ரீதியாக எதிர்ப்புணர்வு கொண்ட அஜெசிலேயஸ் இந்த பேச்சுவார்த்தைகளை எதிர்த்தாலும் உடன்பாடு ஏற்பட்டது. இது நாட்டில் அவரது செல்வாக்கு குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.[92] கிமு 391 வாக்கில், அஜெசிலேயஸ் இராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதால், இவர் தனது செல்வாக்கை மீட்டெடுத்தது தெரிகிறது. அதே நேரத்தில் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் டெலியூடியாஸ் கடற்படைத் தளபதியாக ஆனார்.[93] கிமு 390 இல் இவர் கொரிந்தியப் பிரதேசத்தில் பல வெற்றிகரமான போர்த் தொடர்களை மேற்கொண்டார், லெச்சியம் மற்றும் பிரேயசைக் கைப்பற்றினார். எவ்வாறாயினும், ஏதெனிய தளபதி இஃபிக்ரேட்சால் அழிக்கப்பட்ட ஒரு படையணியின் ( மோரா ) இழப்பு, இந்த வெற்றிகளை சமநிலை ஆக்கியது. பின்னர் அஜெசிலேயஸ் எசுபார்த்தாவுக்குத் திரும்பினார். கிமு 389 இல் இவர் அகர்னானியாவில் ஒரு போர்த்தொடரை மேற்கொண்டார்.[94] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜெசிலேயசால் ஆதரிக்கப்பட்ட அன்டால்சிடாஸ் அமைதி உடன்பாடு, போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கிரேக்கத்தின் மீதான எசுபார்த்தன் மேலாதிக்கத்தை அது நிலைநிறுத்தியது. மேலும் ஆசியா மைனரில் இருந்த கிரேக்க நகரங்கள் அகாமனிசியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டன.[10][95] நிராகரிப்பு![]() தீப்சுடன் புதிதாகப் போர் தொடங்கியபோது, அஜெசிலேயஸ் இரண்டு முறை போயோட்டியா மீது படையெடுத்தார் (கிமு 378 மற்றும் 377 இல்). இருப்பினும் இவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் குறிப்பிடப்படாத ஆனால் கடுமையான நோயின் காரணமாக பெரும்பாலும் செயலற்ற நிலையில் இருந்தார். கிமு 371 பேராயத்தில் இவருக்கும் தீப்சின் தளபதி எபமினோண்டாசுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரது செல்வாக்கின் காரணமாக, தீப்ஸ் சமாதானத்திலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டது. மேலும் 371 இல் தீப்சுக்கு எதிராக படைகளை அணிவகுத்துச் செல்லும்படி அகேசிலாசின் அரச சகாவான கிளியோம்ப்ரோடசுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. லியூக்ட்ரா சமரில் கிளியோம்ப்ரோடஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மேலும் எசுபார்த்தன் மேலாதிக்கம் தூக்கியெறியப்பட்டது.[96] எகிப்து பயணம்![]() மாண்டினாயா போருக்குப் பிறகு, அஜெசிலேயஸ், பாரசீகத்திற்கு எதிராக மன்னர் நெக்டனெபோ I மற்றும் அவரது ஆளுநர் தியோஸ் ஆகியோருக்கு உதவுவதற்காக ஒரு கூலிப்படைக்கு தலைமையேற்று எகிப்துக்குச் சென்றார். கிமு 358 கோடையில், இவர் ஆதரவை தியோசின் உறவினரும் அதிகாரத்துக்கான போட்டியாளருமான இரண்டாம் நெக்டனெபோ க்கு மாற்றினார். அவர் தனக்கு உதவிக்கு ஈடாக இவருக்கு 200 க்கும் மேற்பட்ட தாலத்துகளை வழங்கினார். நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் அஜெசிலேயஸ் சுமார் 41 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, தம் 84 வயதில், சிரேனைக்காவில் இறந்தார். [ii] அவரது உடல் மெழுகினால் பதப்படுத்தப்பட்டு, எசுபார்த்தாவில் புதைக்கப்பட்டது.[95] இவருக்குப் பின் இவரது மகன் மூன்றாம் ஆர்க்கிடாமஸ் ஆட்சிக்கு வந்தார். குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia