இலாகூர் கோட்டை
இலாகூர் கோட்டை (Lahore Fort) உள்ளூரில் சாஹி கிலா (Shahi Qila, உருது/Punjabi: شاہی قلعہ), பாக்கித்தானின் பஞ்சாபிலுள்ள லாகூர் நகரில் உள்ள கோட்டை ஆகும்.[1] அரண் சூழ் இலாகூர் நகரின் வடமேற்கே இக்பால் பூங்காவில் அமைந்துள்ளது. பாக்கித்தானிலேயே மிகப்பெரும் நகரியப் பகுதிப் பூங்காவாக விளங்கும் இக்பால் பூங்கா, 20 எக்டேர் பரப்பளவில் சரிவக வடிவில் அமைந்துள்ளது.[2] இந்தக் கோட்டையின் அடித்தளங்கள் மிகத் தொன்மையானவையாக இருந்தாலும் தற்போது காணப்படும் கோட்டை பெரும்பாலும் முகலாயப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1556–1605 காலகட்டத்தில் அக்பர் ஆட்சியில் பெரிதும் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த முகலாயப் பேரரசர்கள் இங்கிருந்து ஆண்டு வந்தனர். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சீக்கிய, பிரித்தானிய ஆட்சியாளர்களின்பாற் சென்றது. இந்தக் கோட்டைக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. ஔரங்கசீப் கட்டிய வாயில் ஆலம்கிரி வாயில் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வாயில் பாத்ஷாஹி பள்ளிவாசல் நோக்கி அமைந்துள்ளது. அக்பர் கட்டிய பழைய வாயில் மசீட்டி [note 1] அல்லது மசூதி வாயில் எனப்படுகின்றது. இது அரண் சூழ் நகரின் மசீட்டி நோக்கி உள்ளது. தற்போது ஆலம்கிரி வாயில் முதன்மை வாயிலாகப் பயன்படுத்தப்படுகின்றது; மசீட்டி வாயில் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. முகலாயக் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக இந்தக் கோட்டை விளங்குகின்றது.[3] கோட்டையின் உள்ளே உள்ள சீஷ் மகால் அல்லது கண்ணாடி மாளிகை, ஆலம்கிரி வாயில், நவ்லாக்கா பேவிலியன், மோத்தி மசூதி என்பன புகழ்பெற்ற இடங்களாகும். இலாகூரின் சாலிமார் பூங்காவுடன் இந்தக் கோட்டை தெற்காசியாவில் முகலாயர்களின் உச்சத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது. 1981இல் இக்கோட்டையையும் சாலிமார் பூங்காவையும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. 2010 இல் நடைபெற்ற உலகக் கண்காட்சியில் பாக்கித்தானின் அரங்கம் இந்தக் கோட்டையின் உருவ நேர்படியாக அமைக்கப்பட்டிருந்தது.[4] வரலாறுமுகலாயர் மற்றும் முந்தையக் காலம்![]() ![]() இலாகூர் கோட்டை எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் மரபுவழியாகவே செவிவழிச் செய்திகளாக கிடைக்கின்றன.[5] சில இந்துசமயக் கதைகளின்படி இதன் அடித்தளம் இராமாயணக் காலத்தில் இராமரின் மகனான இலவன் இட்டதாக நம்பப்படுகின்றது.[2] இருப்பினும், இக்கோட்டை 11 வது நூற்றாண்டில் கசினியின் மகுமூது காலத்தில் இருந்ததற்கான முதல் வரலாற்றுச் சான்று கிடைத்துள்ளது.[2] வலிவற்ற மண்கோட்டையாக இருந்த இது பின்னாளில் அழிபட்டது.[6] இதற்கான சான்றாக 1240 களில் இதனை மங்கோலியர்கள் அழித்ததாக குறிப்புள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மம்லுக் வம்சத்தின் பல்பான் புதிய கோட்டையைக் கட்டினார்.[7] இதுவும் 1399 இல் தைமூர் படைகளால் அழிக்கப்பட்டது; இருபதாண்டுகளுக்குப் பிறகு சுல்தான் முபாரக் ஷா சையது மீண்டும் இக்கோட்டையை கட்டினார்.[8] 1430களில் இக்கோட்டையை காபூலின் சேக் அலி கைப்பற்றினார்.[9] கோட்டையின் தற்போதைய வடிவும் கட்டமைப்பும் முகலாயர் காலத்தவை. 1575 இல் முகலாயப் பேரரசர் அக்பர் கோட்டையைக் கைப்பற்றி தனது பேரரசின் வடமேற்கு எல்லையைக் காக்கும் கோட்டையாக மாற்றினார்.[10] செங்கற்களையும் சுண்ணாம்பையும் பயன்படுத்தி இக்கோட்டையை மீளமைத்தார். காலப்போக்கில் அழகான அரண்மனைகளும் எழில்மிகு பூங்காக்களும் சேர்க்கப்பட்டன.[11] தௌலத் கானா-எ-காசு-ஒ-ஆம், ஜரோக்கா-எ-தர்சன், வாயிற் மசூதி ஆகியவை அக்பர் கட்டிய மற்ற கட்டிடங்களாகும். அடுத்த வந்த மன்னர்கள் இவரது கட்டிடங்களை மாற்றியமைத்தனர்.[12][10] ஷாஜகான் ஷா புர்ஜ், சீஷ் மகால், நௌலாக்கா அரங்கம் ஆகியவற்றைக் கட்டினார். அவரது மகன் ஔரங்கசீப் இருபுறமும் அரைவட்ட கோபுரங்களையும் மாட அரங்கங்களையும் உடைய ஆலம்கிரி வாயிலைக் கட்டினார்.[13] சீக்கியர்களின் காலம்1758 இல் இரகுநாத ராவ் தலைமையிலான மராத்தியப் படைகள் இக்கோட்டையை கைப்பற்றினர்.[14] பின்னர் பஞ்சாபை ஆண்ட 12 சீக்கிய இராச்சியங்களில் ஒன்றான பாங்கி சீக்கிய வம்சம் இலாகூரிலிருந்து 1760 இலிருந்து 1799 வரை ஆண்டது. குஜ்ரன்வாலா பகுதியின் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் இலாகூரை பாங்கி மிசியிடமிருந்து கைப்பற்றினார்; 1801 இல் இரஞ்சித் சிங் அனைத்து பஞ்சாப் பகுதிகளின் மன்னராக முடிசூடினார்.[15] கோட்டையும் இலாகூர் நகரும் இரஞ்சித் சிங், மனைவிகள் மற்றும் அவர் மைந்தர்கள் கட்டுப்பாட்டில் 1799 முதல் 1849 வரை இருந்தது. 1849இல் இந்தக் கடைசி சீக்கிய பேரரசு வீழ்ந்தது.[16] அண்மையக் காலம்1959 இல் திவான்-இ-ஆம் முன்னால் நிகழ்த்தப்பெற்ற அகழ்வாய்வில் கி.பி 1025 காலத்து தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் புற்றரையில் 25 அடிகள் (7.6 m) ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. 15 அடிகள் (4.6 m) ஆழம்வரை பல பண்பாட்டு அடுக்குகளைக் கண்டனர்; இவை அக்காலத்திற்கும் முன்பே மக்கள் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகளாக அமைந்தன. ஏப்ரல் 2007 இல் பாழடைந்த அக்பரி வாயிலின் தளத்தை மீளமைக்கும்போது கோட்டையில் பிரித்தானிய, சீக்கிய, முகலாய காலத்திய மூன்று தளங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. பிரித்தானியர்கள் செங்கற்களாலும் சீக்கியர்கள் சுட்ட செங்கற்களாலும் முகலாயர்கள் கற்களாலும் தளத்தை அமைத்திருந்தனர். முகலாயர் காலத்து தளம் ஜகாங்கீர் அல்லது ஷா ஜகான் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்.[17] நோர்வே, ஆங்காங், ஐக்கிய இராச்சியம், பிரான்சு நாடுகளின் உதவியுடன் விரிவான மீளமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஏப்ரல் 2006 இல் இதனை அச்சுறுத்தப்பட்ட நிலையிலான உலக மரபு இடப் பட்டியலிலிருந்து இக்கோட்டையை விலக்க ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கோரப்பட்டது.[18] 1990 இல் யுனெசுக்கோ இங்கு பொது நிகழ்ச்சிகளை நிகழ்த்த பஞ்சாப் தொல்லியல் துறையை தடுத்திருந்தபோதிலும் விதிமீறலாக திசம்பர் 23, 2010 இல் இங்கு திருமண வரவேற்பு நடத்தப்பட்டது இதேபோல தொல்லியல் சட்ட மீறலாக அடுத்த மாதமும் திவானி-இ-ஆமில் விருந்தொன்று கொடுக்கப்பட்டது.[19] ஏப்ரல் 2013 இல் இங்கு சீக்கிய அரும்பொருட்களின் கண்காட்சி நடத்தப்பெற்றது. ரஞ்சித் சிங் ஆட்சிக்கால பொருட்களும், பிரித்தானியருக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான உடன்பாட்டின் ஆவணங்களும் ஆயுதங்களும் நகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.[20] மேற்சான்றுகள்
குறிப்புகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia