ஈரசோனியச் சேர்மம்![]() ஈரசோனியச் சேர்மம் அல்லது ஈரசோனிய உப்பு (Diazonium Compound or Diazonium Salt) என்பது R-N2+X− என்னும் பொதுத் தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்ட கரிம வேதியியற் சேர்மம் ஆகும்.[1] இங்கு R என்பது அற்கைல் அல்லது ஏரைல் கூட்டத்தையும் X− என்பது ஏலைடு போன்ற கனிம வேதியியல் எதிர்மின்னயனியை அல்லது கரிம வேதியியல் எதிர்மின்னயனியைக் குறிக்கும்.[1] அசோச் சாயங்களின் கரிம வேதியியல் தொகுப்பில் ஈரசோனிய உப்புகள் (சிறப்பாக, ஏரைல் கூட்டத்தைக் கொண்டவை) பயன்படுத்தப்படுகின்றன.[2] ஆக்கல்ஈரசோனியச் சேர்மங்களை உருவாக்கும் செயன்முறை ஈரசோனியமாக்கல் என அழைக்கப்படும்.[3] இச்செயன்முறையானது, முதன்முதலில் 1858ஆம் ஆண்டில் செருமனி நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரான பீட்டர் கிரீசால் அறிக்கைப்படுத்தப்பட்டது.[4] இவர் ஈரசோனியச் சேர்மங்களின் பல்வேறுபட்ட தாக்கங்களைக் கண்டறிந்துள்ளார்.[5] ஈரசோனிய உப்புகளை உருவாக்குவதற்கான மிக முக்கியமான முறையாக அனிலின் போன்ற அரோமற்றிக்கு அமீன்களை நைத்திரசு அமிலத்துடன் தாக்கமடையச் செய்யும் முறை பயன்படுத்தப்படுகின்றது.[2] பொதுவாக, தாக்கம் நிகழ்த்தப்படும் குடுவையினுள்ளேயே சோடியம் நைத்திரைற்றையும் ஒரு கரிமமற்ற காடியையும் சேர்ப்பதன் மூலம் நைத்திரசு அமிலம் பெறப்படும்.[2] நீர்க் கரைசல் நிலையில் +5 °Cஇற்கு மேற்பட்ட வெப்பநிலைகளில் ஈரசோனிய உப்புகள் உறுதியற்றவை.[2] அவ்வெப்பநிலைகளில் -N+≡N கூட்டமானது நைதரசன் வளிமமாக விடுவிக்கப்பட்டு விடும்.[6] ஈரசோனியச் சேர்மங்களை அறை வெப்பநிலையில் உறுதியான நாற்புளோரோபோரேற்று உப்புகளாக மாற்றுவதன் மூலம், தனிமைப்படுத்திச் சேகரிக்க முடியும்.[7] ஆயினுங் கூட, பெரும்பாலும் ஈரசோனியச் சேர்மங்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவதில்லை, ஆக்கப்பட்ட உடனேயே வேறு தாக்கங்களில் ஈடுபடுத்தப்படுகின்றன.[8] ஈரசோனிய உப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஓர் ஏரைல் சல்போனைல் சேர்மத்தை ஆக்குவதற்கான அணுகுமுறை கீழே காட்டப்பட்டுள்ளது.[9] ஈரசோ இணைப்புத் தாக்கங்கள்ஈரசோனிய உப்புகளின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாக்கம் அசோ இணைப்பு ஆகும்.[10] இச்செயன்முறையில், ஈரசோனிய உப்பானது எதிர்மின்னிச் செறிவு கூடிய சேர்மங்களால் தாக்கப்படும்.[11] இணைப்புச் சேர்மங்களாக அனிலின், பீனால் போன்ற அரீன்கள் அமையும்போது, இச்செயன்முறையானது அரோமற்றிக்கு மின்னூட்டப் பதிலீட்டுத் தாக்கத்திற்கான ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.[10]
கீழே காட்டப்பட்டுள்ளது போல், ஓர் ஈரேரைலைட்டு நிறப் பொருளான மஞ்சள் நிறப் பொருள் 12ஐத் தயாரிப்பதற்கான இணைப்புச் சேர்மமாகப் பயன்படுத்தப்படும் அசற்றோவசற்றிக்கு அமைட்டும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இணைப்புச் சேர்மமாகும்.[12] அசோச் சாயங்கள்விளைவுகளாகப் பெறப்படும் அசோச் சேர்வைகள் பெரும்பாலும் அசோச் சாயங்கள் எனப்படும் பயனுள்ள சாயங்களாக அமைகின்றன.[13] இச்சாயங்கள் அடர்நிறங்களைக் கொண்டிருப்பது, இவை நீண்ட இணை இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது.[14] அனிலின் மஞ்சள் என்ற அசோச் சாயமானது, அனிலினையும் ஈரசோனிய உப்பின் குளிர்ந்த நிலையிலுள்ள கரைசலையும் ஒன்றுசேர்த்து நன்கு குலுக்குவதன் மூலம் பெறப்படுகின்றது.[6] அனிலின் மஞ்சளானது மஞ்சள் நிறத் திண்மமாகப் பெறப்படும்.[15] இவ்வாறே, 2-நத்தோலின் குளிர்ந்த கரைசலைச் சேர்க்கும்போது சிவப்பு நிற வீழ்படிவு பெறப்படும்.[2] ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் அமில-மூலக் காட்டியான மெதைல் செம்மஞ்சளும் ஓர் அசோச் சாயம் ஆகும்.[16] -N+≡N கூட்டத்தை இடம்பெயர்த்தல்அரீன் ஈரசோனிய நேர்மின்னயனிகளின் பல்வேறுபட்ட தாக்கங்களில் -N+≡N கூட்டமானது வேறொரு கூட்டத்தால் அல்லது அயனியால் இடம்பெயர்க்கப்படுவதுண்டு.[2] ஆலசன்களால் இடம்பெயர்த்தல்சாந்தமேயரின் தாக்கம்HClஇல் கரைக்கப்பட்ட செப்பு(I) குளோரைட்டுடன் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டைச் சேர்த்துச் சூடாக்க, குளோரோபென்சீன் பெறப்படும்.[2]
இவ்வாறே HBrஇல் கரைக்கப்பட்ட செப்பு(I) புரோமைட்டுடன் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டைச் சேர்த்துச் சூடாக்க, புரோமோபென்சீன் பெறப்படும்.[2]
காட்டர்மேனின் தாக்கம்காட்டர்மேனின் தாக்கத்தின்போது, பென்சீன் ஈரசோனியம் குளோரைடானது, செப்புத் தூளுடன் HCl அல்லது HBr சேர்ந்த கலவையுடன் சேர்த்துச் சூடாக்கப்பட்டு, குளோரோபென்சீன் அல்லது புரோமோபென்சீன் பெறப்படும்.[17] செருமனி நாட்டைச் சேர்ந்த உலுடுவிகு காட்டர்மேன் என்ற அறிவியலாளரால் 1890இல் இத்தாக்கம் கண்டறியப்பட்டதால், அவருடைய பெயரைக் கொண்டே இத்தாக்கத்தின் பெயரும் வழங்கப்பட்டு வருகின்றது.[17]
அயோடைட்டால் இடம்பெயர்த்தல்பென்சீன் வளையத்தில் அயோடினை நேரடியாகக் கொண்டு வருவது கடினமாக இருப்பினும் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்குப் பொற்றாசியம் அயோடைடைச் சேர்ப்பதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.[2]
புளோரைட்டால் இடம்பெயர்த்தல்பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்குப் புளோரோபோரிக்கமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் பென்சீன் ஈரசோனியம் புளோரோபோரேற்றானது பெறப்படும்.[18] பென்சீன் ஈரசோனியம் புளோரோபோரேற்றின் வெப்பப் பிரிகையின் மூலம் புளோரோபென்சீனைப் பெறமுடியும்.[19] இத்தாக்கம் பால்சு-சீமன் தாக்கம் என்று அழைக்கப்படும்.[19]
மற்றைய கூட்டங்களால் இடம்பெயர்த்தல்நீரியத்தால் இடம்பெயர்த்தல்பென்சீன் ஈரசோனியம் குளோரைடானது உபபொசுபரசு அமிலத்தால் அல்லது சோடியம் தானேற்றால் தாழ்த்தப்பட்டு, பென்சீன் பெறப்படும்.[2]
ஐதரொட்சைல் (-OH) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டின் நீர்க்கரைசலை 100 °Cஇற்குச் சூடாக்குவதன் மூலம் பீனாலைப் பெற முடியும்.[2]
விளைவாகப் பெறப்படும் பீனாலானது பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுடன் தாக்கமடைவதைக் குறைப்பதற்காக, இத்தாக்கமானது அமில ஊடகத்தில் நிகழ்த்தப்படுகின்றது.[2] நைத்திரோக் (-NO2) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்பென்சீன் ஈரசோனியம் புளோரோபோரேற்றைச் செம்பு முன்னிலையில் சோடியம் நைத்திரைற்றுடன் தாக்கமடையச் செய்து, நைத்திரோபென்சீன் பெறப்படும்.[20]
சயனைட்டுக் (-CN) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்ஏரைல் ஏலைடுகளில் கருநாட்டப் பிரதியீட்டுத் தாக்கத்தை இடம்பெறச் செய்து, சயனைட்டுக் கூட்டத்தைக் கொண்டு வர முடியாது.[21] ஆனால், பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்கு CuCNஐச் சேர்ப்பதன் மூலம் பென்சோநைத்திரைலைப் பெறமுடியும்.[2]
இது சாந்தமேயரின் தாக்கத்தின் ஒரு சிறப்பு வகையாகும்.[22] தயோல் (-SH) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்ஈரசோனிய உப்புகளை இரண்டு படிமுறைகளினூடாகத் தயோல்களாக மாற்றலாம்.[23] பென்சீன் ஈரசோனியம் குளோரைடானது பொற்றாசியம் எதைல் சாந்தேற்றுடன் தாக்கமுற விடப்பட்டுப் பெறப்பட்ட இடைநிலையான தயோசாந்தேற்று எசுத்தரை நீர்ப்பகுப்படையச் செய்து, தயோபீனாலைப் பெறலாம்.[24]
ஏரைல் (-Ar) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்ஏரைல் ஈரசோனிய உப்புகளைப் பயன்படுத்தி, ஓர் ஏரைல் கூட்டத்தை இன்னோர் ஏரைல் கூட்டத்துடன் இணைக்க முடியும்.[25] சோடியம் ஐதரொட்சைட்டின் முன்னிலையில் பென்சீனையும் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டையும் தாக்கமுற விடுவதன் மூலம் இருபீனைலைப் பெற முடியும்.[25]
இத்தாக்கமானது கோம்பேகு-பாச்சுமான் தாக்கம் என அழைக்கப்படுகிறது.[26] பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்குச் செப்புத் தூளையும் எத்தனாலையும் சேர்ப்பதன் மூலமும் இதே போல இருபீனைலைப் பெற முடியும்.[25] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia