ஈரான் நாடாளுமன்றம் (Islamic Consultative Assembly) (Persian: مجلس شورای اسلامی, romanized: Majles-e Showrā-ye Eslāmī), இதனை ஈரானிய மஜ்லீஸ் என்றும் அழைப்பர். தற்போது ஈரானின் நாடாளுமன்றம் 290 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2]
பணிகள்
ஈரானிய நாடாளுமன்றம், அரசியலமைப்பின் எல்லைக்குள் அனைத்து பிரச்சினைகள் பற்றிய சட்டங்களையும் சட்டமாக்க முடியும்.[3]
அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் அரசின் சட்ட முன்மொழிவுகள் ஈரானிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படுகின்றன.[4]
நாட்டின் அனைத்து விவகாரங்களையும் விசாரிக்கவும் ஆராயவும் ஈரானின் நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு. [5]
சர்வதேச ஒப்பந்தங்கள், நெறிமுறைகள், உடன்படிக்கைகள் அனைத்தும் ஈரான் இஸ்லாமிய நாடாளுமன்றத்தால் ஒப்புதல் பெறப்பட வேண்டும். [6]
அரசாங்கத்தால் தேசிய அல்லது சர்வதேச கடன்கள் அல்லது மானியங்களைப் பெறுவதும் வழங்குவதும் இஸ்லாமிய நாடாளுமன்றக் கூட்டத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். [7]
அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர், மற்ற அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் முன்னதாக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஈரான் குடியரசுத் தலைவர் பெற வேண்டும். [8]
ஈரான் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஈரான் குடியரசுத் தலைவரிடம் ஒரு கேள்வியை எழுப்பும்போதோ, அல்லது நாடாளுமன்றத்தின் எந்தவொரு உறுப்பினரோ தங்கள் கடமைகள் தொடர்பான ஒரு விஷயத்தில் ஒரு அமைச்சரிடம் கேள்வி எழுப்பும்போதோ, நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு கேள்விக்கு பதிலளிக்க குடியரசுத் தலைவரோ அல்லது அமைச்சரோ கடமைப்பட்டுள்ளனர்.[9]
ஈரானின் நாடாளுமன்றம் நிறைவேற்றிய அனைத்து சட்டங்களும் பாதுகாவலர்கள் மன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இஸ்லாமிய மற்றும் அரசியலமைப்பின் அளவுகோல்களுடன் அதன் பொருந்தக்கூடிய தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் பாதுகாவலர் மன்றம் அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது சட்டத்துடன் பொருந்தாது எனக் கண்டால், அதனை மீண்டும் நாடாளுமன்றத்தின் மறுஆய்வுக்குத் திருப்பின் அனுப்பும்.
உறுப்பினர்
ஈரானின் மாகாண வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
C
தற்போதுள்ள ஈரானின் நாடாளுமன்றத்திற்கு 290 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 14 உறுப்பினர்கள் இசுலாமியர்கள் அல்லாத மதச்சிறுபான்மையினர் (4.8%) ஆவார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8% பெண்கள் ஆவார். [10] நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களை பதவி நீக்க முடியும். மேலும் தனது பதவியை தவறாக பயன்படுத்திய ஈரானின் குடியரசுத் தலைவர் மீது பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவதன் மூலம் விசாரணை நடத்த முடியும். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய சட்டத்தை இயற்றவோ, நீக்கவோ அல்லது திருத்தவோ முடியும். நாடாளுமன்றம் சர்வதேச ஒப்பந்தங்களை அங்கீகரிக்கிறது. மேலும் தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கிறது.
ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை ஈரானிய பாதுகாவலர்கள் மன்றம் ஒப்புதல் அளிக்கும். அவ்வாறு ஒப்புதல் பெற்றவர்கள் மட்டுமே ஈரானிய நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும். ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற வேட்பாளர்கள் கோட்பாட்டிலும், நடைமுறையிலும் உறுதிபூண்டுள்ளோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தொகுதிகள்
தற்போது ஈரான் நாடாளுமன்றம் 290 உறுப்பினர்களைக் கொண்டிருப்பினும், 207 தேர்தல் தேர்தல் தொகுதிகளுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். அதில் 5 தொகுதிகள் மதச்சிறுபான்மையோருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (78 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈரானின் அதியுயர் தலைவர் நியமிப்பார்)
அவைத் தலைவர்கள்
நாடாளுமன்ற அவைத் தலைவர் மற்றும் துணை அவைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்நதெடுப்பர். நாடாளுமன்ற அவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பதவிக் காலம் 1 ஆண்டு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அவைத் தலைவர் தேர்தல் நடைபெறும்.