உசைன் சகீத் சுராவர்தி
உசேன் சகீத் சுராவர்தி (Huseyn Shaheed Suhrawardy, ஆங்கில உச்சரிப்பு: ɦusæŋ ʃɑid sɦuɾɑwɑɾdɪə; Urdu: حسین شہید سہروردی; Bengali: হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী; 8 செப்டம்பர் 1892 – 5 திசம்பர் 1963) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்த வங்காள அரசியல்வாதி ஆவார். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் கடைசி வங்காள மாகாணப் பிரதமராக இருந்தவர். 1947இல் பாக்கித்தான் விடுதலை பெற்றதையடுத்து, சுராவர்தி கிழக்கு பாக்கித்தானின் மிகவும் புகழ்பெற்ற அரசியல்வாதியாக விளங்கினார். பாக்கித்தானின் ஐந்தாவது பிரதமராகவும் விளங்கினார்.[1][2] பிரபலமான வங்காள முசுலிம் குடும்பத்தில் பிறந்த சுராவர்தி ஆக்சுபோர்டில் படித்து 1921இல் இந்தியா திரும்பியபின் சித்தரஞ்சன் தாசின் சுயாட்சிக் கட்சியில் இணைந்தார். 1930களில் பிரித்தானிய இந்தியாவின் பெரும் நகரங்களில் ஒன்றான கொல்கத்தாவின் மேயராகப் பணியாற்றினார். பின்னர் அகில இந்திய முசுலிம் லீக்கில் இணைந்தார்; 1940களில் இக்கட்சியின் சார்பில் வங்காள மாகாணத்தின் பிரதமராக பொறுப்பேற்றார். சரத் சந்திர போசுடன் இணைந்து 1947இல் வங்காளத்தைப் பிரிப்பதற்கு மாற்றாக ஐக்கிய வங்காளம் உருவாக்கப்பட கோரிக்கை வைத்தார். 1947இல் பாக்கித்தான் விடுதலை பெற்றபின்னர், கிழக்கு பாக்கித்தானின் முன்னணி அரசியல்வாதியானார். முசுலிம் லீக்கிலிருந்து விலகி 1952இல் புதியதாக உருவான இடதுசாரி அவாமி லீக்கில் இணைந்தார். ஏ. கே. பசுலுல் ஹக், மவுலானா பாஷானா போன்றோருடன் இணைந்து அனைத்து வங்காள ஐக்கிய முன்னணிக்குத் தலைமையேற்றார். 1954இல் நடந்த தேர்தலில் முசுலிம் லீக்கை தோற்கடித்து வெற்றி கண்டார்.[1][3] 1956இல் அவாமி லீக்கும் குடியரசுக் கட்சியும் இணைந்து பாக்கித்தானில் கூட்டணி அமைத்தனர். சுராவர்தி பாக்கித்தானின் பிரதமராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய ஆட்சியில் மின்சாரப் பற்றாக்குறை,கிழக்கு, மேற்கு பாக்கிதான்களிடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வை அகற்றுதல், படைத்துறைகளை வலிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். வழங்கல்பக்க பொருளியல், அணுவாற்றல் மற்றும் அணுமின் நிலையங்களைத் திட்டமிடுதல், பாக்கித்தான் படைத்துறையை சீரமைத்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கினார். வெளிநாட்டு உறவில் ஐக்கிய அமெரிக்காவுடன் உத்திசார் உறவை வளர்த்துக் கொண்டார். தேசியமயமாக்கம், நிவாரணப் பங்கிடலில் அவரது கொள்கைகளால் பாதிப்படைந்த அரசு அலுவலர்களும் வணிக மக்களும் தந்த அழுத்தத்தால் அக்டோபர் 10, 1957இல் பதவி விலகினார். அயூப் கான் தலைமையிலான படையாட்சிக் குழுமம் பொதுவாழ்வில் அவரை தடை செய்தது. 1963 இல் சுராவர்தி லெபனானின் பெய்ரூத்தில் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்தார்.[3] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia