உடற்செல் மிகுமாற்றம் (Somatic hypermutation; SHM) என்பது நோயெதிர்ப்புத் தொகுதியானதுநுண்ணுயிரிகளைப் போன்ற புதிய அயல் மூலகங்களை எதிர்கொள்ள இணக்கமாகும் உயிரணுச் செயற்பாட்டினைக் குறிக்கும். ஈர்ப்பு முதிர்வு (affinity maturation) நிகழ்வின் ஒரு முக்கிய பாகமான உடற்செல் மிகுமாற்றமானது, அயல் எதிர்ப்பிகளை அடையாளம் கண்டுகொள்ளும் "பி-செல்" ஏற்பிகளைப் பலவகைப்பட்டதாக்குகிறது. இதன் மூலம், ஒரு உயிரியின் வாழ்நாளில் ஏற்படும் உடலுக்கு ஊறு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக நோயெதிர்ப்புத் தொகுதி போராட வழிவகுக்கிறது[1]. உடற்செல் மிகுமாற்றம், எதிர்ப்பான்களின் மாறுபடு பகுதி மரபணுக்களின், திட்டமிட்ட மரபணு சடுதிமாற்ற நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. கருவணுவரிசை சடுதிமாற்றத்தைப் (germline mutation) போலல்லாது, உடற்செல் மிகுமாற்றம் தனிப்பட்ட வெள்ளையணுக்களிலேயே ஏற்படுகின்றது. எனவே, இத்தகு மரபணு சடுதி மாற்றங்கள் சந்ததிகளுக்கு செல்வதில்லை[2]. இலக்கற்ற உடற்செல் மிகுமாற்றங்களே "பி-செல்" வடிநீரகப்புற்று உருவாகும் வழிமுறைக்கு காரணமாக இருக்கக்கூடும்[3].