உமா பாரதி
உமா பாரதி (Uma Bharti, 3 மே 1959, வழமையாக "சாத்வி" என்ற முன்னொட்டுடன்) இந்திய அரசில் நீர்வளம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னாள் அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார். இள வயதிலேயே குவாலியரின் அரசி விஜயா ராஜே சிந்தியாவினால் பாரதிய ஜனதா கட்சிக்காக வளர்க்கப்பட்டவர். 1984இல் 25 அகவையிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார். 1989இல் மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1991, 1996,1998 ஆண்டுகளில் இத்தொகுதியில் தொடர்ந்து வென்று தக்க வைத்துக் கொண்டார். 1999இல் போபால் மக்களவைத் தொகுதிக்கு மாறி அங்கும் வெற்றி கண்டார். வாச்பாய் அரசில் ஆய அமைச்சராகவோ இணை அமைச்சராகவோ மனிதவள மேம்பாடு, சுற்றுலா, இளைஞர் மற்றும் விளையாட்டு, நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணி புரிந்திருக்கிறார். 1980களிலும் 90களிலும் பாரதிய ஜனதா கட்சியும் விசுவ இந்து பரிசத் அமைப்பும் முன்னெடுத்த ராம ஜென்ம பூமி இயக்கத்தில் உமா பாரதி முதன்மை பங்கேற்றுள்ளார். பாபர் மசூதி இடிப்பின் போது அங்கிருந்த உமா பாரதி மீது லிபெர்ஃகன் குழு குற்றம் சாட்டியுள்ளது.[1] 2003 மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் முன்வழி நடத்தி தமது கட்சி மூன்றில் இரு பெரும்பான்மை எட்ட வகை செய்தார். தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹூப்ளி கலவர வழக்கில் கைதாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகத்து 2004இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[2][3] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia