எர்னஸ்ட் செயின்
எர்னஸ்ட் போரிசு செயின் (Ernst Boris Chain) [1] (19 ஜூன் 1906 - 12 ஆகஸ்ட் 1979) ஒரு செருமானிய-பிரித்தானிய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் தனது இணை ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் ஃப்ளோரே மற்றும் அலெக்சாண்டர் பிளெமிங் ஆகியோருடன் 1945 ஆம் ஆண்டில் பென்சிலின் உருவாக்கத்திற்காக உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர் ஆவார்.[2][3][4][5][6][7][8][9][10] வாழ்க்கை மற்றும் தொழில்![]() ![]() மார்கரெட் (நீ ஈஸ்னர்) மற்றும் மைக்கேல் செயின் ஆகியோரின் மகனாக பெர்லினில் செயின் பிறந்தார். மைக்கேல் செயின் ஒரு வேதியியலாளராகவும் மற்றும் வேதியியல் பொருட்களைக் கையாளும் தொழிலதிபராகவும் இருந்தார்.[11] அவரது குடும்பம் செபராது யூத மற்றும் அஸ்கனாசு யூத வம்சாவளியைச் சேர்ந்தது. இவரது தந்தை வெளிநாட்டிலிருந்து வேதியியல் படிப்பதற்காக ரஷ்யாவிலிருந்து குடிபெயர்ந்தார், அவரது தாய் பெர்லினிலிருந்து வந்தவர்.[12] 1930 ஆம் ஆண்டில், ஃபிரெட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டம் பெற்றார். நாசிக்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தான் ஒரு யூதராக இருந்த காரணத்தால், இனி செருமனியில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று செயின் புரிந்து கொண்டார். அவர் செருமனியை விட்டு வெளியேறி இங்கிலாந்து சென்றார், ஏப்ரல் 2, 1933 அன்று தனது கையிருப்பாக 10 டாலருடன் வந்தார். மரபியலாளரும் உடலியல் நிபுணருமான ஜே.பி.எஸ் ஹால்டேன் லண்டனின் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் ஒரு இடத்தைப் பெற அவருக்கு உதவினார். சில மாதங்களுக்குப் பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஃபிட்ஸ்வில்லியம் ஹவுஸில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், அங்கு சர் பிரடெரிக் கௌலாண்ட் ஆப்கின்சின் வழிகாட்டுதலில் பாஸ்போகொழுமியங்கள் தொடர்பாக பணியாற்றத் தொடங்கினார். 1935 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நோயியல் துறையில் விரிவுரையாளராக ஒரு வேலையை ஏற்றுக்கொண்டார். இந்த நேரத்தில் அவர் பாம்பு நச்சு, கட்டி வளர்சிதை மாற்றம், லைசோசைம்கள் மற்றும் உயிர் வேதியியல் நுட்பங்கள் உள்ளிட்ட பல ஆராய்ச்சி தலைப்புகளில் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டில், ஓவர்ட் புளோரேயுடன் இணைந்து நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை பாக்டீரியா எதிர்ப்பு முகவர்களை ஆராய்ந்தார். இது அவருக்கும் புளோரேக்கும் பென்சிலின் பற்றி விவரித்த அலெக்சாண்டர் பிளெமிங்கின் படைப்புகளை மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தது. செயின் மற்றும் புளோரே பென்சிலினின் சிகிச்சை நடவடிக்கை மற்றும் அதன் வேதியியல் கலவை ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். செயின் மற்றும் புளோரே பெனிசிலீனின் கிருமிகளைக் கொல்லும் காரணியை எவ்வாறு பிரித்தெடுப்பது மற்றும் செறிவூட்டுவது என்பதைக் கண்டுபிடித்தனர். இந்த ஆராய்ச்சிக்காக, செயின், புளோரே மற்றும் பிளெமிங் ஆகியோர் 1945 இல் நோபல் பரிசைப் பெற்றனர். எட்வர்ட் ஆபிரகாமுடன் சேர்ந்து 1942 ஆம் ஆண்டில் பென்சிலினின் பீட்டா-லாக்டம் கட்டமைப்பை கோட்பாடு செய்வதிலும் ஈடுபட்டார்,[13] இது 1945ஆம் ஆண்டில் டோரதி ஓட்ச்கின் செய்த எக்சு கதிர் படிகவியல் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், செயின் தனது தாயும் சகோதரியும் நாசிகளால் கொல்லப்பட்டதைக் அறிந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்டிடுடோ சுப்பீரியோர் டி சானிடே (சுப்பீரியர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்) இல் பணியாற்றுவதற்காக செயின் ரோம் சென்றார். 1964 ஆம் ஆண்டில் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உயிர் வேதியியல் துறையின் நிறுவனர் மற்றும் தலைவராக பிரிட்டனுக்குத் திரும்பினார். அங்கு அவர் ஓய்வு பெறும் வரை தங்கியிருந்தார், நொதித்தல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றார்.[14] அவர் பேராசிரியர் ஆல்பர்ட் நியூபெர்கரின் வாழ்நாள் நண்பராக இருந்தார், அவரை 1930 களில் பெர்லினில் சந்தித்தார். 1948 ஆம் ஆண்டில், அவர் ரெனீ சோஸ்கின், மேக்ஸ் பெலோப், ஜான் பெலோப் மற்றும் நோரா பெலோப் ஆகியோரின் சகோதரியான அன்னே பெலோப்-செயின் என்பவரை மணந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க உயிர் வேதியியலாளர் ஆவார். அவரது பிற்கால வாழ்க்கையில், அவருடைய யூத அடையாளம் அவருக்கு மிக முக்கியமானதாக இருந்தது. செயின் ஒரு தீவிர சியோனிஸ்டாக இருந்தார். அவர் 1954 ஆம் ஆண்டில் ரெஹோவோட்டில் இருந்த வைசுமன் அறிவியல் கழகத்தின் ஆளுநர் குழுவில் உறுப்பினரானார், பின்னர் நிர்வாகக் குழுவின் உறுப்பினரானார். அவர் தனது பிள்ளைகளை யூத நம்பிக்கையினுள் பாதுகாப்பாக வளர்த்தார், அவர்களுக்காக பாடநெறிக்கு அப்பாற்பட்ட கல்வியை ஏற்பாடு செய்தார். 1965 ஆம் ஆண்டில் உலக யூத காங்கிரஸ் அறிவுஜீவிகள் மாநாட்டில் வழங்கப்பட்ட 'நான் ஏன் ஒரு யூதர்' என்ற உரையில் அவரது கருத்துக்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டன. செயின் 1979 இல் மாயோ பொது மருத்துவமனையில் இறந்தார். இம்பீரியல் கல்லூரி லண்டன் உயிர் வேதியியல் கட்டிடம் அவரது நினைவாக பெயரிடப்பட்டது.[14] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia