ஐக்கிய அமெரிக்கப் பேரவை
ஐக்கிய அமெரிக்கப் பேரவை (United States Congress) என்பது ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் சட்டமன்றமாகும். இது மேலவை (செனட்) மற்றும் கீழவை என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது. மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத ஆறு பேராளர்கள் அமெரிக்க சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். குறிப்புகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia