ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை
ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை (ஆங்கிலம்: United States House of Representatives) என்பது ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் கீழவையாகும். இது மேலவையுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்காவில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டுள்ளது. இந்த அவையின் அமைப்பு குறித்து ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு 1இல் வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் அளவிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 50 மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பேரவை மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சார்பாளர்களால் இந்த அவை அமைக்கப்படுகிறது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சார்பாளர் உண்டு. 1789இல் தொடங்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவையின் அனைத்து சார்பாளர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவையில் வாக்களிக்கும் சார்பாளர்களின் எண்ணிக்கை சட்டப்படி 435ஆக நிறுவப்பட்டுள்ளது.[1] அத்துடன், தற்போது ஆறு வாக்களிக்காத உறுப்பினர்களும் உள்ளனர். எனவே அமெரிக்க சார்பாளர்கள் அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 441 ஆகும்.[2] 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஐம்பத்து மூன்று சார்பார்களைக் கொண்டுள்ள கலிபோர்னியா, அதிகளவு சார்பாளர்களைக் கொண்டுள்ள மாநிலமாகும். ஏழு மாநிலங்கள் ஒரேயொரு சார்பாளரை மட்டும் கொண்டுள்ளன. அவை அலாஸ்கா, டெலவெயர், மொன்ட்டானா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வெர்மான்ட் மற்றும் வயோமிங் ஆகியனவாகும்.[3] மசோதாக்கள் என அழைக்கப்படும் கூட்டாட்சி சட்டங்களை நிறைவேற்றுவதே சார்பாளர்கள் அவையின் பணியாகும். இங்கு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மேலவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அதிபரின் பரீசிலனைக்கு அனுப்பப்படும். இந்த அடிப்படை அதிகாரத்திற்கு மேலாக, இந்த அவைக்கென்று சில தனித்துவ அதிகாரங்களும் உள்ளன. அவற்றில் வருவாய் தொடர்பான அனைத்து மசோதாக்களையும் கொண்டுவருவது, விசாரணைக்காக மேலவைக்கு அனுப்பப்படும் முன்பு கூட்டாட்சி அதிகாரிகளை பதவிநீக்கம் செய்வது, எந்தவொரு வேட்பாளரும் அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான வாக்காளர்களைப் பெறாத சூழலில் அதிக வாக்காளர்களைப் பெற்ற முதல் மூன்று வேட்பாளர்களில் இருந்து அதிபரைத் தேர்ந்தெடுப்பது ஆகியன குறிப்பிடத்தக்க அதிகாரங்களாகும்.[4][5] இந்த அவையின் கூட்டம் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடத்தின் தெற்குப் பிரிவில் நடைபெறுகிறது. அவையின் தலைமை அதிகாரியாக அவைத்தலைவர் செயல்படுகிறார். இவர் அவை உறுப்பினார்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே இவர் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia