ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம்
நான்காம் வில்லியம் (William IV, (வில்லியம் ஹென்றி; 21 ஆகத்து 1765 – 20 சூன் 1837) 1830 முதல் இறக்கும் வரை பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, மற்றும் ஹனோவர் ஆகியவற்றின் மன்னராகப் பதவியில் இருந்தவர். மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் மூன்றாவது மகனான வில்லியம், நான்காம் ஜோர்ஜ் மன்னரின் இளைய சகோதரரும், நான்காம் ஜோர்ஜிற்குப் பின்னர் பதவிக்கு வந்தவரும் ஆவார். இளமையில் அரச கடற்படையில் பணியாற்றிய வில்லியம், "அரச மாலுமி" என அழைக்கப்பட்டார்.[1][2] வட அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளில் பணியாற்றிய இவர், கடற்படை சமர்களில் பெரிதளவு பங்குபற்றவில்லை. இவரது இரண்டு அண்ணன்களும் சட்டபூர்வமான வாரிசுகள் இல்லாமல் இறந்ததை அடுத்து வில்லியம் தனது 64வது அகவையில் பிரித்தானிய மன்னராக முடி சூடினார். இவரது ஆட்சிக் காலத்தில் பல சீர்திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வறியவர் சட்டம் மேன்மைப்படுத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் கட்டுப்படுத்தப்பட்டது. பிரித்தானியப் பேரரசின் அனேகமான அனைத்துப் பிரதேசங்களிலும் அடிமை முறை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது. வில்லியம் தனது ஏனைய சகோதரர்களைப் போன்று அரசியலில் அதிகம் ஈடுபடாவிடினும், இவரே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் ஒருவரை நியமித்த கடைசி மன்னார் ஆவார். வில்லியம் இறக்கும் போது, இவருக்கு சட்டபூர்வமாக பிள்ளைகள் எவரும் உயிருடன் இல்லாவிடினும், 20 ஆண்டுகளாக டொரத்தியா யோர்தான் என்ற நடிகை ஒருவருடன் இருந்த தொடர்பால் இவர் இறக்கும் போது இவருக்கு 10 சட்டபூர்வமல்லாத பிள்ளைகளில் 8 பேர் உயிருடன் இருந்தனர். வில்லியத்தை அடுத்து அவரது பெறாமகள் விக்டோரியா பிரித்தானிய அரசியாகவும், வில்லியமின் சகோதரர் முதலாம் ஏர்னெஸ்டு ஆகுஸ்தசு அனோவரின் மன்னராகவும் முடி சூடினர். மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia