ஓர்மவியல் (உயிரியல்)![]() உயிரியலில் பயன்படுகின்ற, ஓர்மவியல் அல்லது அமைப்பொப்பியல் (ஆங்கிலம்:homology) எனும் சொல்லாடலானது, வெவ்வேறு உயிர்வரிசைகளின் , கட்டமைப்புச் சோடி, மரபுக்கூறு என்பவற்றின் இடையே காணப்படும் பொது மூதாதைத்தன்மை ஆகும். முள்ளந்தண்டுளிகளின் முன்னுறுப்பு, வௌவாலின் இறக்கைகள், குரங்கினத்தின் கைகள், திமிங்கிலத்தின் முன்செட்டை, நாய் முதலான அங்கிகளின் முன்கால்கள் என்பவற்றுக்கிடையே உள்ள ஒருமை, ஓர்மவியலுக்கு வழக்கமான உதாரணமாகச் சொல்லப்படுகின்றது. இவை ஒரே பொது மூதாதையிடமிருந்து இவ்வங்கிகள் அனைத்தும் பெற்ற நாற்பாத (tetrapod ) அமைப்பிலிருந்து இயைபடைந்தவை. ஓர்மக் கட்டமைப்புகள் பொதுமூதாதையிடமிருந்து, வெவ்வேறு நோக்கங்களுக்காக திரிபடைந்து தோன்றியிருக்கவேண்டும் என்ற கருத்தை பரிணாம உயிரியல் முன்வைக்கிறது. இக்கொள்கையானது, முதன்முதலில் சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில் 1859இல் முன்மொழியப்பட்டது. எனினும் அரிஸ்டாட்டில் முதலிய பல்வேறு அறிஞர்களால், இது முன்பே பரவலாக அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஓர்மவியலுக்கான ஆங்கிலப்பதமான ஹோமோலாஜி என்பது, ரிச்சர்ட் ஓவன் எனும் உடற்கூற்றியல் நிபுணரால், முதன்முதலாக 1843இல் முன்மொழியப்பட்டது. ஒரே மூலத்திலிருந்தும் ஒரேவிதத்திலும், முளையத்திலிருந்து விருத்தியாகின்ற உறுப்புகள், படிமுறையில் ஓர்மவியலை ஒத்துப்போகின்றன. ஒரே முளையத்திசுவிலிருந்து விருத்தியாகும் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் அமைப்பொத்தவை அல்லது ஓர்மையானவை. மனிதன் உள்ளிட்ட முலையூட்டிகளில், சூலகம் மற்றும் விந்தகம் என்பனவும் அமைப்பொத்தவையே. உயிரின் அடிப்படைக் கூறுகளாக செல்களில் காணப்படும் புரதம் அல்லது தாயனைத் தொடர்கள் இடையேயும் இந்த ஓர்மையை காண முடியும். வரலாறு![]() பொ.மு 350இல் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் ஓர்மவியல் முதன்முதலாக அவதானிக்கப்பட்டிருந்ததுடன், 1555இல் பியர் பெலோன் எனும் அறிஞர் எழுதிய நூலில் மனித மற்றும் பறவை வன்கூட்டிடையேயான ஒற்றுமைகள் ,அவரால் விரிவாக ஆராயப்பட்டிருந்தன.அப்போதெல்லாம் பரிணாமம் பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை என்றபோதும்,செருமனியப் பாரம்பரியத்தில், ஓர்மவியலானது, இயற்கையாகவே வெளிக்காட்டப்படும் உயிரிகளிடையான ஒற்றுமையைக் குறிப்பதாக நம்பப்பட்டது. பிற்காலத்தில் ஓர்மவியல் தொடர்பான விரிவான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. ஓர்மவியல் என்ற பதத்தை உடற்கூற்றியலாளரான ரிச்சர்ட் ஓவன் 1843இல் முன்மொழிந்திருந்தார். 1859இல், சார்லஸ் டார்வின் ஒரு பொதுமூதாதையிலிருந்து உயிரிகள் தோன்றி வளர்ந்ததை ஓர்மவியல் குறிப்பதாகவும், எனவே ஒவ்வொரு உயிர்வரிசைகளும் ஒரே உயிரி மரத்தின் கிளைகளே என்றும் விளக்கினார்.[2][3] வரையறை![]() தமிழில் அமைப்பொத்தவை என்பது Homologous என்ற சொல்லைக் குறிக்கப் பரவலாகப் பயன்பட்டு வருகின்றது. இவை தமக்குள் ஓர்மை அல்லது ஓர்மம் (ஒற்றுமை) உடையவை என்பதால், homology என்ற சொல்லாடலை, தமிழில் ஓர்மவியல் என்று அழைக்கமுடியும். ஹோமோலாஜி என்ற ஆங்கிலச்சொல் சுமார் 1656 அளவில் முன்மொழியப்பட்டது. அது கிரேக்க, ὁμόλογος homologos அல்லது ὁμός homos என்ற சொல்லிலிருந்து வந்தது அதன் பொருள் "ஒரேமாதிரியான" அல்லது "தொடர்புடைய" என்பதாகும்.[4][5][a] தட்டாரப்பூச்சி அல்லது தும்பி முதலான பூச்சிகளில் இரு சோடி பறக்கும் சிறகுகள் உள்ளன. ஆனால் வண்டுகளில், முன்சோடிச் சிறகானது,வன்சிறகுக் கவசமாக மாறியுள்ளது.ஈ, கொசு முதலானவற்றில் பின்சோடிச் சிறகானது, சமநிலை பேணும் அமைப்புகளாகத் திரிபடைந்துள்ளன.[7] ஓர்மவியலும் அனையியலும்![]() ஓர்மவியலுக்கும் (homologous) அனையியலுக்கும் (analogous) சிறு வேறுபாடு உண்டு. இரண்டு துறைகளுமே ஒரே செயலைச் செய்யும் உறுப்புகள் மீது கவனம் செலுத்தும் போதும், ஓர்மவியல் போல, அனையியல் ஒப்பீடுகள் பொதுமூதாதை ஒன்றிலிருந்து தோன்றியவையாகக் கொள்ளப்படுவதில்லை. இரு உயிரியல் அமைப்புகளை அனையியல் சார்ந்து ஒப்பிடும் போது, அவை பரிணாமத்தில் தனித்தனியே தோன்றியவை என்றே பொருள் கொள்ளவேண்டும். உதாரணமாக, பறவைகளிலும் பூச்சிகளிலும் உள்ள இறக்கைகள் இரண்டும் பறப்பதற்கு உதவும் போதும், அவை ஒரே பொது மூதாதையிலிருந்து உருவானவை அல்ல. எனவே பறவை - பூச்சிகளின் இறக்கைகள் ஓர்மமானவை என்று கூறமுடியாது. ஆனால் அவை இரண்டும் அனைமமானவை.[8][9] அதேவேளை பறவைகளின் இறக்கையும், வௌவாலின் இறக்கையும் அனைமமாக இருக்கும் அதேவேளை, அவை பொதுமூதாதையைக் கொண்டிருப்பதால், அவற்றைத் தயக்கமின்றி ஓர்மமானவை எனலாம்.[10] தாவரங்களின் ஓர்மவியல்பல தாவரங்களில், தற்காப்பு அல்லது சேமிப்பு நோக்கங்களுக்காக, அவற்றின் வழக்கமான கட்டமைப்புகள் மாற்றமடைந்து உள்ளன. இவற்றை ஒன்றுக்கொன்று ஓர்மமானவை எனலாம்..[11]
குறிப்புகள்உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia