கணியர் (இனக் குழுமம்)

கணியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மலபார், திருச்சூர், பாலக்காடு, திருவிதாங்கூர்
மொழி(கள்)
மலையாளம்
சமயங்கள்
இந்து, கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கனகா, களரி பணிக்கர், ஈழவர்[1]

கணியர் (Kaniyar) எனப்படுவோர் தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியினர் ஆவர்.

தமிழ்நாடு சாதிகள் பட்டியலில், பழங்குடியின சாதியினராக வகைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குரும்பூர், வடக்கன்குளம், பணகுடி, மூன்றடைப்பு, தென்காசி, கல்லிடைக்குறிச்சி உட்பட 27 ஊர்களில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கேரள மாநிலத்திலும் வாழுகின்றனர்.

தோற்றத்தின் மரபுகள்

இவர்கள் தமிழ்ப் பிராமணர்களின் ஒரு பகுதியினரிடமிருந்து வந்தவர்கள் என்று இச்சாதியினர் நம்புவதாகவும், சமசுகிருதம், மருத்துவம் மற்றும் ஜோதிடம் பற்றிய "அடிப்படை" அறிவை, அந்தத் தோற்றங்களுக்குக் காரணம் காட்டியதாகவும் கேத்லீன் கோஃப் பதிவு செய்துள்ளார்.[2]

தமிழ்நாட்டுக் கணியர்

சாதிக் கிளைகள்

தமிழ்நாட்டில் வசிக்கும் கணியர் சாதியினரிடம் எட்டுக் கிளைப் பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவுகளை “அம்மா வழிக் கிளை”, “சம்பந்த வழிக் கிளை” எனும் இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அம்மா வழிக் கிளையில் வெதமக்குடி, குரந்தகுடி, மக்கட்குடி, பன்றிகுடி எனும் நான்கு பிரிவுகளும், சம்பந்த வழிக் கிளையில் கலமனகுடி, அதனிகுடி, புலியகுடி என்பது போன்ற நான்கு பிரிவுகளும் உள்ளன. இதில் அம்மா வழிக் கிளையிலிருக்கும், நான்கு பிரிவினரும் அவர்களுக்குள் சகோதர முறையினர். இதுபோல் சம்பந்த வழிக் கிளையிலிருக்கும் நான்கு பிரிவினரும், அவர்களுக்குள் சகோதர முறையினர். அம்மா வழிக் கிளையிலிருப்பவர்கள், சம்பந்த வழிக் கிளையிருப்பவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால், இந்நிலை தற்போது வழக்கத்தில் மாற்றமடைந்திருக்கிறது.

தொழில்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுடலை மாடன், இசக்கியம்மன் போன்ற பல சிறுதெய்வக் கோயில் வழிபாடுகளில், முக்கியச் சடங்காக நிகழ்த்தப் பெறும் கணியான் கூத்து எனும் நாட்டுப்புறக் கலைத்தொழிலைச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

கேரளக் கணியர்கள்

தமிழ்நாட்டிலிருக்கும் கணியர் சாதியினரைப் போன்று கேரளாவில் வசிக்கும் கணியர்களிடமும் எட்டு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் நான்கு பிரிவுகள் ‘கிரியம்கள்’ எனவும், மீதமுள்ள நான்கு பிரிவுகள் ‘இல்லங்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. முந்தைய “கிரியம்கள்” வகையில் அண்ணா விக்கன்னம், கரிவட்டம், குடப்பிள்ளா, நன்னா எனும் நான்கு பிரிவுகளும், பிந்தைய “இல்லங்கள்” எனும் வகையில் பம்பர, தச்சழகம், நெடுங்கணம், அய்யாக்கால எனும் நான்கு பிரிவுகளும் உள்ளன. இவை ஒரு காலத்தில் அகமணக் கட்டுப்பாடு உடைய பிரிவுகளாக இருந்து, தற்போது அத்தன்மையினை இழந்து விட்டன.[3]

தொழில்

மத்திய திருவிதாங்கூரில் உள்ள பல்வேறு கோயில்களில் நடத்தப்படும் நடனத்தின் விரிவான ஆடைகளை, அலங்கரிப்பவர்கள் கணியர்கள் தான். அவர்கள் கேரளா முழுவதும் ஆயுர்வேத சிகிச்சை (பாரம்பரிய இந்திய மருத்துவப் பிரிவு) துறையிலும் பிரபலமானவர்கள். கணியர்கள் இப்போதும், வடக்கு கேரளாவில் ஜோதிடத்திற்கு பிரபலமானவர்கள்.[4]

கணியர்களும் ஒரு காலத்தில் ஆசிரியர்களாக இருந்தனர், முதன்மையாக கிராமப் பள்ளிகளில். ஆங்கிலேயர்களின் வருகையால் பாரம்பரிய கற்பித்தல் முறை அழிந்து போனது, சமசுகிருதக் கற்பித்தல், அதன் ஆங்கில சகாவுக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டது, பல்வேறு போர்கள் காரணமாக இடையூறு ஏற்பட்டது மற்றும் பொதுவாக கிராமப் பள்ளிகளின் ஊக்கமின்மையும் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக எழுத்தறிவுத் தரம் வெகுவாகக் குறைந்து, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (முக்கியமாக ஆங்கிலம் சார்ந்த) கல்விக்கான, அரசு உதவி வந்தவுடன், மீண்டும் ஒருமுறை மேம்படத் தொடங்கியது.[5]

பொதுக் கல்வியைத் தவிர, அவர்கள் ஈழவர் மற்றும் திய்யர் சாதியினருக்கும் வாள்வீச்சுக் கலையைக் கற்றுக் கொடுத்தார்கள்.[2] குருக்கள் என்பது வடநாட்டு குழுவினருக்குப் பயன்படுத்தப்படும் மற்றொரு பெயர், ஏனெனில் இந்தப் பள்ளிகளில் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகும். இதன் காரணமாக அவர்கள் தெற்கு திருவிதாங்கூரில், முதன்மையாகக் காணப்பட்ட ஆசான் சாதி உறுப்பினர்களை விட உயர்ந்தவர்கள் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

சமயம்

இந்து சமயத்தில் இருந்த கணியர் சாதியினர்களில் ஒரு பகுதியினர், பிற்காலத்தில் கிறித்தவ சமயத்திற்கும் மாற்றமடைந்தனர்.

கணியர் வழக்குச் சொற்கள்

கணியர் தங்கள் பேச்சுக்களின் போது சில இயல்புச் சொற்களைத் தவிர்த்து, அதற்கு குறியீட்டுப் பெயர்கள் கொண்டு பயன்படுத்தி இருக்கின்றனர். இவைகளைக் கணியர் வழக்குச் சொற்கள் எனலாம்.

அன்றாடப் பொருட்களுக்கான வழக்குச் சொற்கள்

கணியர் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களுக்குக் கூட, தங்களுக்கென சில வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அவற்றில் சில பொருட்களுக்கான பட்டியல்.[6]

வ.எண். இயல்புப் பெயர் வழக்குச் சொல்
1 இட்லி பூதிலி
2 கோழி வாரணம்
3 தண்ணீர் தணுவர்
4 கள்ளு அனுசம்
5 மது சுக்கிராந்தி
6 தேங்காய் அந்தரட்டு
7 நாய் ஆதுவாய்
8 பால் உரம்பா
9 வீடு குழந்தை
10 குழந்தை குந்தினி
11 மீன் மிசங்கு
12 கூண்டு கரிம்பர்

மேற்கோள்கள்

  1. Menon, Indudharan (18 December 2018). Hereditary Physicians of Kerala: Traditional Medicine and Ayurveda in Modern India. ISBN 9780429663123.
  2. 2.0 2.1 Gough, Kathleen (2005) [1968]. "Literacy in Kerala". In Goody, Jack (ed.). Literacy in traditional societies (Reprinted ed.). Cambridge University Press. pp. 148–149. ISBN 0-521-29005-8.
  3. டாக்டர் சு. சண்முகசுந்தரம் எழுதிய “சுடலைமாடன் வழிபாடு” பக்கம்.125.
  4. "Padayani". Government of Kerala portal. Archived from the original on 10 February 2011. Retrieved 28 April 2011.
  5. Gough, Kathleen (2005) [1968]. "Literacy in Kerala". In Goody, Jack (ed.). Literacy in traditional societies (Reprinted ed.). Cambridge University Press. p. 155. ISBN 0-521-29005-8.
  6. நெல்லை சு. தாமரைப்பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும்” நூல் பக்கம்: 39.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya