கரணவாய் உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
![]() உச்சில் புவனேசுவரி அம்மன் ஆலயம் என்பது இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரணவாய் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும். அமைவிடம்யாழ் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் இந்துப் பண்பாட்டு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இக்கிராமங்களில் வடமராட்சி என்னும் பிரிவில் கரவெட்டி என்னும் பிரதேசம் அமைந்துள்ளது. கரவெட்டி பிரதேசம் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கரவெட்டி பிரதேசத்திலேயே கரணவாய் என்னும் பகுதி உள்ளடங்குகின்றது. இப்பகுதி அதிகமான வயல்களையும், அதிகமான ஆலயங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இப்பிரதேசம் ஆரம்பத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவைக் கொண்டு அமைந்தது. தற்காலத்தில் அது ஒன்பது பிரிவுகள் ஆக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், இந்து சமைய நிறுவனங்கள், பல்வேறு தொழில்நிறுவனங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் காணப்படுகின்றன. இக்கிராம மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக காணப்படுகின்றனர். அவ்வகையில் கரணவாய் சிறப்புப் பெறுகிறது. கோயில்கள் பல நிறைந்த இடமாக இக் கிராமம் காணப்படுகிறது. அவ்வகையில் இப்பிரதேசத்தில் சிவன்கோவில், அம்மன்கோவில், விநாயகர்கோவில், முருகன்கோவில் என்பவற்றுடன் கிராமியத் தெய்வங்களான கண்ணகி, ஜயனார், வைரவர், நாச்சிமார், பெரியதம்பிரான், நாகதம்பிரான், காளி என்பவற்றுக்கு தனிதனி கோயில்களும் காணப்படுகின்றன. இங்கு வாழும் மக்கள் அதிகமாக வழிபாட்டில் சிறந்த ஈடுபாடு உடையவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இதை அவ்விடத்தில் அமைந்துள்ள ஆலயங்கள் மூலம் உணரலாம். இப்பிரதேச மக்கள் அம்மனை முதன்மைப்படுத்தி வழிபாடு இயற்றியமைக்கு பல காரணங்கள் இருந்துள்ளன. அம்மனை வழிபடுவதன் மூலம் நிலவளம், விளைச்சல் பெருகும், வாழ்க்கை நலம், அறிவுப் பேறு என்பவற்றை நாட்டுக்கும் மக்களுக்கும் அருளும் தெய்வமாக இந்துக்கள் கருதினர். இவ்வகையில் உச்சில் அம்மன் ஆலயம் சிறப்புப் பெறுகிறது. இக்கோயில் வயல்களால் சூழப்பட்டுள்ளது. உச்சில் அம்மன் கோயிலுக்கு வடகிழக்காக வற்றாத நீர்ச்சுனையாகிய மாணிக்கவளை தீர்த்தக்கேணி உள்ளது. இவ்வாலயத்திற்கு வடக்குப் புறமாக அறநெறிப் பாடசாலை ஒன்றும், கலா மன்றம் ஒன்றும், வாசகசாலை ஒன்றும் காணப்படுகிறது. இவை இவ்வாலய பரிபாலன சபையால் தோற்றுவிக்கப்பட்டது. இக்கோயிலுக்கு அருகே கரவை வெல்லன் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. அம்மனுக்கு நேரெதிராக வயல்தாண்டி முருகன் ஆலயம் அமைந்துள்ளது. கரணவாயிலே யா/வேதாரணீஸ்வர வித்தியாலயம், யா/விக்னேஸ்வராக்கல்லூரி என்பன அமைந்துள்ளது. அதைவிட ஜனசக்தி, வேதாரணீஸ்வரா எனும் இரண்டு நூலகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பெயர் விளக்கம் ( இடத்தின்)ஈழத்திருநாட்டின் சிரமென விளங்கும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் மறைவல்ல சைவக்குமார் பரம்பரையினரும் மக்களும் மருவி வாழ்கின்ற கருணையம்பதியில் மருதநில மத்தியிலே அமைந்துள்ள புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் புதுமைமிக்கது. புவனேஸ்வரியும் அவள் வண்ணமாய் கண்ணகியும் வீற்றீருந்து அருள் புரிவது புதுமையிலும் புதுமை. இதனருகே அமைந்துள்ள வற்றாத நீர்ச்சுனையாகிய மாணிக்கவளை என அழைக்கப்படும் குளம் ஆலயத்திற்கு மெருகை ஊட்டுகிறது. அவ்வகையிலே கரணவாய் உச்சில் புவனேஸ்வரியம்மன் என்பதன் பெயர் விளக்கத்தை நோக்கின் யாழ்ப்பாணத்தை சங்கிலி மன்னன் ஆண்ட காலத்திலே சைவக்குருமார் பரம்பரை இவ்விடம் இருக்கவில்லை. அதனால் சங்கிலி மன்னன் 1520ம் ஆண்டளவிலே சைவக்குருமார் பரம்பரையை இவ்விடம் கொண்டு வர விரும்பினான். அவனது விருப்பதிற்கிணங்க சரபோஜி மகராஜா என்பவன் இந்தியாவிலிருந்த மூன்று சைவக்குரு பரம்பரையை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தான். அதில் ஒரு குடும்பம் வரணியில் இருந்தது. மற்றையவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பில் இருந்தனர். இதில் வரணியில் இருந்த குடும்பம் இவ்விடத்தில் வந்து குடியேறினர். அப்போது உடுப்பிட்டிக் கிராமத்திலே உடையவர், முதலியார் என்றழைக்கப்பட்டவர்கள் இந்தச் சைவக்குருமார் பரம்பரைக்கு அவர்கள் இருந்த காணியை சொந்தமாக எழுதிக் கொடுத்தனர். அந்தச் சைவப் பரம்பரையானது கர்ணபரம்பரை என அழைக்கப்பட்டது. கர்ணபரம்பரை என்பதில் கர்ண என்பது கணக்குப்பார்த்தல் எனப் பொருள்படும். அதாவது சரபோஜி மகராஜா காலத்திலிருந்து அவர்கள் கணக்குப் பார்க்கும் தொழிலையே செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க, உடுப்பிட்டி உடையார் காணியை சைவக்குரு பரம்பரைக்கு எழுதிக் கொடுக்கும் போது காணிக்கு என்ன பெயரிடலாம் என யோசித்தனர். பின்னர் கர்ணபரம்பரையாக சைவக்குருமார் பரம்பரை இருந்ததால் அவ்விடத்திற்கு கர்ணவாய் எனப் பெயரிட்டனர். இக் கர்ணவாய் என்பதே காலப்போக்கில் திரிபடைந்து கருணையாவாக மாறி தற்போது கரணவாயாக மாறியது. இவ்வாறாக கரணவாய் பகுதியிலே வயல்கள் சூழ்ந்த இடமாகிய இவ்வாலயம் அமைந்த சூழலில் உள்ள வயல்கள் உச்சில் என்றழைத்தனர். அவ்வாறான உச்சில் வயல்கட்கருகில் இப்புவனேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்திருந்ததால் கரணவாய் உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம் எனப்பெயர் ஏற்பட்டது.
வரலாற்று நோக்கில் அம்மன் வழிபாடுஇந்து மதத்தின் அம்மன்வழிபாடு மிகப்பழைய காலம் தொட்டே நடைபெற்று வருகிறது. புதைபொருளாய்வுகளும் சரித்திர வரலாறுகளும் சமய தத்துவ நூல்களும் இதற்கு ஆதாரமாகின்றது. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் சக்தி வழிபாட்டின் தொன்மையை அறியமுடிகிறது. ஹப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கருவுயிர்க்கும் இலட்சனை, சக்தி வழிபாட்டை குறிப்பதாக அறிஞர் கூறுவர். இவ் வழிபாடு பூமியை தரைப் பெண்ணாகக் காணும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இக்காரணம் இன்றும் இந்துமக்கள் உள்ளங்களில் இருந்து விலகவில்லை. பூமியை பூமாதேவி என அழைப்பர். பூமி மக்களின் வாழ்வுக்கு வளம் ஊட்டுகிறது. உயிர் வாழ்வை உரமூட்டுகிறது. குழந்தைக்கு பால் ஊட்டி வளர்ப்பவள் தாய். எனவே பூமியும் தாயும் ஒன்றெனக் குறிக்கலாம். உடல் உயிருக்கு வாழும் சக்தியைக் கொடுக்கும். பூமியும் தாயும்(சக்தி) பெண்ணெறே கண்டனர். எனவே சக்தி என்றால் பெண்ணைக்குறிக்கும். இவ்வாறு இந்து மதத்தில் பெண்மை வழிபாடு அமைந்துள்ளது. ஹரப்பா காலத்திற்கும் குப்தர் காலத்திற்கும் இடையில் சக்தி வழிபாடு கருத்தூன்றி இருந்ததேயன்றி சிறப்பான வளர்ச்சி பெறவில்லை. சக்தி என்ற கருத்து மக்களிடையே நிலையூன்றி இருந்தது. இக் கருத்தை ஆதரிக்குமாற் போல இருக்கு வேதம் துணைநின்றது. சக்தியை இயக்குசக்தி, இயங்குசக்தி என வகைப்படுத்தலாம். இயங்குசக்தியும் இயக்குசக்தியுமாயுள்ள தெய்வம் சூரியன். அவனுக்குரியது சாவித்திரி மந்திரம் அல்லது காயத்திரி மந்திரம் ஆகும். சவிதா என்னும் சொல்லுக்கு இயக்குபவன் என்பது பொருள். உலகை இயக்குபவன் ஆதலால் இயக்குசக்தி சூரியனிடம் உண்டு. அவனை இயக்குகின்றவள் உஷையும் அக்கினியும் ஆகும். உஷை தாய் என்றும் அக்கினி காதலி எனவும் போற்றப்பட்டனர்.வேத காலத்திலும் சக்திவழிபாடு இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் ஆகமங்கள் தோற்றம் பெற்றன. ஆகமங்கள் உருவம் அமைத்து வழிபடும் நிலையை ஊக்குவித்தன. உருவங்களில் சக்திக்குரிய இடப்பாகத்தையும் வரையறுக்க தவறவில்லை. அர்த்தநாரீஸ்வரர் உருவம் சக்திக்குரிய சமபங்கம் கொடுத்த தன்மையை முன் வைக்கின்றது. சிவனுக்குரிய நிலையை உருவ அமைதியை எடுத்துக்காட்டும் இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றின. இவை சிவனால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சக்திக்குரிய ஆகமங்கள் இருபத்தேழு தோற்றம் பெற்றன. இவை சக்தியால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சிவனுக்கு நவசக்திகள் உண்டு.அவை வாமா, ஜேஸ்ட்டா, ரெளத்திரி, காளி, கல்விகரணி, பலவிகரணி, சர்வபூதமணி எனப்படும். இக்காரணத்தால் 9 எண்வரக்கூடிய 27 ஆகமங்கள் தோற்றம் பெற்றது. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப் போற்றப்படுகின்றது. சக்தி இன்றேல் சிவமில்லை, சிவமின்றேல் சக்தியில்லை என்னும் கருத்து வளர்ச்சியினூடு புறச்சமயங்களின் தாக்குதலால் சக்திக்கு தனி உரிமை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையாலும் புராணங்களின் செல்வாக்கு நிலையாலும் சாக்தம் என்ற மதம் உருவாகியது. சாக்தமதம் சக்தி ஆதாரம். சிவம் ஆதேயம் எனக்கூறி சைவக் கொள்கையிலிருந்து விலகியது. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதமே சாக்தம் ஆகும். சைவம் தத்துவநிலையில் சக்திக்கு இடம் கொடுத்தது. முதன்மை வேறுபாடே இருமதத்திற்கும் வித்தியாசம். பிருங்கி முன்வர் சிவத்தையன்றிச் சக்தியை வழிபடுவதில்லை. என்னும் கொள்கையைப் புராணங்கள் எடுத்துக்காட்டிப் பிரிவினையை வேரறுத்த வரலாறு உண்டு. அம்மையே சிவனைப் பூசித்த வரலாறும் உண்டு. இவை யாவும் சிவனையும் சக்தியையும் இணைத்துள்ளன. சாக்த சமயம் அம்மன் வழிபாட்டை புதிய நிலையில் வகுத்துக்காட்டின. அம்மாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது கோடுகளாலான யாத்திர வழிபாடாகும். அவ்வழிபாட்டின் பலியிடுதலையும் குறிப்பிடுகின்றன. சக்தி வழிபாட்டில் யாத்திர வழிபாட்டை "சிறீசக்கர பூசை என்பர். இதனை ஸ்ரீவித்யோ பாசனை என்றும் குறிப்பிடுவது வழக்கம். இது 3 வகைப்படும். அதில் பூப்பிரஸ்தார யந்திரமே இலங்கையில் காணப்படுகிறது. பொன்னம்பலவாணேசர் கோவில் ராஜராஜேசர் முன்னிலையிலும் நயினை நாகபூசணி அம்பாள் முன்னிலையிலும் முன்னேஸ்வர ஆலயத்தில் வடிவாம்பிகை முன்னிலையிலும் சக்கர யந்திரத்தில் எழுதப்பட்ட மந்திரங்களை உபாசிக்கும் போது அது பயன்கொடுப்பதில் பெருமையுள்ளதாகிறது. இவ் வழிபாட்டின் அடிப்படையில் சிவனாலயங்களிலும் விக்கிரகங்களின் கீழ் யந்திரம் வைத்து மருந்து சார்த்தப்படுகிறது.
ஆலயத்தோற்றமும் வளர்ச்சியும்கற்றகக்கா கழனியெலாங் கவினுடனே சூழ்ந்திலங்க அற்புதமா யருள் பொழியும் அன்னைபுவனேஸ்வரியே பொற்புமிகு திருவிளக்குப் பூசைதனை உவந்தேற்று நற்கருணை பொழிந்தருளே நானிலத்து உயிர்களுக்கே.
ஈழத்திருநாட்டின் சிகரமென விளங்கும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் மறைவல்ல சைவக்குருமார் பரம்பரையினரும், மக்களும் மருவி வாழ்கின்ற கருணையம்பதியில் மருதநில மத்தியிலே அமைந்துள்ள புவனேஸ்வரி அம்பாள் அருள் வண்ணம் கனியும் ஆலயம் புதுமைமிக்கது. புவனேஸ்வரியும் அவள் வண்ணமாய் கண்ணகியும் வீற்றிருந்து அருள்புரிவது புதுமையிலும் புதுமை. இதன் அருகே அமைந்துள்ள வற்றாத நீர்ச்சுனையாகிய மாணிக்கவளை என அழைக்கப்படும் குளம் ஆலயத்தின் அழகை மெருகூட்டுகிறது. இவ்வாலயம் ஏறத்தாள 1870 ம் ஆண்டளவில் மாவிலங்கை மரநிழலிலே தென்னங்கீற்றுக் கொட்டிலிலே சைவமரபினரான பொன்னுஞானியார் என்னும் பெருமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாயும், 1910-1912 ம் ஆண்டு காலத்தில் பொழிந்த சுண்ணாம்புக்கல்லினால் மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டு வளர்ச்சியுற்றதாக அறியமுடிகிறது. மேலும் இவ்வாலய வரலாறுகளை விரிவாக ஆராயுமிடத்து 1870 இல் பொன்னு ஞானியார் என்பவர் புவனேஸ்வரி அம்பாளை ஒரு கற்பீடத்திலே பாவனை செய்து மாவிலங்கை மரநிழலிலே தென்னங்கீற்றுக் கொட்டிலமைத்து வழிபட்டு வந்தார் எனக்கூறப்படுகிறது. அவரின் உற்ற நண்பனாக விழங்கும் நாவித சமூகத்தலைமகன் திரு.வைரவியார் என்பவர் அம்பாளின் அருளை அறிந்து தனக்கு பிள்ளைச் செல்வம் வேண்டிப் புவனேஸ்வரி அம்பாளுக்கு ஒரு விக்கிரகத்தை செய்விக்க நேர்த்தி வைத்ததாகவும் தனது எண்ணம் ஈடேறவே நேர்த்திக்கடனை நிறைவேற்ற ஏற்பாடு செய்யலானார். இவரது எண்ணப்படி இந்தியாவிலே கருங்கல்லாலான விக்கிரகம் உருவாக்கப்பட்டு தற்போது இந்நிலத்தின் உரிமைக்காரரும் சிவாகம அறிவு நிறைந்தவருமான சிவசிறீ சோமசுந்தரக்குருக்களை சந்தித்து உரையாடியுள்ளார். குருக்கள் மட்டுவிலை பிறப்பிடமாகவும் கரணவாயைப் புகுவிடமாகவும் கொண்டவராய் இருந்தார் . இவர் மட்டுவில் பண்டித்தலைச்சி கண்ணகை அம்பாளின் நிறைந்த பக்தி கோண்டமையை வெளிப்படுத்தி கண்ணகை அம்மனை இங்கு பிரதிஸ்டை செய்ய எண்ணிக் கொண்டிருப்பதாக கூறினார். இவர்களின் உரையாடலைத் தொடர்ந்து குருக்களின் ஏற்பாட்டிலே புவனேஸ்வரி அம்பாள், கண்ணகை அம்பாள் சிலைகள் இந்தியாவிலே தேர்ச்சி மிக்க சிப்பிகளால் கருங்கல்லில் வடிக்கப்பட்டது. விக்கிரகங்களை எங்கே பிரதிஸ்டை செய்வதென குழம்பிய வைரவியாருக்கும், குருக்களுக்கும், பொன்னுஞானியாருக்கும் கண்ணகை அம்மன் தனித்தனியே கனவில் வந்து மாணிக்கவளை நீர்த்தடாகத்தினருகே காணப்படும் ஆலமரத்தடியே ஆகும் எனக்கூறினார். அதனால் புவனேஸ்வரி அம்பாளை மாவிலங்கை மரநிழலிலே பிரதிஸ்டை செய்யுமாறு தெரிவித்ததாக அறிய முடிகிறது. இதற்கமைய மாவிலங்கைக்கருகே ஒரு சிறிய மடாலயத்தை அமைத்து புவனேஸ்வரி அம்பாளையும் குளத்தருகே ஆலமர நிழலிலே ஒரு சிறிய கோட்டிலமைத்து கண்ணகி அம்மனையும் பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தனர். கண்ணகி அம்பாளின் கருணையும் அருளும் கண்ட கரணவாய் தெற்கு திரு.கந்தையா பொன்னம்பலம் என்பவரும் அவரது சகோதரரும் கல்லினால் கற்பக்கிரகம், அர்த்த மண்டபம் முதலியவற்றை நிறுவினர். இக்கட்டிடத்தில் கண்ணகை அம்பாளைப் பிரதிஸ்டை செய்ய எண்ணிய சிறீலசிறீ சோமசுந்தரக்குருக்களும், புவனேஸ்வரி அம்பாளை பிரதிஸ்டை செய்ய வேண்டுமென்ற அவ்வூர் வைரவியாருக்கும் கண்ணகி கனவில் வந்து தனக்குகந்த இடம் நீர்த்தடாகம் என்றார். மாணிக்கவளை குளக்கரையிலே அருணர் குடும்பத்தினரும் இணைந்து கண்ணகி ஆலயம் அமைத்து பூஜா கருமங்களும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு வைகாசி விசாக தினத்திலே விசேட பொங்கல் மடைபோட்டும் பூஜிக்கப்படுகிறது. பக்தியும் சிரத்தையும் கோண்ட சோமசுந்தரக் குருக்களால் தொடக்கி வைக்கப்பட்ட பெரும்பணி வளர்ச்சி கண்டது. கரவையம்பதி, கருணையம்பதி ஆகிய கிராமங்களின் மத்தியில் ஆலயம் அமைந்து இருப்பதாலும் கழனிகள் சூழப்பெற்று இருப்பதாலும் ஆலயம் பொலிவு பெற்றது.
இந்த காலத்திலே ஆலய பரிபாலனத்தை ஆலயத்தின் நில உரிமையாளரும், திருப்பணிகளை மேற்கொண்டவர்களும் ஒரு சிறிய குழுவாக செயற்பட்டமையால் பரிபாலனத்தின் பொருட்டு தலைவரது அறிவுரையுடனேயே ஆலய நித்திய, நைமித்திய கடமைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆலயத்தின் பரிபாலனத்தை மிக எளிமையான முறையிலேயே நாடாத்த வசதியாக இப்பகுதியில் மக்களின் இயல்பைக் கருத்தில் கொண்டு பத்துக் குழுக்களை அமைத்து அவர்களின் உதவியிடன் வைகாசி விசாக பூரணையிலே தீர்த்தோற்சவத்தை கொண்ட 10 நாள் உபயகாரர் பொறுப்பேற்று நடத்தினர். பரிபாலனத்தின் உதவியுடன் சப்பறம், தேர், சகடை முதலான ஊர்திகளும் குதிரை, சிங்கம் முதலான வாகனங்களும் ஆலயத்துக்கு தருவிக்கப்பட்டன. இதைவிட இக்காலத்திலே சுற்றுமதில் , மடப்பள்ளி , களஞ்சியம், வசந்தமண்டபம் முதலானவை நிர்வகிக்கப்பட்டது . மேலும் இக் காலத்தில் திருவூஞ்சல் பதிகம் ஒன்றும் ஆக்கப்பட்டது. அந்த காலத்தில் அம்பாளின் விக்கிரகம் தோற்றப் பொலிவின்றி இருந்த்ததால் 1950 ஆம் ஆண்டிலே புதிய விக்கிரகம் ஒன்று இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. பழைய விக்கிரகத்தை மகா மண்டபத்தில் ஸ்தாபித்தனர். மேலும் கரவெட்டியைச் சேர்ந்த ஜயம்பிள்ளை உபாத்தியாரினதும் தாளபியன் இராமலிங்கம் குடும்பத்தினரதும் உதவியுடம் எழுந்தருளி விநாயகர், கண்ணகை அம்பாள் விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டது.
தொடர்ந்து வந்த நாட்களில் ஆலய பரிபாலனத்தை மறுசீரமைக்க எண்ணிய பொதுமக்கள் தலைமைப் பொறுப்பை இவ்வூர் வாசகரும் , ஓய்வுபெற்ற பாடசாலை அதிபருமான உயர்திரு.சபா.செல்வநாயகம் அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர் 1986.05.31 ம் திகதி அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பண்டிதர் கை.நமசிவாயக்குருக்கள் மற்றும் கல்விமான்களின் ஆலோசனையுடன் ஆலயத்தின் திருவிழா உபயகாரர்களின் ஒத்துழைப்புடனும் ஆலய பரிபாலனத்திற்கான யாப்பினை வரைந்து போதுச் சபையைக் கூட்டி பரிபாலனத்தை நடத்திவந்தார். ஊர் மக்களிடம் நிதி திரட்டி அதன் மூலம் 1989.09.14 ம் திகதி அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகட்கும் கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. மேலும் இவ் ஆலயத்திற்கு வலுவூட்டும் முகமாக 1989.03.27 முதல் இந்து கலாசார அமைப்பின் விதிமுறைக்கமைய பதிவு செய்யப்பட்டதுடன் சமய சமூகப் பணிகளையும் ஆற்றியது. அதன் மூலம் ஒரு கலை கலாசார அரங்கை அமைக்க முற்பட்டனர். அதன் பெறுபேறாக 1970 களில் திருவாளர்கள் வி.செ.சுவாமிநாதன், இ.செல்வநாதன், மகேஸ்வரராசா முதலானோர் அத்திபாரமிட்டு தொடக்கி வைத்த கலைக்கூடம் பூரணப்படுத்தப்பட்டு ஆலயத்தின் நுழைவாயிலில் பொலிவுற காட்சியளிக்கப்பட்டது. பரிபாலன சபையின் சமூகப்பணியாகிய சமய அறிவுப்போட்டி, பண்ணிசை வகுப்பு, பிரதி வெள்ளி தோறும் பஜனைக் குழுவின் பாராயணம் முதலானவை மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டளவில் இவ்வூர்வாசியும் தொழிலதிபருமான திருவாளர் கி.சடாட்சரநாதன் அவர்களின் நேர்த்திக் கடனாக ஒரு அழகிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. மேலும் இக்காலத்திலே பரிபாலனசபை மேற்கொண்ட முயற்சிகளது பேறாக தெற்கு, மேற்கு வீதிகள் விஸ்தரிக்கப்பட்டது. தவிர ஆலயத்தின் பரிவார மூர்த்தியாக விநாயகரை இவ்வூர்வாசியும் புனருத்தாரண சபைத் தலைவருமான திருவாளர் இராசநாயகம் அவர்கள் தமது மாமனாரின் நேர்த்தியை நிறை வேற்றுமுகமாக கோவிலமைத்து 1990.04.03 அன்று பிரதிஸ்டை செய்வித்து வைத்தார். தவிர ஆலயத்திற்கு வேண்டிய தளபாடங்கள் தட்டுமுட்டுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.
இவ்வாறு கருணையம்பதி உச்சிலம்மன்பதி ஆலய வரலாற்றை மேற்குறிப்பிட்டவாறு காணக்குடியதாகவுள்ளது. அடுத்தநிலையில் அம்மன் வழிபாட்டில் பலியிடுதல் சிறப்பானதொன்று. கர்ப்பூராதி ஸ்தோத்திரம் என்னும் நூலில் செம்மறியாடு, ஒட்டகம், பூனை, எருமை முதலியவற்றை பலியிடும்படி கூறப்படுகிறது. உண்மையில் இவைகளைப் பலியிடுதல் அல்ல. இவைகளின் குணங்கள் மனிதனிடத்தில் உள்ளன. அக்கெட்ட குணங்களை மனிதன் பலியிட வேண்டும். அங்கேயே நல்லொளி தெரியும். ஒளியைத் தாங்கியுள்ள தீபம் அம்பாள் எனப் போற்றப்பட்டு திருவிளக்கு வழிபாடும் அம்பாளுக்கே ஆயிற்று. பராசக்தியாகிய அம்பாள் அறக்கருணை மூலமும் மறக்கருணை மூலமும் அருள்செய்ய வல்லவள். அதாவது அன்பின் மூலமும் தண்டித்தல் மூலமும் அருள் செய்வாள். அம்பாள் வழிபாட்டை புராணங்கள் விரிவுபடுத்தின. தேவி பாகவதம் அம்பாளுக்கு முதன்மை கொடுத்து அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களையும் அவற்றுக்குரிய மந்திரங்களையும் சிறப்பித்தன. பராசக்தியின் வெவ்வேறு தோற்றங்களாக கௌரிமனோன்மணி, சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகமாரி என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் மகமாரி மாரகாசுரனை சங்காரம் செய்ததால் அப்பெயர் பெற்றாள் என காரணாகமம் கூறுகின்றது. இவளது தலையைச் சுற்றிலும் அக்கினிச் சுவாலைகள் தோன்றும். கபாலம், சக்தி, பாசம், உடுக்கு என்னும் நான்கு ஆயுதங்களை இவள் ஏந்தி நிற்பாள். இந்த அடிப்படையை கொண்ட முத்துமாரி வழிபாடும் தோன்றி இருக்கலாம். குப்தர் காலத்தில் சக்திக்குரிய கோயில்கள் உண்டு. சந்திரகுப்தனுடைய நாணயத்தில் சிங்கத்தின் மீது அம்மன் எழுந்தருளியிருக்கும் நிலை பொறிக்கப்பட்டுள்ளது. குப்த மன்னரே பெண் தெய்வங்கட்கு விக்கிரம் அமைக்கும் பாணியை தோற்றுவித்தனர். அதன் சாயலாக தமிழ் நாட்டில் பெண் தெய்வங்களுக்கு விக்கிரகம் அமைத்தல் முறை பின்பற்றப்பட்ட பின் வந்த காலங்களில் பெரிய மண்டலங்களுடன் கூடிய ஆலயங்கள் தோற்றம் பெறலாயின. காளிதாச மகாகவியும் சக்திமீது பல பாடல்களை பாடியுள்ளார். இதிகாச புராணத்தில் தாட்சாயினி, பார்வதி பற்றிய கருத்துக்கள் உண்டு. சிவ புராணத்தில் உமை தன்னை பிரமமாகவும், பேரொளியாகவும் பரந்த இவ்வுலகமாகவும் காரண காரியமாகவும் எல்லாமாகவும் இருப்பதாகவும் கூறுகின்றது. மார்க்கண்டேய புராணம் சக்தியின் பெருமைகள், வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் புராணங்களது குறிப்பின்படி சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் 3 தெய்வங்களினதும் பேரொளியிலிருந்து சக்தி தோற்றம் பெற்றாள் எனக் குறிப்பிடுகின்றது. தென் இந்திய வரலாற்றுக் காலங்களில் சங்ககாலத்திலிருந்து சக்தி வழிபாடு சிறப்படைந்திருந்தது. பாலை நில மக்கள் கொற்றவையை வழிபட்டிருந்தனர். அக்கால நூலின் "ஓங்கு புகழ் காமர்ச்செல்வி" எனவும் திருமுருகாற்றுப்படை வெற்றிவேல் போர்க்கொற்றவை எனவும் குறிப்பிடுகின்றது. மணிமேகலை, சிவப்பதிகாரம் போன்ற நூல்களில் சக்தியானவள் காளி, மகாசரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை என்ற பெயர்கள் உண்டு. காரைக்காலம்மையார் சிவனைப் போற்றி பாடும்போது சக்தியினையும் போற்றிப் பாடியிருந்தமை குறித்தற்குரியது. பல்லவர் காலப்பகுதியில் சக்திவழிபாடு சைவத்துடன் இணைந்து வளர்ந்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் ஆதாரப்படுத்துகிறது. " அம்மையே அப்பா இப்பிலாமணியே.. மங்கயர்க்கரசி.., பிடியதனுருவுமை.., மாதர்ப்பிறைக்கண்ணியானை..," இதைவிட சங்கரரது பிரபஞ்சசாரம், சௌந்தர்யலகரி போன்ற நூல்களிலே சக்தி போற்றப்படுகின்றன. அற்புதம் - நம்பிக்கைகரணவாய் மருதநில மத்தியிலே அமைந்துள்ள உச்சிற்புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திலே தினமும் பக்த அடியார்கள் வந்து புவனேஸ்வரியம்மன் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டு வருவது வழக்கமான செயலாகும். இங்கு இரண்டுகால பூசைகள் நடைபெறுகிறது. இங்கு மக்கள் அதிகாலைப் பூசையின்போது தமது கடமைகளுக்கு செல்வதற்கு முன்பாக கடமைகள் இடையூறின்றி நடந்திடும் பொருட்டு இப்புவேஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். சிறு குழந்தைகளின் நோய் தீர்க்கும் பொருட்டு சிவாச்சாரியாரால் நூல் முழுவதும் வழங்கும் அடியார்கள் தமது நினைத்த காரிய சித்தித்தற் பிரகாரம் அம்மனை வேண்டி பால்காவடிகளும், பறவைக்காவடிகளும், ஆனந்தக்காவடிகளும் இடம்பெறுகிறது. நேர்திக்கடன்பொருட்டு மக்கள் அன்னதானம் வழங்குவதும் சிறப்பு நிகழ்ச்சியாகும். தண்ணீர்ப்பந்தல் அமைத்து தாகசாந்தி தீர்த்தும், பொங்கல் செய்வதும், மடை பரப்புவதும், அர்ச்சனை அபிசேகம் செய்வதும் மக்களுக்கு உச்சில் புவனேஸ்வரி அம்மன் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் காட்டும். மேலும் உச்சிற் புவனேஸ்வரி அம்மனுக்கு பலர் பல நேர்த்திக்கடன்களை வைத்து அது நிறைவேற ஆலயத்துக்கு கட்டடங்களையும் அமைத்துக் கொடுத்தனர். அவ்வகையிலே இவ்வம்மனை முதல் முதலிலே கொட்டிலமைத்து வழிபட்டுவந்த பொன்னுஞானியாரது உற்ற நண்பரானநாவித சமூகத்தலைமகன் திரு.வைரவியார் என்பவர் அம்மாளின் அருளை அறிந்து தனக்கு பிள்ளைச்செல்வம் வேண்டிப் புவனேஸ்வரி அம்மாளுக்கு ஒரு விக்கிரகத்தை செய்விக்க நேர்த்தி வைத்ததாயும் அவ்வெண்ணம் ஈடேறவே நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுசெய்தார். இவரது எண்ணப்படி இந்தியாவிலே கருங்கல்லான விக்கிரகம் உருவாக்கப்பட்டு தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதைவிட பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் திருவுருவையும் இங்கு நிறுவ ஆசைப்பட்டு அதையும் இந்தியாவிலிருந்து வரவழைத்து ஸ்தாபித்ததாக கூறப்படுகிறது. மேலும் இவ்வம்பாளின் கருணையையும் அருளையும் கண்ட கரணவாய் தெற்கு திரு.கந்தையா பொன்னம்பலம் என்பவரும் அவரது சகோதரர்களும் கல்லினால் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் முதலியவற்றை நிறுவினர். 1991ஆம் ஆண்டு அவ்வூர்வாசியும் தொழிலதிபருமான திருவாளர் கி.சடாச்சரநாதன் அவர்களின் நேர்த்திக்கடனாக ஒரு அழகிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. இவ்வூர்வாசியும் புனருத்தாரண சபைத் தலைவருமான திருவாளர் இராசநாயகம் அவர்கள் தனது மாமனாரது நேர்த்தியை நிறைவேற்றும் பொருட்டு கோவிலமைத்து 1990.04.30 அன்று பிரதிஸ்டை செய்வித்து வைத்தார். இவற்றை விட புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு பல பணிகளை ஆற்றினர். அவ்வகையிலே கனடா வாசியான கரணவாயை ஊராகக் கொண்ட திரு.மனோகரன் நேர்த்திக்காக கொடிஸ்தம்பமும், கனடா வாசியான திரு.குகன் அவரது பிள்ளையின் நிவர்த்திக் கடனாக வைரவர் கோவிலையும் அமைத்துக் கொடுத்தனர். 1992ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட பெண்களை முதன்மைப்படுத்தும் வழிபடுவோர் சபை பல பெண்களுக்கு சுகவாழ்வைக் கொடுத்துள்ளது. 1992 கார்த்திகை மாதம் பூரணை தினத்தில் ஆரம்பித்து இன்றுவரையும் மாதம் தோறும் வரும் பூரணை தினத்திலே திருவிளக்குப்பூசை நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரம் சுமங்கலிகள் சுகவாழ்வு பெறுகின்றனர். கன்னியர் மணவாழ்வு பெற்று சீரும் சிறப்புடன் வாழ்கின்றனர். இங்கு யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளிலிருந்து கூட திருமணமாகாத பெண்கள் வந்து விளக்கேற்றி பலனைப் பெற்றுள்ளனர். எவ்வளவோ காலமாக திருமணமாகதவர்களும் இவ்விளக்குப் பூசைக்கு வந்து விளக்கேற்றி திருமணம் செய்து மகிழ்வோடு வாழ்கின்றனர். இந்நம்பிக்கையானது வடமராட்சி மக்களிடையே நிலவிவருவது குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்தின் பின்பும் சக்திவழிபாடு சிறப்புற்றிருந்தது. சோழர் காலத்தில் சக்திக்குரிய தலங்கள் அமைக்கப்பட்டன. சோழர்கள் ராஜராஜேஸ்வரியையும், பாண்டியர் நாயக்கர் மீனாட்சியையும் வழிபட்டிருந்தனர். நாயக்கர் காலத்தில் மதுரை மீனாட்சி கோயில் முழுமையாக அமைவுபெற்றிருந்தது. குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையையும் அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியையும் சக்திமீது பாடினர். கஜபாகு மன்னர் காலத்தில் கிராமிய வழிபாட்டின் அம்சமாக கண்ணகி வழிபாடு தோற்றம்பெற முத்துமாரி அம்மன் வழிபாடும் கிராமிய வழிபாட்டில் தன் இடத்தை எடுத்துக்கொண்டது. இம்முத்துமாரி காத்தவராயனின் தாயாகவும் காணப்பட்டாள். இவளுக்கு கரகமெடுத்து நேர்த்திக்கடனை கிராமிய மக்கள் நிறைவேற்றினர். இவள் முத்துமாலையை கோபத்தால் வீசியபோது அம்பாள் நோய் தோன்றியதெனவும் குளிர்த்தி, கரகம் முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதால் நோய்தீர்ந்தது எனவும் கர்ணபரம்பரைக் கதையொன்று கூறும். பிரதேசத்துக்கு பிரதேசம் கிராமத்திற்கு கிராமம் அம்மன் வழிபாடு சிறப்புப்பெற்றது. பொதுவாக மக்கள் கரகம்,காவடி, குளிர்த்தி என்பவற்றால் வழிபாட்டை நிறைவேற்றுகின்றனர். மேற்கூறிய பெண்தெய்வ ஆலயங்கள் சீரும் சிறப்பும் பெற்று ஆகமமுறைப்படியாக பெரிய ஆலயங்களாக உருப்பெற்றன. இந்தியாவின் வடநாட்டிலேயே மிகுதியான செல்வாக்கை சக்தி வழிபாடு பெற்றுள்ளது. அச்செல்வாக்கு தென்னாட்டிலும் வலுப்பெற்றுள்ளது. உதாரணமாக நவராத்திரியை தென்னாடு பெற்றுக்கொண்டது. தசரா என்னும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது சான்றாகிறது. வடநாட்டில் வாழ்ந்த காளிதாசர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்றோர் அம்பாள் உபாசகர்களே. குமரகுருபரர், அபிராமிபட்டர் போன்றோரும் தென்நாட்டு அம்பாள் உபாசகரே. " தனம் தரும் கல்வி தரும்..." என அபிராமிப்பட்டர் கூறியுள்ளார். இவ்வாறான சக்திக்குரிய சிறந்த விரதமாக நவராத்திரியையும், கணவனைப்பெற கார்த்தியாயினி விரதமும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிப்பர். கேதாரகௌரி விரதம் உமை சிவனை அடைந்த வரலாற்றைக் கூறுகிறது எனலாம். 20ம் நூற்றாண்டிலே அம்பாள் வழிபாடு சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதைக் காணலாம். வீடுகள், பாடசாலைகள், வேலத்தளம் என்பவற்றில் நடராத்திரி கொண்டாடப்படுகிறது. இவ்வாறு வரலாற்று நோக்கிலே அம்மன் வாழிபாட்டினைப் பற்றிக்கூறலாம்.
முக்கிய விழாக்கள்வைகாசி திருவிழாவுடன் ,1992ம் ஆண்டு முதல் பூரம் நட்சத்திர தினங்களில் விளக்குப் பூசையும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஆடிப்பூர தினத்திலே பக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து பால் காவடி எடுத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வர். நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஸ்டி, திருவெம்பாவை உள்ளிட்ட முக்கிய விழாக்கள் அம்மனுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உசாத்துணைhttp://www.dinamalar.com/nri/details.asp?id=5034&lang=ta .சி.க சிற்றம்பலம் : ஈழத்து இந்துசமய வரலாறு - பாகம் 1, யாழ் பல்கலைக்கழகம், |
Portal di Ensiklopedia Dunia