காளிகாட் காளி கோயில்

காளிகாட் காளி கோயில்
காளிகாட்டில் காளியின் சிலை
காளியின் சிலை
பெயர்
பெயர்:காளிகாட் காளி கோயில்
தேவநாகரி:काळिघाट् काळि मन्दिर्
தமிழ்:காளிகாட் காளி கோவில்
வங்காளம்:কালীঘাট কালী মন্দির
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மேற்கு வங்காளம்
அமைவு:கல்கத்தா, ஆதி கங்கை ஆற்றங்கரையில்
கோயில் தகவல்கள்
மூலவர்:காளி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:வங்கக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1809 (தற்போதைய அமைப்பு)

காளிகாட் காளி கோயில் (Bengali: কালীঘাট মন্দির, Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். இக்கோவிலின் காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர்.[1]

கல்கத்தா பெயர்க் காரணம்

கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். காளிகாட் கோவில் பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ளது. காட் என்பது தீர்த்தக் கட்டம் அல்லது நதியின் படித்துறையாகும். காளிகாட் என்பது காளி கோவில் அமைந்துள்ள பாகீரதி நதிக் கரையின் படித்துறையைக் குறிக்கும்.

வரலாறு

1887 ஆம் ஆண்டில் காளிகட் கோயில்

தற்போதைய கோயிலமைப்பு 200 ஆண்டு பழைமையானதாக இருந்த போதிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு இலக்கியப்பதிவுகளிலும் உள்ளது. பழைமையான முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது, இத்திருத்தலத்தின் பழைமைக்குச் சான்றாக உள்ளது.

சிறு குடிசையாக இருந்த திருக்கோயில் சிறு கோயிலாக மானசிங் அரசரால் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் கட்டப்பட்டது. பின்னர் சபர்ணா ராய் சௌத்ரி குடும்பத்தினர் முன்னிற்று தற்போதைய கோயிலமைப்பை 1806 ஆம் ஆண்டில் கட்டினர்.[2]

காளிகாட் கோவிலின் தல வரலாறு

கல்கத்தாவில் பல காளி கோவில்கள் அமைந்திருந்தாலும் இந்த காளி தேவியின் ஆலயம் மட்டுமே கல்கத்தா காளி கோவில் என்றே அழைக்கப்படுகிறது. எட்டுத் திக்குகளிலும் புகழ் பெற்ற இவ்வாலயத்தை பல நூல்களில் காலேஸ்வரம் என்று குறிப்பிட்டுள்ளனர். இக்கோவில் ஒரு சக்தி பீடமாகவும் விளங்குகிறது. அன்னையின் உடற்கூறுகளில் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர்த்து) அல்லது பாதம் அல்லது முகம் விழுந்ததாகக் கருதப்படும் காளிகாட் என்னும் இத்தலம், சக்தி பீடமாக விளங்குகிறது. காளி காட்டில் அமைந்துள்ள மகாசக்தி பீட நாயகியை காளி என்றும், க்ஷேத்ரபாலகரை நகுலேஷ்வரர் என்றும் அழைக்கின்றனர்.[3]

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதி தேவி (தாட்சாயிணி) நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காளிகாட் காளி கோவில் சதிதேவியின் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர்த்து) விழுந்த இடமாகப் போற்றப்பட்டு தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காளிகா புராணம் கூறும் நான்கு ஆதி சக்தி பீடங்களிலும் இக்கோவில் வருகிறது. ஆனால் காளிகா புராணத்தில் தேவியின் முகம் விழுந்த சக்தி பீடம் என்று கூறப்படுகிறது.[4]

கங்கை, வங்கக் கடலுடன் கலக்கும் இடத்தை கங்கா சாகர் என்பர். பழங்காலத்தில் அந்த முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். அங்கு இன்றும் அவர் பெயரில் ஒரு சிறு கோயில் உள்ளது. ஒரு முறை சில காபாலிக சன்னியாசிகள் கங்கா சாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்க அடர்ந்த காட்டு வழியே சென்றனர்.

பாதையில் அவர்களுக்கு விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை தென்பட்டது. அது காளியின் சாயலில் அவர்களுக்குத் தோற்றமளித்தது. அந்த காபாலிகர்கள், நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர். தந்திர சாஸ்திரப்படி நரபலி கொடுப்பது அக்கால வழக்கம். அந்தச் சிலையே, இன்றைய காளிகாட் காளி அம்மன்.

இக்கோவிலின் தல வரலாறு இன்னொரு விதமாகவும் கூறப்படுகிறது. காளிகாட் காளி கோயிலைச் சுற்றி முன்பு காடு மண்டி வளர்ந்திருந்ததாம். அந்தக் காலத்தில் இந்த தேவியை ஆத்மராம் என்கிற பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து வந்தான். மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. அதைக் கண்டு வியந்தான் ஆத்மராம். ஒளி வந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால் விரல்கள் போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான். அத்துடன் அவன் அன்றிரவு ஒரு கனவும் கண்டான். அந்தக் கல்லில் தென்பட்ட விரல்கள் தாட்சாயிணியின் வலக்கால் விரல்கள் என்று உணர்ந்து, அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களை ஒட்டி வைத்து அதற்கும் பூஜை செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடமாயிற்று.

கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆத்மராமுக்கு ஒரு சிவலிங்கமும் கிடைத்தது. சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், பின்னர் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் டாலிகஞ்ச் என்னும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில்தான் காளிகாட் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள நீர்நிலை ஆதிகங்கா அல்லது பாகீரதி என்று அழைக்கப்படுகின்றது.

காளிகாட் கோவிலின் அமைவிடம்

மேற்கு வங்கம் – கொல்கத்தா – காளிகாட் காளி கோவில்[5]

• இந்தக் கோவில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா காளி கோவில் என்றும் காளிகாட் காளி கோவில் என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற தலமாகும். இங்கு அனைத்து மதத்தவரும் காளியை வழிபடுகிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் ஹௌரா. அருகிலுள்ள மெட்ரோ நிலையம் காளிகாட்.

• கோவிலுக்குச் செல்ல சிறந்த நேரம் அதிகாலை அல்லது பிற்பகல் நேரமாகும். இங்கு காளி தேவியின் சிலை மிகவும் பெரியது. புதிதாக வருவோர் கோவிலை நன்கு சுற்றிப் பார்க்கக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் பார்க்கவும்

  1. தக்சிணேசுவர் காளி கோயில்
  2. காமாக்யா கோவில்
  3. ஆதி சக்தி பீடங்கள்
  4. சக்தி பீடங்கள்
  5. விமலா தேவி சக்தி பீடக் கோவில்
  6. தாராதாரிணி சக்தி பீடக் கோவில்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-06-11. Retrieved 2014-09-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-11. Retrieved 2014-09-09.
  3. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/02/06/51-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/article2041686.ece
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. Retrieved 2015-05-11.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. Retrieved 2015-05-11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya