கிரேக்க தேசிய காற்பந்து அணி
கிரேக்க தேசிய காற்பந்து அணி (Greek national football team; கிரேக்க மொழி: Εθνική Ελλάδος, Ethniki Ellados), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் கிரீசு நாட்டின் சார்பாக விளையாடும் அணியாகும்; இதனை, கிரீசு நாட்டில் காற்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான எல்லெனிக் கால்பந்துக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. ஐரோப்பிய தேசிய காற்பந்து அணிகளில், சிறப்பான வெற்றிகளைப் பெற்ற அணிகளுள் கிரீசும் ஒன்றாகும்; ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக் கோப்பையை வென்ற ஒன்பது அணிகளில் இதுவும் ஒன்று. கால்பந்துக்கான பன்னாட்டுப் போட்டிகளில், நிரந்தரமாக சிறப்பான இடத்தை இந்த அணி பெற்றதில்லை. இவ்வணி வாகையர் பட்டம் வென்ற யூரோ 2004-க்கு முன்னர், உலகக்கோப்பை கால்பந்து 1994-ஆம் ஆண்டிலும், ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக்கு 1980-இலும் மட்டுமே தேர்வுபெற்றிருந்தனர். தமது இரண்டாவது பங்கேற்பிலேயே ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை 2004-இல் வென்றனர்; அப்போது, நடப்பு வாகையர்களாக இருந்த பிரான்ஸ் மற்றும் போட்டியை நடத்திய போர்த்துகல் ஆகிய வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றிகண்டது. அதன்பிறகு, ஒரு போட்டித் தொடரைத் தவிர்த்து அனைத்து முக்கியமான பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளுக்கும் (உலகக்கோப்பை கால்பந்து மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி) தகுதி பெற்றனர். யூரோ 2012 போட்டியில் காலிறுதியை எட்டினர். யூரோ 2004 வெற்றிக்குப் பிறகு, பிஃபா உலகத் தரவரிசையில் எப்போதும் 20 இடங்களுக்குள் இருந்து வருகின்றனர் (இடையில் நான்கு மாதங்கள் தவிர்த்து); மேலும், ஏப்ரல் - சூன் 2008 காலகட்டத்திலும், அக்டோபர் 2011-லும் அதிகபட்ச தரவரிசை இடமான எட்டாவது இடத்தை எட்டினர். குறிப்புதவிகள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia